<$BlogRSDURL$>

All writings like poems, stories, articles in Tamil and English

Sunday, June 20, 2004

அற்புதவிளக்கு 

அத்தியாயம் - 03

"லாரென்ஸ் ஆ·ப் அரேபியா" என்று ஒரு ஆங்கிலப் படம். வறண்ட அரேபியப் பாலவனத்தையும் அதன் மணற்புயலையும் தகிப்பையும் அற்புதமாக எடுத்துக் காட்டிய ஒரு படம். அதன் 'இண்டர்வல்'லில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து குளிர்பானங்கள் வாங்கிப் பருகி தங்கள் தாகங்களைத் தீர்த்துக் கொண்டார்களாம். ஏசி தியேட்டரில், அதுவும் ஒரு கும்பலுக்கே தாகம் எடுக்க வாய்ப்பில்லை. ஆனாலும் எப்படி?

அந்தப்படம் தகிப்பையும் வறட்சியையும் அவ்வளவு தத்ரூபமாக எடுத்துக் காட்டியது என்று சொல்லலாம். ஆனால் படம் பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு அதற்காக தாகம் எடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை. திரைப்படத்தில் ஒருவருக்கு பாம்பு கடித்து விட்டால் அதை லயித்துப் பார்க்கின்றவருக்கும் விஷம் ஏறுமா என்ன? ஆனாலும் இங்கே தாகம் எடுத்தது உண்மை. காரணம், படம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் தங்கள் மன அளவில் அரேபியாவின் பாலைவனத்துக்கே சென்றுவிட்டார்கள். அதன் தகிப்பையும் வறட்சியையும் அனுபவிக்க ஆரம்பித்து விட்டார்கள். அவர்கள் உடல்கள்தான் தியேட்டருக்குள் அமர்ந்திருந்தன. மனதின் நாக்குகளோ பாலைவன தாகத்தால் வறண்டன. அதுதான் உண்மை. 'ஆத்தா' படங்களை பார்த்துக் கொண்டிருந்த அக்காக்கள் பலருக்கு தியேட்டரிலேயே 'ஆத்தா' வந்து ஆட்டம் போட்டதாக செய்திகள் வந்ததன் பின்னணியில் உள்ள உண்மையும் இதுதான்.

இதிலிருந்து ஒரு முக்கியமான விஷயம் தெளிவாகிறது. நம்மை, அதாவது நம் உடலையும் உள்ளத்தையும், பாதிக்கின்ற உண்மைகள், நம்முடைய உடல் அமைப்பையே, நம்முடைய வாழ்க்கை முறையையே தலைகீழாக மாற்றிவிடுகின்ற உண்மைகள், நமக்கு வெளியில் இல்லை. பேருண்மை, மெகா உண்மை, மகா உண்மை எல்லாம் இதுதான் !

அப்படியெனில், நம் வாழ்வு இரண்டு விதமான உண்மைகளால் ஆக்கப்பட்டிருக்கிறது. ஒன்று நமக்கு வெளியே உள்ள உண்மை. அல்லது நிஜங்கள் என்று சொல்லலாம். உதாரணமாக, வாஜ்பாய் - அல்லது தினமணி ஸ்டைலில் 'வாஜபேயி' - என்பவர் இந்திய துணைக்கண்டத்தின் பிரதம மந்திரியாக இருக்கிறார் என்ற உண்மை. இப்படிப்பட்ட நிஜங்களினால் நமக்கு அதிகமான பிரயோஜனம் எதுவும் இல்லை. இன்னொரு உண்மை உள்ளது. அது நமக்கு உள்ளே உள்ள உண்மை. உண்மையான உண்மை. அல்லது உண்மைகளின் உண்மை. அதாவது நம் மனசு எதை உண்மை என்று நம்புகிறதோ அந்த உண்மை.

மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சியில், ஏசி தியேட்டரில் உட்கார்ந்து "லாரென்ஸ் ஆ·ப் அரேபியா" படத்தை பலர் பார்த்துக்கொண்டிருந்தார்கள் என்பது வெளி உண்மை. அறியப்பட்ட உண்மை. ஆனால் உண்மையில் அவர்கள் அரேபிய பாலைவனத்தின் தகிப்பால் தாகம் ஏற்பட்டு அதை குளிர்பானங்கள் குடித்துத் தீர்க்க முயன்றார்கள் என்பது அறியப்படாமலிருந்த உள்உண்மை. அதாவது நமது மனசு அல்லது நம்பிக்கை என்னும் பெரிய உண்மை.

ஒரு நாளிரவு நீங்கள் தனியாக இருக்கிறீர்கள். அப்போதுதான் ஜீ டி.வி.யில் 'ஹாரர் ஷோ' வேறு பார்த்து முடித்திருக்கிறீர்கள். இருட்டில் போக பயப்படும் ஆள்வேறு நீங்கள். அப்போது பின்னாலிருந்து ஒரு பயங்கரமான சப்தத்தோடு ஒரு கை உங்கள் தோளைத் தொடுகிறது. என்னாகும்? அவ்வளவுதான். உங்கள் இதயமே நின்று போகலாம். சரி, அப்படி நடக்கவில்லை. நீங்கள் உயிரோடுதான் இருக்கிறீர்கள். ஆனால் மிகவும் பயந்து என்னவோ ஏதோவென்று திரும்பிப் பார்க்கும்போது உங்கள் நண்பன் நின்று கொண்டு சிரிக்கிறான். சரி, இப்போது பேய் பிசாசு எதுவும் இல்லை என்பது நிரூபணமாகிவிட்டது. ஆனால் உங்கள் இதயத்துடிப்பு அதிகமானது, வியர்த்தது, படபடப்பு, எல்லாம் உண்மை. அதாவது ஒரு பொய்யை நம்பி, உங்கள் உடம்பு பாதிக்கப்பட்டது. அப்படித்தானே? ஆமாம். ஆனால், உண்மை என்ன என்று தெரிவதற்குமுன், அந்த பொய்தான் உங்கள் மனம் நம்பிய உண்மை. அதன் விளைவுகள்தான் வியர்வை, படபடப்பு, வேகமான இதயத்துடிப்பு எல்லாம்.

அதாவது, நாம் கண்ணால் பார்த்தது, காதால் கேட்டது, தொட்டு, முகர்ந்து, சுவைத்து இப்படியெல்லாம் உணரக்கூடிய உண்மைகளைவிட நாம் உண்மை என்று முழுமனதாக நம்புகின்ற விஷயங்கள்தான் நம்மையும் நம்முடைய வாழ்வையும் அதிகம் பாதிப்பதாக, மாற்றுவதாக, ஏன், நம்முடைய வாழ்வையே நிர்ணயிப்பதாக உள்ளது. மருந்து இல்லாத காலத்தில் கிராமத்து டாக்டர்கள் ஊசியில் 'மஞ்சத்தண்ணி'யை நிரப்பி ஊசி என்று போடுவதை நாம் அறிவோம். மருத்துவத்துவத் துறையில் டெக்னிகலாக இதற்கு ஒரு பெயரே வைத்துள்ளார்கள். இதை அவர்கள் 'ப்லேசிபோ எ·பக்ட்' என்று சொல்கிறார்கள்.

ஒரு டாக்டரும் அவர் நண்பரும் ஒரு காரில் எங்கோ உல்லாசப் பயணம் போய்க்கொண்டிருந்தார்களாம். அப்போது நண்பனுக்கு திடீரென்று பயங்கரமான தலைவலி வந்துவிட்டது. மாத்திரை எதாவது கொடு என்று டாக்டரின் உயிரைவாங்க ஆரம்பித்து விட்டான். (டாக்டருடைய வேலையை அவன் எடுத்துக்கொண்டு விட்டானாக்கும் என்று யாரோ முனுமுனுப்பது என் காதில் விழுகிறது)! டாக்டரும் எங்கெங்கோ தேடிஒரு மாத்திரையைக்கண்டு பிடித்து, ''இது ரொம்ப உசத்தியான மாத்திரை. இதை முழுங்கிடாதே. சப்பிக்கொண்டே இரு. தலைவலி போனவுடன் வாயைத்திற. மாத்திரையை நான் மறுபடி எடுத்துக்கொள்வேன். இது கரையாத மாத்திரை. கழுவி வேறு யாருக்காவது பயன் படுத்துவேன். யாரிடமும்சொல்லாதே'' என்று சொல்லி ஒரு மாத்திரையை நண்பனின் நாக்கில் வைத்து சப்பிக்கொள்ளச் சொன்னார்.

நண்பனும் சொன்னபடியே செய்ய, தலைவலி கொஞ்ச நேரத்திற்கெல்லாம் பறந்து போனது. வாயிலிருந்த மாத்திரையை எடுத்து டாக்டர் தன் விரல்களுக்கிடையில் வைத்துக்கொண்டாராம். ரொம்ப அற்புதமான மாத்திரையாக உள்ளது என்று நண்பர் அதை ரொம்ப புகழவும் மாத்திரையைக் காட்டினாராம் டாக்டர். அது டாக்டரின் சத்தைப் பித்தான்! இதுதான் 'ப்லேசிபோ எ·பக்ட்' என்பது.

உண்மையான மாத்திரைகளிலும் நமக்கு இந்த 'எ·பக்ட்'தான் வேலை செய்துகொண்டுள்ளது! ஆமாம். நாம் எப்போதும் போகும் ஒரு டாக்டர் அன்று ஊரில் இல்லாமல், வேறு ஒரு புது ஆளிடம் காட்ட நேரும்போது, அந்த புதுடாக்டர் நல்ல மாத்திரையையே நமக்கு கொடுத்தாலும், அது நமது நம்பிக்கையின்மையின் காரணமாக வேலை செய்யாது. நாம் உள்ளே விழுங்குகின்ற ஒவ்வொரு மாத்திரையும் நமது உடம்புக்குள் புகுகின்ற ஒரு அன்னியன் என்று டாக்டர் தீபக் சோப்ரா, எம்.டி. தனது "க்வாண்டம் ஹீலிங்" என்ற நூலில் கூறுகிறார். உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வெறும் தியானத்தினால் மட்டுமே கேன்சர் நோயாளிகளை எப்படி முழுமையாக குணப்படுத்தினார் என்ற 'கேஸ் ஹிஸ்டரி'தான் அந்த புத்தகம்! விஷயம் மாத்திரைகளில் இல்லை அவற்றை நம்பும் மனதில்தான் உள்ளது என்பதே அவருடைய வாதம். அவர் ஒரு மனசாட்சி உள்ள டாக்டர். அதனால்தான் 'குட்'டை அப்படிப்போட்டு உடைத்து விட்டார்.

நம்பிக்கை என்று சொல்லும்போது, அதுதான் இந்த உலகில் ஏற்பட்ட எல்லா முன்னேற்றங்களுக்கும் அடிப்படையாக இருந்துள்ளது. ஆழமான நம்பிக்கை இல்லாதவர்கள் வெற்றியடைந்ததாக உலகவரலாற்றில் ஒருவரைக்கூட காட்டமுடியாது. இறைவன் இருக்கின்றானா இல்லையா என்பதுகூட இறைவனைப் பொருத்த விஷயமல்ல. நம்மைப் பொருத்த விஷயம்தான். அதாவது நம்முடைய உள் உண்மைகளை, அதாவது நம்பிக்கையைப் பொருத்ததுதான் என்பதே இங்கே புரிந்து கொள்ளப்பட வேண்டிய விஷயம். அன்னை வேளாங்கன்னி மாதாகோவிலில் மெழுகுவர்த்தி ஏற்றுவதற்கு எந்த நம்பிக்கை காரணமாக இருக்கிறதோ அதே நம்பிக்கைதான் இன்னொருவரை திருப்பதி உண்டியலில் ஐநூறு ரூபாய் கட்டுக்களை போடவைக்கிறது.

ஒரு விஷயத்தில் நம்பிக்கை ஏற்படுவதற்கு அந்த விஷயத்தைப்பற்றிய அறிவு நமக்கு உதவலாம். ஆனால் நம்பிக்கை ஏற்படுவதற்கு இந்த அறிவு அவசியமா என்றால் இல்லவே இல்லை. ஒரு டாக்டரை நாம் நம்புவதற்கு மருத்துவ அறிவு நமக்கு அவசியமா என்ன? ஒரு ட்ரைவரை நம்பி பட்டப்பகலிலேயே பஸ்ஸில் தூங்கி ஜொள்வழிய அடுத்தவர்மேல் விழுவதற்கு நமக்கு ட்ரைவிங் பற்றிய அறிவு வேண்டுமா என்ன? இந்த உண்மையைப் புரிந்துகொண்டவன் வெற்றியின் ரகசியத்தையும் புரிந்து கொண்டவனாவான்.

திபெத்தில் தியானப் பயிற்சிகளில் ஈடுபடுகிறவர்களுக்கு ஒரு 'டெஸ்ட்' உண்டாம். பனிக்கட்டி உருகிய தண்ணீரில் தோய்த்தெடுத்த துணியை நிர்வாணமாக அமர்ந்திருக்கும் பயிற்சியாளரின் உடம்பில் போர்த்துவார்களாம். அவர் தன் உடம்பின் சூட்டை அதிகரித்து அந்த துணியை உலர்த்த வேண்டும்! இப்படியே நாள்பூரா செய்யப்படுமாம். யார் அதிகமான துணிகளை உலர்த்தி இருக்கிறாரோ அவரே வெற்றி பெற்றவராம்!(இந்த தகவலைப் படித்து மாமியார்கள் யாரும் வரன் கேட்டு திபெத்துக்குப் போய்விடவேண்டாம். ஏனெனில் இன்னொரு தகவலின்படி அந்த பயிற்சியாளர்கள் திருமணம் செய்து கொள்வதில்லையாம்)! மண்டை காயவைத்த இந்த பயிற்சியை நேரில் கண்டு 'காய்ந்து' போன தன் அனுபவத்தை அலெக்சாண்ட்ரா டேவிட் நீல் என்பவர் தனது "மேஜிக் அண்ட் மிஸ்ட்ரி இன் திபெத்" என்ற நூலில் கூறுகிறார்.

எல்லா மனிதனுக்கும் உயிர் உள்ளவரை உடம்பில் சூடு இருக்கத்தான் செய்யும். ஆனால் அந்த சூட்டில் கண்ணீர்த்துளி பட்டு லேசாக நனைந்த டிஷ்யூ பேப்பரைக்கூட காயவைக்க முடியாது என்பது நமக்குத் தெரியும். நூத்தி நாலு டிகிரி காய்ச்சலடிக்கும்போது கூடவா என்று கேட்கக்கூடாது. (இதன் காரணம் கண்ணீரின் வலிமை அல்ல.) பின் அந்த திபெத்திய துறவிகள் எப்படிச் செய்தார்கள்? தகிப்பை அவர்கள் மனதால் உருவாக்கினார்கள். பின் அதையே உடம்புக்கும் அனுப்பினார்கள். தங்களது ஒருமுகப்படுத்தப்பட்ட எண்ணத்தால் தம் உடம்புகளை நிறைத்தார்கள். அதுவும் இமயமலைச் சாரலில் !

எப்போதுமே பல வழிகளிலும் 'சூட்டை'த் தணித்துக் கொள்ளவிரும்பும் நமக்கும் அவர்களுக்கும்தான் எவ்வளவு வித்தியாசம்! ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். மனதின் சக்தியைப் புரிந்து கொண்டு அதை அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் அவர்களுக்கு 104 டிகிரி காய்ச்சலடித்தால் மருந்தையும் ஊசியையும் தேடி அவர்கள் ஓடப்போவதில்லை.

நம்பிக்கையில் இவ்வளவு விஷயங்கள் உள்ளன என்று தெரிந்தாலும் நம்பிக்கை வரமாட்டேன் என்கிறதே அதற்கு என்ன செய்வது என்று கேட்கிறீர்களா? இது ஒரு பொதுவான பிரச்சனைதான். இதற்கு ஒரு அருமையான தீர்வு இருக்கிறது. அது இதுதான் : நாம் எதை நம்ப வேண்டுமோ, அதை தற்போதைக்கு நம்பினாலும் நம்பாவிட்டாலும், திரும்பத் திரும்ப சொல்லிக்கொள்வது. அல்லது நினைத்துக்கொள்வது. இப்படித் திரும்பத் திரும்ப ஒரு காரியம் செய்வதால் என்ன நன்மை என்கிறீர்களா? பயங்கரமான நன்மை உண்டு. பொய்கூட உண்மையாகிவிடும் திரும்பத் திரும்ப சொல்வதால், செய்வதால். ஹிட்லர்கூட தனது சுயசரிதையில் இந்த விஷயத்தைப் பற்றி எழுதுகிறார். அவர் சொல்கிறார் : '' உண்மைக்கும் பொய்க்கும் ஒன்றும் பெரிய வித்தியாசம் கிடையாது. திரும்பத் திரும்பச் சொன்னால் பொய்யும் உண்மையாகிவிடும்.'' அந்த பைத்தியக்காரன் வெறிபிடித்த மாதிரி திரும்பத்திரும்பச் சொன்ன பொய்யை நம்பித்தானே உலகவரலாற்றின் மெகாபடுகொலைகள் நிகழ்த்தப்பட்டன?

திரும்பத் திரும்ப எதைச்சொல்கிறோமோ அது நமது ஆழ்மனதில் ஆழப்பதிந்துவிடுகிறது. அதற்கு ரொம்ப சக்தி உண்டு. அதனால் நம்மை ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும். நமது நம்பிக்கைகள் அங்கேதான் உட்கார்ந்துள்ளன. (விபரங்கள் மறந்து போயிருந்தால் மறுபடியும் இரண்டாம் அத்தியாயத்தைப் படிக்கவும்).

ஒருமுறை ஒரு சமயச் சொற்பொழிவாளர் ஒருவர் தனது அழகான குதிரையை கட்டிவைத்து விட்டு தேவாலயத்திற்குள் சென்றாராம். அப்போது அந்தப் பக்கமாக வந்த நமது பிரபலமான முல்லா அந்தக் குதிரையின் அருகில் சென்று அடடா என்ன அழகான குதிரை என்று அதன் அழகை வியந்து அதன் கழுத்தைத் தடவிக்கொடுத்தாராம். அப்போது அங்கு வந்த இன்னொருவன் "முல்லா இது உங்கள் குதிரையா?" என்றானாம்.

இவ்வளவு அழகான குதிரையை தன்னது இல்லையென்று எப்படிச் சொல்வது என்று யோசித்த முல்லா, "ஆமாம், என் குதிரைதான்" என்று முதல் பொய்யைச் சொன்னாராம். "அப்படியானால் இதை எனக்கு விற்றுவிடுகிறீர்களா?" என்றானாம் வந்தவன். முல்லாவுக்கு தர்ம சங்கடமாகிவிட்டது. யோசித்தார். அவன் வாங்க முடியாத அளவுக்கு ஒரு விலையைச் சொன்னால் போச்சு என்று அவருக்குத் தோன்றியது. உடனே "பத்தாயிரம் ரூபாய்" என்று சொல்லிவிட்டார். தன் குதிரைதான் என்ற பொய்யை காப்பாற்றி ஆகவேண்டுமே?

ஆனால் வந்தவனோ, "பத்தாயிரம்தானே, சரி, இந்த அற்புதமான குதிரைக்கு அந்த விலை சரிதான்" என்று சொல்லி, உடனே பத்தாயிரம் ரூபாயை எடுத்துக்கொடுத்தானாம். முல்லா யோசிக்க ஆரம்பித்தார். பத்தாயிரம் ரூபாய். சும்மா வருகிறது. உள்ளேபோன குதிரையின் சொந்தக்காரனோ தூங்குகிறான் போலுள்ளது. விற்றுவிடலாம் என்று முடிவு செய்து குதிரையை அவிழ்த்து கொடுத்தனுப்பினார்.

அவன் குதிரையோடு போய்விட்டான். பணத்தை எண்ணி பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டிருந்த நேரத்தில் உள்ளே போன குதிரையின் சொந்தக்காரன் வெளியே வந்தானாம். யோசிக்கக்கூட நேரமில்லாத சூழ்நிலையில் உடனே முல்லா தனது வாய்க்குள் கொஞ்சம் புல்லைப் போட்டுக்கொண்டு, தன் கழுத்தைச் சுற்றி கயிற்றைகட்டிக் கொண்டாராம். சொந்தக்காரனோ, பயந்தும் குழம்பியும், முல்லாவிடம் வந்து, "என் குதிரை எங்கே? நீங்கள் யார்?" என்றானாம். அதற்கு முல்லா," நான்தான் உன்குதிரை. நான் விபச்சாரம் செய்ததால் இறைவன் என்மீது கோபித்து என்னைக் குதிரையாக்கிவிட்டான். இப்போது எனக்கு சாபவிமோசனம் கிடைத்து விட்டது. மறுபடியும் மனிதனாகிவிட்டேன்" என்றாராம்.

அதைக்கேட்ட அந்த சொற்பொழிவாளனுக்கு ரொம்ப பயமாகிவிட்டது. தெய்வக்கோபம் ஒரு மனிதனை மிருகமாக்கிவிடுமா? உடனே மண்டி போட்டு இறைவனிடம் தன் பாபங்களுக்காக தன்னை மன்னிக்கும்படி உருக்கமாக வேண்டினானாம். பிறகு முல்லாவைப் பார்த்து, " சகோதரனே, நடந்தது நடந்துவிட்டது. இனி நீங்கள் உங்கள் ஊருக்குப் போய்விடுங்கள். நான் சந்தையில் போய் வேறு குதிரை வாங்கிக்கொள்கிறேன்." என்று சொல்லி சந்தைக்குச் சென்றானாம்.

அங்கே போனால் சந்தையில் அவனுடைய குதிரையே நின்று கொண்டிருந்தது விற்கப்படுவதற்காக! அதைப்பார்த்ததும் அவனுக்கு பயம் பிடித்துக்கொண்டது. குதிரையின் அருகில் சென்று மெதுவாக அதன் காதில், "என்ன முல்லா, மறுபடியுமா? இவ்வளவு சீக்கிரமாகவா?" என்றானாம்!

திரும்பத் திரும்ப ஒரு விஷயத்தைச் சொல்வதால் அல்லது செய்வதால் அது எவ்வளவு சக்தி மிக்கதாக ஆகிவிடுகிறது என்பதை விளங்கிக்கொள்வதற்கு இந்தக் கதை நமக்கு உதவும். இந்த சக்தியை வளர்த்துக் கொள்வதற்காகத்தான் எமிலிகூ என்ற உளவியலாளர், வெற்றி பெற விரும்பும் மனிதன் ஒவ்வொருவனும் ஒவ்வொரு நாளும் ''நான் எல்லாவிதத்திலும் ஒவ்வொரு நாளும் சிறப்பாக முன்னேறிக் கொண்டிருக்கிறேன்'' என்ற வாக்கியத்தை சொல்லிக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

ஆக, நம்பிக்கையைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் அது திரும்பத் திரும்ப சொல்லப்படுவதால் அல்லது செய்யப்படுவதால் உண்டாக்கப்படுகிறது என்பதுதான். நமது அம்மா அப்பாக்கள்கூட இவ்வாறு ஏற்படுத்தப்பட்ட நம்பிக்கைகள்தான். அவர்கள்தான் உண்மையான பெற்றோர் என்பதில் சந்தேகம் கிடையாதென்றாலும், இந்த ஆள்தான் நமது அப்பா என்று எப்படித் தெரியும்? நம் அம்மா ஒரே ஒருமுறை ஒரு ஆளைக் காட்டி இவர்தான் அப்பா என்று சொல்லிவிடுவதால் அவர்தான் அப்பா என்று ஆகிவிடாது. ''அப்பாவெப்பாரு அப்பாவெப்பாரு'' என்று எத்தனை ஆயிரம் முறை நம்மிடம் சொல்லப்பட்டது என்பதற்குக் கணக்கே கிடையாது. இப்படிச் செய்யப்படுவதனால்தான் நமது நம்பிக்கை வலுவடைகிறது. எந்த அளவுக்கென்றால் அந்த நம்பிக்கைக்காக நமது உயிரைக்கூட துச்சமாக மதிக்கும் அளவுக்கு நாம் போகிறோம்.

இந்த காரணத்தினால்தான் நமது லட்சியங்களை எழுதி வைத்து அதை தினமும் அல்லது அடிக்கடி பலமுறை படித்துப் பார்க்கவேண்டும் என்று சொல்லப்படுகிறது. இப்படிச் செய்வது ஒருவகையான ஹிப்னாடிஸம் போல செயல்படுகிறது. ஒருவகை என்ன, அதேதான். இதற்கு 'ஆட்டோ ஹிப்னாட்டிஸம்' அல்லது 'ஆட்டோ சஜஷன்' என்று பெயர். அதாவது நம்மை நாமே 'ஹிப்னடைஸ்' செய்து கொள்வது. நம்மையும் அறியாமல் நமது வாழ்வின் பெரும்பகுதி இப்படிப்பட்ட ஹிப்னாடிக் தாக்கங்களினால்தான் நகர்ந்து கொண்டிருக்கிறது.
ஒரு அழகான இளைஞன். கோட்டெல்லாம் போட்டு 'டை'யெல்லாம் கட்டியவன். ஒரு அழகான குதிரையின் மீது அல்லது காரில் வந்து ஒரு இடத்தில் நிறுத்தி ஒரு வில்ஸ் ·பில்டர் சிகரெட்டை பற்றவைக்கிறான். அவன் பற்ற வைக்கும் 'அழகை' தூரத்தில் இருந்து ஒரு உண்மையான அழகி பார்த்து பெருமூச்செறிகிறாள். (அது சிகரெட்டுக்காக அல்ல).

இது ஒரு விளம்பரம் என்றால் இது சப்தம் போடாமல் ஒரு பயங்கரமான வேலையைச் செய்கிறது. என்றாவது ஒரு நாள், உதாரணமாக, கல்யாணத்தின்போது, நாமும் கோட்டெல்லாம் போட்டு 'டை' கட்டும்போது, அல்லது கட்டி விடப்படும்போது, நம்மை நாமே கண்ணாடியில் பார்த்து ரசிக்கும்போது நம்மையும் அறியாமல் இப்போது ஒரு வில்ஸ்·பில்டர் குடித்தால் எப்படி இருக்கும் என்று தோன்றும்.

இதுதான் விளம்பரத்தின் வெற்றி. ஒன்றுமே பேசாமல் ஒரு எண்ணத்தை உங்களுக்குள் விதைத்துவிட்டது. இதுதான் suggestion என்பது. அந்த 'சஜெஷன்' உள்ளே போய் தேவைப்படும் சமயத்தில் வேலை செய்கிறது. இப்படிப்பட்ட 'மாஸ் ஹிப்னாட்டி'ஸ தாக்கங்களினால்தான் நமது வாழ்வே கட்டுண்டுள்ளது என்று சொன்னால் அது மிகையல்ல.

நமக்குத் தேவையில்லாததை, இன்னும் சொல்லப்போனால் நம்மை பாதிக்கின்ற ஒன்றையே 'சஜெஷன்' மூலமாக ஒரு கம்பெனி விளம்பரம் என்ற பெயரில் மெளனமாக நமக்குள் திணிக்கும்போது, இது சாத்தியம் என்னும்போது, நமக்குத் தேவையான விஷயங்களை, எண்ணங்களை, நம்பிக்கைகளை ஏன் நாம் நாமாகவே நமக்குள் திணித்துக்கொள்ளக் கூடாது?

ஒரு கணவனுக்கு மனைவியோடு தாம்பத்ய உறவு கொள்வதில் ஆர்வமே இல்லாமல் இருந்ததாம். ஒரு உளவியல் மருத்துவரின் உதவியை அவன் நாடினானாம். அவர் சொன்ன உபாயத்தை, மந்திரத்தை தினமும் அரைமணி நேரம் தனியறையில் புகுந்துகொண்டு சொல்லவேண்டும். அவனும் அதைச் செய்ய ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலேயே நிலைமை தலைகீழாக மாறியதாம். மனைவி அசந்து போகிற மாதிரி - உடலாலும்தான் - உறவுகொள்ள ஆரம்பித்தானாம்.
மனைவிக்கு ரொம்ப ஆச்சரியம். இதற்கெல்லாம் காரணம் இவன் தனியாக ஒரு அறையில் புகுந்துகொண்டு ஏதோ சொல்வதுதான் என்று விளங்கிவிட்டது. அந்த அற்புத மந்திரம் என்ன என்று தெரிந்துகொள்ள அவளுக்கு மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. ஒரு நாள் கணவனுக்குத் தெரியாமல் அவன் 'தியானம்' செய்துகொண்டிருந்த அறையின் வாசலில் பூனைமாதிரி போய் நின்றுகொண்டு என்ன சொல்கிறான் என்று தன் அங்கம் முழுவதையும் செவியாக்கி உற்று கேட்க ஆரம்பித்தாள். கணவன் சொல்லிக்கொண்டிருந்தான் : '' இவள் என் மனைவி இல்லை. இவள் என் மனைவி இல்லை ''.

எவ்வளவு சக்திவாய்ந்த மந்திரம்! அதற்குப்பெயர்தான் 'ஆட்டோ சஜஷன்'. நமக்கு நாமே செய்து கொள்ளும் ஹிப்னாட்டிஸம். இதை நாம் செய்து கொண்டுதான் ஆகவேண்டும். மனைவிகளை திருப்திப்படுத்த அல்ல. வெற்றியை நாம் அடைய விரும்பினால்.

'ஆட்டோ சஜஷன்' செய்யும் முறை ஒன்றும் கம்பசூத்திரமில்லை. திரும்பத்திரும்ப நம்பிக்கையை ஏற்படுத்தும் ஒரு வார்த்தையை, எண்ணத்தை நமக்கு நாமே சொல்லிக்கொள்வதுதான். ''எனக்கு ஞாபகமே வராது'' என்று நம் ஞாபகசக்திக் குறைவை மற்றவரிடம் சொல்லிக்காட்டி 'பறை'யடித்து பெருமைப்படும்போது, நமது காதுக்குள்ளும் அந்த வார்த்தைகள் விழுந்து அவை மறுபடி நமது மூளைக்குள் ஒரு பதிவை ஏற்படுத்தி நம்மை மேலும் மேலும் மறந்துபோகக்கூடியவனாக மாற்றுவதுபோல, நமக்கு நல்லது செய்யும் எண்ணங்களை மறுபடி மறுபடி சொல்வதன் மூலம் அந்த வார்த்தைக்குப் பின்னால் இருக்கும் நம்பிக்கையை, எண்ணத்தை வலுவாக ஆக்குகிறோம். வலுவான பதிவாக நமது ஆழ்மனதிற்குள் அனுப்புகிறோம்.

இந்த அளவுக்கு ஒரு நம்பிக்கையை வலுப்படுத்திய பிறகு அது அற்புதங்களை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமென்ன? ஆனால் நாம் எப்போதுமே நமது தவறுகளை, தீவிரமில்லாத தன்மையை நியாயப்படுத்துகின்ற பழக்கம் உடையவர்களாக இருக்கிறோம்.

இரண்டு நண்பர்கள் ஆர்மியில் வேலை பார்த்தார்களாம். அவர்கள் எப்போதும் சேர்ந்தேதான் குடிப்பார்களாம். திடீரென்று ஒருவனை இடமாற்றம் செய்துவிட்டார்களாம். அதிலிருந்து தனியான நண்பன் இரண்டு க்ளாஸ்களை வைத்துக்கொண்டு ஒன்று தனக்காக என்றும் இன்னொன்று தன் நண்பனுக்காகவும் என்று சொல்லி குடிப்பானாம். ஒரு நாள் ஒரே ஒரு க்ளாஸ் மட்டும் வைத்துக் குடித்துக்கொண்டிருந்தானாம். என்ன காரணம் என்று கேட்டதற்கு, ''குடியை நான் நிறுத்திவிட்டேன். ஆனால் என் நண்பன்தான் பாவம், இன்னும் அவனால் நிறுத்தமுடியவில்லை'' என்றானாம்!

இதுதான் நியாயப்படுத்துதல். நான் நல்ல நம்பிக்கையோடுதான் இருந்தேன் ஆனாலும் நடக்கவில்லையே என்று கூறுபவர் நிறையபேர் உண்டு. இந்த நியாயப்படுத்துகின்ற பழக்கத்தினால் அவர்களும் தோற்பதோடு அடுத்தவரையும் வெற்றியடையாமல் தடுக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களிடம் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அதாவது இப்படிப்பட்டவர்களுடைய நட்பை தவிர்க்க வேண்டும். அவர்கள் நம்முடைய ஆத்ம நண்பர்களாகவே இருந்தாலும் சரி.

அதாவது அவர்களுடைய முகத்திலேயே முழிக்கக்கூடாது என்று சொல்ல வரவில்லை. எதையுமே சரியாகப் புரிந்துகொள்ளாததால்தான் பிரச்சனையே வருகிறது. ''என் மனைவி ஒரு தேவதை'' என்றானாம் ஒருவன். ''உன்பாடு பரவாயில்லை. என் மனைவி இன்னும் உயிரோடு இருக்கிறாள்'' என்றானாம் இன்னொருவன்! இப்படியா புரிந்துகொள்வது? நான் சொல்லவருவது நமது நம்பிக்கையைக் கெடுக்கின்ற எந்த எண்ணத்தையும் அவர்களிடம் இருந்து எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதுதான். அவர்கள் எவ்வளவு நல்ல எண்ணத்தின் பேரில் சொல்லியிருந்தாலும் அதன் விளைவு நமக்கு கெடுதியாகத்தான் முடியும். சினம் கொண்ட சிறுத்தையை நீங்கள் கொஞ்சுவதற்காக நெருங்கினாலும் அல்லது கொல்லுவதற்காகப் போனாலும் விளைவு ஒரேமாதிரியாகத்தானே இருக்கும்? அதைப்போல.

தேவைப்படுகின்ற அளவு நம்பிக்கை இல்லாமல் அதாவது ஆழமான நம்பிக்கை இல்லாமல் ஒரு காரியத்தில் ஈடுபடுவது அடுப்பையே பற்ற வைக்காமல் ரொட்டியோ தோசையோ சுடுவதற்கு முயற்சி செய்வதைப் போன்றதாகும். அதில் வெற்றி கிடைக்குமா கிடைக்காதா என்று நான் சொல்லவேண்டியதே இல்லை. மனதில் வறுமையை வைத்துக்கொண்டு செல்வந்தனாக முடியாது. மனதில் வெறுப்பை வைத்துக்கொண்டு காதல் செய்ய முடியாது.

புகழ்பெற்ற ஓவியர் பிகாசோ வீட்டில் ஏதோ ஒரு பொருள் திருட்டுப்போய்விட்டதாம். போலீஸ் வந்து விசாரித்தபோது பிகாசோ, ''என்னால் திருடனைப் பற்றி எதுவும் வார்த்தையால் சொல்ல முடியாது. ஆனால் திருடிக்கொண்டு போகும்போது அவனை நான் பார்த்தேன். வேண்டுமானால் வரைந்து தருகிறேன். அதை வைத்து அவனை பிடிக்க முயற்சி செய்யுங்கள்'' என்றாராம். அவர் வரைந்து கொடுத்த ஓவியத்தை வைத்து பலபேரை கைது செய்தார்களாம். மனிதர்களை மட்டுமல்ல. ஒரு ரோபோ மற்றும் ·ப்ரான்ஸ் நாட்டு ஈ·பிள் டவரையும் கைது பண்ண வேண்டியிருந்ததாம்! இது உண்மையில் நடந்ததா என்று கேட்கக்கூடாது. பிகாசோவின் ஓவியங்கள் அவ்வளவு குழப்பத்தை ஏற்படுத்தக்கூடியவை என்ற விமர்சனமே இதில் உள்ள செய்தி.

இப்படித் தெளிவில்லாமல் குழப்பமாக இருந்தால் எந்த நம்பிக்கையாலும் பயன் இல்லை. உணர்ச்சியோடும் தெளிவான நம்பிக்கையோடும் ஆழ்மனதிற்குள் அனுப்பப்படுகின்ற எண்ணங்கள் மட்டுமே வெற்றியாக நமக்குத் திரும்பிவரும்.

ஒருவகையில் பார்த்தால் நாமெல்லாம் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைகின்ற ஜாதி இல்லை. நெய்யை வைத்துக்கொண்டே நெய்க்கு அலைபவர்கள்! நாம்தான் அலாவுதீன். இதுதான் அலாவுதீனின் அற்புதவிளக்கு. இதை திரும்பத்திரும்ப தேய்ப்பதால் நிச்சயம் உள்ளே உள்ள வெற்றி எனும் 'ஜின்' புறப்பட்டு வெளியில் வரும். மிரிண்டா, பெப்ஸி போன்ற எந்த குளிர்பானத்தையும் குடித்துவிட்டு மல்லாந்துவிடாது அது.
|

Monday, June 07, 2004

சொல்லாத ஒரு சொல் 

குளிர்சாதனப் பெட்டியிலிருந்து
கட்டிதட்டிப்போன சொற்களை உடைத்து
சாதாரண சொற்களோடு கலந்து
முகம் கழுவிக் கொண்டேன் !

சொற்களைக் கொதிக்க வைத்து
பதமாகத் தலையில் ஊற்றி
குளித்துக்கொண்டேன் அடிக்கடி !

சொற்களைச் சேர்த்து சேர்த்து
கூடுகட்டி வீடுகட்டி
உறங்கி வந்தேன் பல சமயம் !

சொற்களை நசித்துருட்டி
மென்று தின்று அசைபோட்டு
கிறங்கி வந்தேன் சில சமயம் !

கைவிரல்வழி கணிணிக்கு
கணிணிவழி கண்களுக்கு
கதைகளாய்
கவிதைகளாய்
காவியமாய்
கூடிப்போயின
கிலோபைட்டுகள் !

கள்ளின் போதை தலைக்கு
சொல்லின் போதை கலைக்கு
தெரியும்
என்றாலும் பிடிக்கவில்லை
இந்த அலுப்பூட்டும் விளையாட்டு
வேண்டுமானால் நீ சொல்லிக்கொள்
ஆக்கப்பூர்வமான விளையாட்டென்று !

சென்றுகொண்டிருக்கின்றன
சொற்களின் ஊர்வலங்கள்
போகுமிடம் அறியாமல் !

தின்று கொண்டிருக்கின்றன
சொற்களின் புழுக்கள்
எனது நாட்களை !

மூச்சுத் திணற வைக்கிறது
நீச்சல் தெரியாத என்னை
கடலுக்குள் கருங்கல்லாய் கிடக்கும்
உன் மௌனம் !

கருங்கல்லுக்குச் சிறகுகள் முளைக்கும்
நம்பிக்கையில் நீந்திக்கொண்டிருக்கின்றன
என் சொற்கள் !

யாருக்கும் தெரியாமல்
நீ விழுங்கிய சொற்களின்
உயிரையும் மெய்யையும்
படம்பிடித்து வைத்துள்ளன
என் எக்ஸ்ரே கண்கள் !

என் குரல்கேட்டவுடன்
நீ கீழே வைத்த ரிஸீவர்
என்னிடம் சொன்ன செய்திகள்
ஏராளம் !

நீ துப்பிய எச்சிலின்
நறுமணத்தை முகர்ந்துகொண்டிருக்கின்றன
என் சொற்கள் !

சொன்னசொல் தவறாத நீ
சொல்லாத ஒரு சொல்லுக்காக
காத்திருக்கின்றன இன்னும்
என் சொற்கள் !

கடைசி மூச்சை
கண்ணியப்படுத்தும்
உன் அந்த சொல்லுக்காக !

(வெள்ளை ரோஜாவுக்கு)
|

Saturday, June 05, 2004

வெற்றியின் முகங்கள் 

அத்தியாயம் - இரண்டு

எல்லோருமே வெற்றியடைய ஆசைப்படுகிறோம். அது இயற்கைதான். அதற்கு முன் வெற்றியை அடைய நாம் நம்மைத் தயார்படுத்திக் கொண்டோமா என்றால் கிடையாது. சும்மா ஆசைப்படுவதற்காகவெல்லாம் வெற்றி நம்மை வந்தடையாது. வெற்றிக்கான விலையைக் கொடுத்துத்தான் ஆகவேண்டும். அதற்குமுன் நமது மனதைப் பற்றிய ஒரு அடிப்படை விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். இது மனதைப்பற்றிய பாலபாடம். இது தெரியாமல் எதுவுமே செய்யமுடியாது என்பதால் இதை இங்கேயே சொல்லிவிடுகிறேன்.

பயப்படவேண்டாம். ஒன்றும் கஷ்டமானதல்ல. நம் அனைவருக்கும் மனது என்று ஒன்று இருக்கிறது. அது மூளையில் இருக்கிறதா அல்லது இதயத்துக்குள் ஒளிந்திருக்கிறதா என்ற ஆராய்ச்சியெல்லாம் தேவையில்லை. மனம் இருக்கிறது. அது நமக்குத் தெரியும். நமது சிந்தனை, கற்பனை, எண்ணம், கவலை, பயம், குழப்பம், தெளிவு, ஞானம் இன்னபிற எல்லாம் அங்கிருந்துதான் கிளம்புகின்றன. சரியா?

சரி, இப்போ இந்த மனத்தை உளவியலாளர்கள் மூன்று பகுதிகளாக பிரித்திருக்கிறார்கள். அவர்கள் எத்தனை பகுதிகளாகப் பிரித்தால் நமக்கென்ன என்கிறீர்களா? அப்படியில்லை. அந்த மூன்று பகுதிகளுக்கும் வெற்றிக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. இன்னும் சொல்லப்போனால் இந்த மூன்று பகுதிகளையும் பயன்படுத்துபவர்களுக்குத்தான் வெற்றியே. உடனே ஒரு கேள்வியைத் தூக்கிக்கொண்டு குதிப்பீர்கள். தெரியும். அப்படியானால், மனோவியல் என்ற துறை இந்த உலகத்திற்கு வருவதற்குமுன் வெற்றி பெற்றவர்களெல்லாம் எப்படி அடைந்தார்கள்?

நல்ல கேள்விதான். ஆனால் அவர்களும் மூன்றையும் பயன்படுத்தித்தான் வெற்றி பெற்றார்கள். ஆனால் அவர்களுக்குத் தெரியாமலே. நாம் தெரிந்தே பயன்படுத்த வேண்டும். இதுதான் வித்தியாசம். அதாவது இங்க்லீஷ் கான்வென்ட்டில் படிக்கும் எல்.கே.ஜீ. யூ.கே.ஜீ. குழந்தைகள் ஆங்கிலத்தில் வெளுத்துக்கட்டும். அடிப்படை இலக்கணம் தெரியாமலே. பழக்கத்தினால். பயிற்சியினால். ஆனால் ப்ளஸ்ட்டூ அல்லது டிகிரி படிக்கும் நாமோ சப்ஜெக்ட், வெர்ப், அட்ஜெக்டிவ் என்று மாரடித்துக்கொண்டிருப்போம். அப்போதும்கூட ஆங்கிலம் வராது.

ஆனால் ஒருமுறை தெளிவாக அடிப்படை புரிந்துவிட்டதென்றால் அந்த அஸ்திவாரத்தை எந்த குண்டு வைத்தும் தகர்க்கவே முடியாது. கஷ்டப்பட்டு ஆங்கிலம் வந்தபின்பு அது போகவே போகாது. நிலையான செல்வமாகிவிடும். அதைப்போலத்தான் மனதைப்பற்றிய அறிவும் தெளிவும். சரி இப்போது மனதின் பாகங்களுக்கு வருவோம்.

மனிதமனது என்பது மூன்று பகுதிகளாக இருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். ஒன்று, வெளிமனது. அதாவது நமக்குத் தெரிந்த மனது. அதாவது நமது விழிப்பு நிலையில் ஐம்புலன்களாலும் ஏற்படும் அனுபவங்களை உணர்கின்ற மனது. நாம் விழித்துக்கொண்டிருக்கும்போது நாம் செய்கின்ற அல்லது நமக்கு செய்யப்படுகின்ற எல்லாவற்றையும் புரிந்துகொள்கின்ற மனது.

இரண்டாவது, உள்மனது அல்லது ஆழ்மனது. இது கொஞ்சம் கீழே உள்ள மிக முக்கியமான பகுதி. அதாவது வெளிமனதைவிட முக்கியமானது. இந்த மனது எவ்வளவு வேலைகளைச் செய்கிறது என்று பட்டியலிட முடியாது. அவ்வளவு செய்கிறது. மிகமிக முக்கியமான வேலைகளையெல்லாம் இதுதான் செய்கிறது.

நம்முடைய வாழ்வே இதன் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல. உதாரணமாக, நம்முடைய இதயத்தின் துடிப்பு, மூச்சோட்டம், உணவு ஜீரணமாவது போன்ற விஷயங்களை இதுதான் கவனித்துக்கொள்கிறது. இதயமே இப்போது நீ துடிப்பதை நிறுத்து, மூச்சே இன்னும் அரைமணி நேரத்துக்கு நீ ஓடக்கூடாது என்றெல்லாம் நம்மால் சொல்லமுடியாது. இவைகளெல்லாம் வெளிமனதின் சமாச்சாரங்கள் அல்ல. ஒரு நிமிடத்துக்குக்கூட இவற்றை நம் கட்டுப்பாட்டில் நாம் வைக்க முடியாது. எனவே இயற்கையே நமக்கு இதையெல்லாம் கவனித்துக்கொள்வதற்காக ஆழ்மனதைக் கொடுத்துள்ளது.

தூங்கும்போது, கில்லட்டினில் தலைவைத்து வெட்டப்படுவது மாதிரியோ அல்லது நிர்வாணமாக பறப்பது மாதிரியோ கனவு வருவது இந்த ஏரியாவிலிருந்துதான். மறந்துபோனதெல்லாம் ஞாபகம் வருவதும் இந்த ஏரியாவிலிருந்துதான். அதாவது நமது நினைவாற்றல் இருப்பது இங்குதான். நிறைய குப்பைகளும் கொஞ்சம் குண்டுமணிகளும் சேர்ந்திருப்பதும் இங்குதான்.

நமது ஆழ்மனதைப் பற்றிய இன்னொரு முக்கியமான செய்தி உள்ளது. அதாவது அதற்கு அறிவே கிடையாது. நமக்கும் அப்படித்தானே என்கிறீர்களா. நான் பகுத்தறிவைச் சொல்கிறேன். ஆம். ஆழ்மனது ஒரு ஞானி மாதிரி. சொல்வதையெல்லாம் ஏற்றுக்கொள்ளும். அல்லது ஒரு குழந்தை மாதிரி. சொல்வதையெல்லாம் நம்பும். இது நல்லது, இது கெட்டது, இது சரி, இது தவறு என்றெல்லாம் சொல்லாது. நினைக்காது. வாதம் செய்யாது. ரொம்ப சமர்த்துப் பிள்ளை. எது கொடுத்தாலும் வாங்கிக்கொண்டு அதை வைத்து கட்டும்.

ஒரு ஏழை ''நான் இன்னும் ஒரு வருடத்தில் கோடீஸ்வரனாவேன்'' என்று அதற்குள் ஒரு கருத்தை 'ஸ்ட்ராங்'காகப் போட்டால் அதை உடனே மரியாதையுடன் ஏற்றுக்கொண்டு அதன்படியே அவனை ஆக்கிவிடும். ஹிப்னாடிசம் பண்ணும்போது, செய்பவர் ஒரு பழுக்கக் காய்ச்சிய இரும்பு என்று சொல்லி ஒரு பென்சில் முனையை செய்யப்படுபவரின் நெற்றியில் வைத்தால் நெற்றியில் முனை வைத்த இடம் பொசுங்கிவிடும். காரணம், செய்யப்பட்டவரின் ஆழ்மனது சொல்லப்பட்ட பழுக்கக்காய்ச்சிய பொய்யை உண்மை என்று நம்பி செயல்படுவதுதான்.

இன்னொரு முக்கியமான விஷயம். உங்கள் ஆழ்மனதில் உங்களுக்குத் தே¨வாயானதை நீங்கள் போட்டுக்கொண்டே இருக்க வேண்டும். இல்லையெனில் கவலை, பயம் 'ஈகோ' போன்ற உங்களுக்குத் தேவையில்லாததை, தீங்கு செய்வதையெல்லாம் அதுவே போட்டுக்கொள்ளும். போட்டுக்கொண்டே இருக்கும்.

·ப்ரெட்ரிக் நீட்சே என்று ஒரு தத்துவவாதி இருந்தார். அவர் கடைசியில் பைத்தியம் பிடித்து கொஞ்சநாள் மனநல மருத்துவ மனையில் இருந்தார். இதற்கு அவர் தத்துவவாதியாக இருந்தது காரணமல்ல. அவரின் தனிமைதான் காரணம். அவர் ரொம்ப ஈகோ கொண்டவர். அதாவது ரொம்ப திமிர் பிடித்தவர். யாரையும்விட தான் உசத்தி என்று எண்ணியவர். அதனால் அவரோடு யாரும் பழகுவதில்லை. எந்தப்பெண்ணும் அவரைத் திருமணம் செய்துகொள்ள முன்வரவில்லை. வாட்டிய தனிமை அவரை பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு அனுப்பியது.

எல்லாவற்றையும் தற்காலிகமாக மறந்திருந்த அவர் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் மறக்காமல் ஞாபகம் வைத்திருந்தார். அதுதான் அவர் கையெழுத்துப் போடும் முறை. அவர் எப்போதுமே ''இயேசுவின் எதிரி ·ப்ரெட்ரிக் நீட்சே'' என்றுதான் கையொப்பமிடுவார். அவர் பைத்தியமாக இருந்தபோதும்கூட அப்படித்தான் கையொப்பமிட்டாராம்! காரணம் இயேசுவின் மீது கொண்டிருந்த ஆழமான வெறுப்பு அல்லது பொறாமை. அவர் அரேபியாவில் பிறந்திருந்தால் ''முகமதுவின் எதிரி'' என்றோ இந்தியாவில் பிறந்திருந்தால் ''புத்தரின் எதிரி'' என்றோதான் கையெழுத்து போட்டிருப்பார் நிச்சயம். அவர் அப்படிச் செய்ததற்குக் காரணம் அவர் ஆழ்மனதில் அந்த வெறுப்பு பதிந்திருந்ததுதான். எனவே ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஆழ்மனது ரொம்ப சக்திவாய்ந்தது. ஆபத்தானதும்கூட. ஜாக்கிரதை.

ஆனால் இதே ஆழ்மனதுதான் நமக்குத் தேவையான எல்லா சக்திகளையும் தரும் ஒரு இடமாகவும், எல்லா வழிகளையும் காட்டும் ஒரு வழிகாட்டியாகவும் உள்ளது. இதனுள்ளே ஒரு தகவலை, நம்பிக்கையை எப்படி அனுப்புவது அதன் மூலமாக எப்படி வெற்றியை அடைவது என்பது பற்றி பின்னால் பார்க்க இருக்கிறோம்.

இதற்கு அடுத்தபடியாக ஒரு மிகமுக்கியமான பகுதி உள்ளது. அதுதான் பிரபஞ்ச மனம். அல்லாஹ்வின் இருக்கையான அர்ஷ் அல்லது விஷ்ணு சயனிக்கின்ற பாற்கடல் அல்லது வெண்தாமரை. எதுவேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள். அங்கே சயனித்துக் கொண்டிருக்கிற கடவுளை அவ்வப்போது எழுப்பி நமக்கான தேவைகளை ஆசைகளை அவரிடம் ஒப்படைத்தால்தான் அவற்றின் தகுதிகளை, தீவிரத்தை, நியாயங்களைப் பொருத்து அவர் அவற்றை நிறைவேற்றித் தருவார். அவரை மரியாதையாக எழுப்புவது எப்படி என்று தெரிந்துகொள்வதுதான் வெற்றியின் ரகசியங்களை அறிந்துகொள்வதென்பது.

எதற்கும் இந்த பகுதி பற்றியும் சில உதாரணங்களைப் பார்ப்பது தெளிவு தரும் என்று நினைக்கிறேன். கணித மேதை ராமானுஜம் வாழ்வில் ஒரு நிகழ்ச்சி. ராமானுஜம் பொதுவாகவே தனக்கு கணக்கிற்கான விடைகளை அம்மன்தான் - திரைப்படமல்ல - கொண்டுவந்து தருவதாகச் சொன்னார். அவர் இங்கிலாந்தில் நோயுற்று ஆஸ்பத்திரியில் படுத்திருக்கிறார். அவரைப்பார்க்க அவரை இங்கிலாந்துக்கு அழைத்து வந்த இன்னொரு கணித மேதையான ஹார்டி வருகிறார்.

ஆஸ்பத்திரியில் ஒரு நோயாளியை நாம் பார்க்கப்போனால் என்ன பேசுவோம்? நலம் விசாரிப்போம். ஹார்டி அதெல்லாம் செய்யவில்லை. ராமானுஜத்தைப் பார்த்தவுடனேயே, ''நான் ஒரு டாக்சியில் வந்தேன். அதன் நம்பர் - என்று சொல்லி ஒரு நம்பரைச் சொல்கிறார். 1742 என்று வைத்துக்கொள்ளுங்களேன் - இந்த நம்பர் எனக்குப் பிடிக்கவில்லை'' என்று கூறுகிறார்! என்ன அற்புதமான ஒரு நலம் விசாரிப்பு! அதற்கு நாமாக இருந்திருந்தால் ''போயா நீயும் உன் டாக்சி நம்பரும். இங்கே ஊசி போட்டு போட்டு கையெல்லாம் வீங்கிக்கிடக்கு...''என்ற ரீதியில் ஏதாவது சொல்வோம்.

ஆனால் ராமானுஜம் உடனே - உடனே என்றால் உடனேதான் - ''ஏன் ஹார்டி அப்படிச் சொல்கிறீர்கள்? அது ஒரு அற்புதமான எண். It is the smallest number expressible as the sum of two cubes in two different ways'' என்று சொல்கிறார். இதை தமிழில் மொழிபெயர்க்க முடியாது. உடனே ஹார்டி அதைக் குறித்துக்கொள்கிறார். ஏனெனில் ராமானுஜம் சொன்னால் அது தவறாக இருக்க முடியாது என்று அவருக்குத் தெரியும். ஆனால் ராமானுஜம் இறந்து பல மாமாங்களுக்குப் பிறகு சமீபத்தில்தான் அவர் சொன்னது சரி என்று நிரூபித்திருக்கிறார்கள்.

இங்கே கவனிக்க வேண்டியது ஒரு கணினியைவிட வேகமாக எப்படி ராமானுஜத்தால் நான்கு இலக்க பத்து இலக்கக் கணக்குகளுக்கெல்லாம் உடனே விடை சொல்ல முடிந்தது என்பதுதான். இது சாதாரண மனித முயற்சியினால் விளையக்கூடியது இல்லை. இதற்கு ஒரே பதில் பிரபஞ்ச மனத்திலிருந்து அவை வந்தன என்பதுதான். அதாவது அவர் நம்பியது போல காளியிடமிருந்து.

கிட்டத்தட்ட ஆயிரத்துக்கு மேற்பட்ட கண்டுபிடிப்புகளுக்கான - எல்லாமே முக்கியமானவை - 'பேடண்ட்'களை வாங்கிய தாமஸ் ஆல்வா எடிசன்கூட தான் சிந்தித்து ஒரு முடிவுக்கு வரமுடியாமல் போகும்போதெல்லாம் ஏதோ ஒன்று இப்படிப்போ என்று வழி காட்டும். அந்த வழியில் சென்றால் அங்கே விடை இருக்கும் என்பதாக கூறியுள்ளார். மேதை ஐன்ஸ்ட்டீன்கூட நமக்கு மேல் ஒரு சக்தி உள்ளது என்ற நம்பிக்கை இல்லாதவனால் எதையுமே சாதிக்கமுடியாது. சாலையில் போகும்போது விலைமதிப்பற்ற ஒரு பொருளை கண்டெடுத்தவன் போன்றதுதான் என் நிலை என்று கூறியுள்ளார்.

ரேடியம் கண்டுபிடித்த மேரிக்யூரி அம்மையார் அதற்கான வழி தெரியாமல் முயன்று தவித்து கிட்டத்தட்ட தோற்று தூங்கிப்போனபோது தூக்கத்திலேயே எழுந்து திடீரென்று தனது சோதனைச் சாலைக்குப் போய் அந்த கண்டுபிடிப்புக்கான '·பார்முலா'வை எழுதி வைத்துவிட்டு மறுபடி போய் படுத்துவிட்டார். தூங்கிவிழித்து போய் பார்த்தவர் ·பார்முலாவைப் பார்த்து அசந்து போயிருக்கிறார். யார் கொடுத்தது அதை? வேறு யார், ஆண்டவன்தான். அவன்தான் பிரபஞ்ச மனம். பிரபஞ்ச அறிவு எல்லாம்.

இனி இந்த புத்தகம் முழுவதும் வெளிமனம், ஆழ்மனம், பிரபஞ்ச மனம் என்ற வார்த்தைகள் வந்துகொண்டே இருக்கலாம். அதனால் இப்போதே சொல்லிவிட்டேன். ஆங்கிலத்தில் இதை முறையே conscious, subconscious, unconscious என்று சொல்கிறார்கள்.

வெற்றிக்கான விலையைக் கொடுத்தாகவேண்டும் என்று சொன்னோம். வெற்றியின் விலையானது எதில் வெற்றியடைய விரும்புகிறோமோ அதைப்பற்றி நாம் என்ன கருத்துக்கள் வைத்திருந்தோமோ அதைப் பொருத்தது. விஷயம் பெரியது என்று நாம் நினைத்தால் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும். சின்ன விஷயம் என்று நினைத்தால் சின்னவிலை. அதற்குமுன் நமக்கு ஒரு பொருள் வேண்டுமென்றால் அந்த பொருளைப் பற்றி கொஞ்சமாவது தெரிந்திருக்க வேண்டாமா? வெற்றி அடைய வேண்டுமென்றால் வெற்றியைப்பற்றி தெரிந்திருக்க வேண்டாமா? அவசியம் வேண்டும்.

வெற்றி என்பது பணம், புகழ் சம்பாதிப்பதோ சொத்து சேர்ப்பதோ அல்ல. இவைகளெல்லாம் வெற்றியைக் குறிக்கலாம். வெற்றியின் எத்தனையோ அடையாளங்களில் இவைகளும் ஒன்று அவ்வளவுதான். இவைகள் நமக்கு துன்பத்தைக்கூட கொடுக்கலாம். அமெரிக்காவில் ஒரு கோடீஸ்வரர் சாகும் தருவாயில் தன் மகனை அழைத்து. "மகனே, நான் ஒரு கோடீஸ்வரனாக வாழ்ந்தேன். ஆனால் பணம் எனக்கு சந்தோஷம் தரவில்லை. இதை நீ புரிந்துகொண்டாயா?" என்று கேட்டாராம்.

அதற்கு மகன், "ஆமாம் தந்தையே, புரிந்துகொண்டேன். அதோடு இன்னொன்றையும் தெரிந்துகொண்டேன். பணம் மட்டுமிருந்தால் வாழ்வின் பல்வேறு பட்ட துன்பங்களில் இருந்து நமக்கு பிடித்தமான துன்பத்தை நாம் தேர்வு செய்துகொள்ளலாம். பணமில்லாத ஏழையிடம் இந்த சுதந்திரமில்லை. அவனுடைய துன்பத்தை அவனுடைய சூழ்நிலை தீர்மானிக்கிறது. ஆனால் ஒரு பணக்காரன் தனக்கான துன்பத்தை தானே தீர்மானிக்க முடியும். இதைத் தவிர பணக்காரனுக்கும் ஏழைக்கும் எந்த வித்தியாசமும் இல்லை" என்றானாம் ! என்ன ஒரு தெளிவு ! புத்தரைப்போல விழித்துக்கொண்ட மகன் அவன் !

சாலையில் கண்டெடுத்த பணப்பையில் லட்சரூபாய் இருந்தால் அதைக் கண்டெடுத்தவனை வெற்றி பெற்றவன் என்று சொல்ல முடியாது. அந்தப்பை மறுபடி தொலைந்து போனாலும் லட்சரூபாய் தேவைப்படும்போது அதைச் சம்பாதிக்ககூடிய தகுதி உள்ளவனைத்தான் நாம் வெற்றியாளன் என்ற பட்டியலில் சேர்க்க முடியும்.

இங்கே இன்னொரு விளக்கம் தேவைப்படுகிறது. லட்சரூபாய் சம்பாதிப்பது என்றால் என்ன? ஒருவனுக்கு மாதம் ஐம்பதாயிரம் ரூபாய் சம்பளம் என்று வைத்துக்கொண்டால், அவனுக்கு லட்சரூபாய் தேவைப்படும்போது அதை அவன் இரண்டு மாதங்களிலேயோ அல்லது அதைவிட அதிகமான அல்லது குறைந்த நாட்களிலேயோ ஏற்பாடு செய்து கொள்வதற்கான வழிவகைகளை வகுத்துக்கொள்வான். ஏனென்றால் மாதச்சம்பளம் என்ற நிச்சயப்படுத்தப்பட்ட தைரியம் அவனிடம் உள்ளது. வெற்றியாளன் பட்டியலில் இவனையும் சேர்க்க முடியாது.

சம்பாதிக்கின்ற தகுதி என்பது மாதச்சம்பளத்தோடு தொடர்புடையதல்ல. அன்றாடம் வெறும் பத்து ரூபாய் சம்பளம் வாங்குபவனாக இருந்தாலும் சரி, அல்லது அதுகூட இல்லாதவனாக இருந்தாலும் சரி, தேவைப்படும்போது தேவைப்படும் பணத்தை சம்பாதித்துக் கொள்ளவேண்டும். அதாவது தேவைப்படும் பணம் அல்லது பொருள் அவனை வந்தடைகின்ற வழிகளைத் தெரிந்து வைத்துக்கொண்டு சில விதிகளைப் பின்பற்றி தேவைப்பட்டதை அவனை நோக்கி இழுக்க வேண்டும். அப்படிச் செய்யக் கற்றுக்கொண்டவனை வெற்றியாளன் என்று தாரளமாகச் சொல்லலாம்.

பணமும் புகழும்தான் வெற்றியின் அடையாளங்கள் என்றால் மர்லின் மன்றோவிலிருந்து நம்ம மோனல் வரை உலகப் புகழ் பெற்ற நடிக நடிகைகளும் ஹெமிங்வே போன்ற எழுத்தாளர்களும் ஹிட்லர் போன்ற சர்வாதிகாரிகளும் ஏன் தற்கொலை செய்து கொள்கிறார்கள்?

நமக்குத் தேவைப்படுவது பணமாக, புகழாக, பொருளாக, வேலையாக, வாய்ப்பாக, ஆரோக்கியமாக, குடும்பத்தில் மகிழ்ச்சியாக, குழந்தையாக எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். வெற்றி என்பது நமக்குத் தேவைப்படுவதை, தேவைப்படும்போது நம்மை வந்தடைகின்ற மாதிரி நம்மிடம் இழுத்து வருகின்ற சக்தியை, நமக்குள்ளேயே உள்ள அந்த சக்தியை, பயன்படுத்தக் கற்றுக்கொள்வதுதான்.

எது வெற்றி என்று தெரிந்தால் போதுமா? போதாது. எதில் வெற்றி பெறவேண்டும் என்றும் தெரியவேண்டும். நீங்கள் எதில் வெற்றி பெறவேண்டும் என்பதை எந்த புத்தகமும் உங்களுக்கு சொல்ல முடியாது. அதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். உங்களுக்கு என்ன வேண்டும் என்று உங்களுக்கே தெரியாவிட்டால் பிள்ளையாரப்பா, குருவாயூரப்பா, ஏசப்பா என்று எந்த அப்பாவாலும் உங்களுக்கு உதவ முடியாது. ஆண்டவன் நமக்கு உதவி செய்வதற்குமுன் அவனுக்கு நாம் சில உதவிகளைச் செய்ய வேண்டியது அவசியமாகிறது.

தனக்கு லாட்டரியில் லட்ச ரூபாய் பரிசு விழவேண்டும் என்று ஒருவன் ஆண்டவனிடம் பலமுறை பிரார்த்தித்துப் பார்த்தானாம். பயனில்லையாம். கடைசி முறையாக அவன் கோவிலுக்குச் சென்று ரொம்ப உரிமையாக ஆண்டவனைத் திட்ட ஆரம்பித்தானாம். ஆண்டவன் பேசினாராம் : ''என் அன்பான பக்தனே, உனக்கு உதவ நான் தயாராக இருக்கிறேன். உனக்கு லாட்டரியில் ஒரு லட்ச ரூபாய் பரிசு விழுவதில் உன்னைவிட எனக்குத்தான் சந்தோஷம். ஆனால் நான் பரிசுவிழ வைக்கமுடியாமல் நீதான் தடுத்துக்கொண்டிருக்கிறாய் மகனே ! நீ எனக்கு ஒரு சின்ன உதவி செய்தால் நான் உனக்கு வரும் குலுக்கலிலேயே லட்சரூபாய் பரிசு விழ வைக்கிறேன்'' என்றானாம்.

"என்ன உதவி சொல்" என்றானாம் பக்தன்.

கடவுள் சொன்னானாம் : "ஒன்றுமில்லை, முதலில் நீ போய் ஒரு லாட்டரி டிக்கெட்டை வாங்கு" ! ஆம். லாட்டரிசீட்டு வாங்காமலேயே லாட்டரியில் நமக்கு பரிசுவிழுவதற்கு ஆண்டவனாலும் உதவி செய்ய முடியாது ! எனவே வெற்றி வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் எதில் வெற்றி வேண்டும் என்பதில் தெளிவாக இருந்து அதற்காக தங்களைத் தயார் படுத்திக்கொள்ள வேண்டுமல்லவா?

இங்கேதான் குறிக்கோள் அல்லது லட்சியம் என்ற ஒன்று வருகிறது. ஒருவன் ஒரு டாக்ஸிக்குள் ஏறி ''வேகமாகப்போகவேண்டும்'' என்று சொன்னானாம். கொஞ்ச நேரம் போனதும் ட்ரைவர் ''எங்கே போகவேண்டும்?'' என்று கேட்டானாம். ஏறியவன் சொன்னானாம்,''அது முக்கியமில்லை. நான் வேகமாகப் போகவேண்டும், அவ்வளவுதான்'' என்றானாம்!

குறிக்கோள் இல்லாமல் வெற்றி சாத்தியமே இல்லை. எங்கே போகவேண்டும் என்று தெரியாமல் வருஷக்கணக்கில் பயணம் செய்தாலும், ஒளிவேக ஏரோப்ளேனில் பறந்தாலும் பயனில்லை. குறிக்கோள் என்று சொல்லும்போது அது ரொம்பத் தெளிவாகவும் விபரமாகவும் குறிப்பாகவும் இருக்க வேண்டியது அவசியம்.

உதாரணமாக, பணக்காரனாக வேண்டும், விஞ்ஞானியாக வேண்டும் என்றெல்லாம் விரும்பினால் வெற்றியடைவது கஷ்டம். ஏனெனில் இவைகள் ரொம்ப பொதுவாக உள்ளன. இப்படி இருந்தால் பயனில்லை. வேறு எப்படி இருக்க வேண்டும்? எனக்கு காதர் என்ற நண்பர் ஒருவர் இருந்தார். அவர் பி.காம். முடித்த பிறகு சி.ஏ. படிக்க ஆசைப்பட்டார். ஆனால் அவர் ரொம்பத் தெளிவாக இருந்தார். சென்னையில் ஒரு குறிப்பிட்ட ஏரியாவில் இருந்த ஒரு குறிப்பிட்ட ஆடிட்டரிடம்தான் பயிற்சி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதில் ரொம்ப தீவிரமாகவும் விடாப்பிடியாகவும் இருந்தார்.

முதலில் விசாரித்தபோது, அந்த ஆடிட்டரிடம் ஏற்கனவே ஐந்து பேர் பயிற்சியில் இருந்ததால், ஆறாவதாக இவரைச் சேர்க்க முடியாது என்று சொல்லிவிட்டார் அந்த ஆடிட்டர். வேறு ஆடிட்டரிடம் சேரலாம் என்று சொன்னபோது காதர் மறுத்துவிட்டார். மணந்தால் மகாதேவி, இல்லையெனில் மரணதேவி என்பதுபோல அந்த ஆடிட்டரிடம்தான் படிப்பேன் என்பதில் அவர் தளரவே இல்லை. கடுமையான சிபாரிசின் பேரில், ஆறாவது ஆளாக, உபரியாக, உப்புக்குச் சப்பாணியாக அவர் கடைசியில் சேர்த்துக்கொள்ளப் பட்டார் !

ஆனால் அந்த வருடம் சி.ஏ.படிப்பில் அவர் மட்டும்தான் 'பாஸ்' பண்ணினார் ! மற்ற ஐந்துபேரும் '·பெயில்' ! இந்த வெற்றிக்கு என்ன காரணம்? குறிக்கோளைப் பற்றிய தெளிவு, குறிக்கோளில் சமரசம் செய்துகொள்ளாத மன உறுதி, உழைப்பு இவைதான்.

எனவே வெற்றி பெற விரும்புகிறவர்களுக்கு குறிக்கோள் இருக்க வேண்டும் என்பதோடு, அது ரொம்பத் தெளிவாகவும் இருக்க வேண்டும். ஒரு சட்டை வேண்டும் என்பதற்கும், லூயி·பிலிப்பில், 30 சைஸில், க்ரீம் கலரில், முழுக்கை உள்ள, கோடுபோடாத, ப்ளெய்ன் சட்டை வேண்டும் என்பதற்கும்தான் எவ்வளவு வித்தியாசம் ! முன்னது வெறும் ஆசை. பின்னதுதான் குறிக்கோள். இப்படி தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தால்தான் குறிக்கோளை நோக்கி முன்னேறுதல் சாத்தியம். இந்த தெளிவும் நிச்சயத்தன்மையும் அற்ற குறிக்கோள்கள் வெற்றி பெற்றதாக வரலாறு கிடையாது.

இப்படி குறிக்கோளை நோக்கி முன்னேறக் கற்றுக்கொள்வதற்கு நம்மை பல வழிகளில் தயார்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. இதன் அங்கமாக நாம் சில விஷயங்களைப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. முதலில் வெற்றிக்காண சூழ்நிலை. நாம் எதில் வெற்றிபெற விரும்புகின்றோமோ அதற்கு ஏதுவான சூழ்நிலை முதலில் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அப்படிப் பார்த்தோமானால் நிச்சயமாக இருக்காது. இருந்தால்தான் வெற்றி பெற்றிருப்போமே!

உலக வரலாற்றைப் பார்த்தால் சாதனையாளர்கள் யாருக்குமே வெற்றிக்காண சூழ்நிலை அமைந்திருந்ததே இல்லை. இயேசு, முகமது நபி போன்ற உலகத்தையே மாற்றிய சக்திகள் ஆரம்ப காலத்தில் ஆடுமாடு மேய்த்த்துக்கொண்டிருந்தன. ஷேக்ஸ்பியர் குதிரை லாயத்தில் குதிரைச் சாணம் அள்ளிக்கொண்டிருந்தார். அமெரிக்காவின் 16ஆவது ஜனாதிபதியான ஆபிரஹாம்லிங்கன் சட்டம் படிப்பதற்காக ஸ்டூவர்ட் என்பவரிடமிருந்து புத்தகங்கள் (கடன்) வாங்க நியூசேலம் என்ற ஊரிலிருந்து 32 கிலோமீட்டர் நடந்துபோக வேண்டியிருந்தது! ஒருமுறையல்ல, பலமுறை! வியென்னாவின் தெருக்களில் படங்கள் தீட்டி வயிற்றைக் கழுவிக்கொண்டிருந்தான் சிறுவன் ஹிட்லர். (அவன் அப்படியே போயிருந்திருக்கலாம். லட்சக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும்).

நியூட்டனும் சிறுவயதில் மாடுமேய்த்தார். உலகப் பெரும் கோடீஸ்வரர்களான ஆண்ட்ரூ கார்னிஜி, ராக்·பெல்லர், ஹென்றி ·போர்டு ஆகியோர் முறையே 4, 6, 21 டாலர்களை வாரச்சம்பளமாகப் பெற்றுக்கொண்டிருந்தனர். பெர்னார்ட்ஷா மளிகைக் கடையில் ஆரம்பத்தில் வேலைபார்த்தார். ராக்·பெல்லர், ஈஸ்ட்மன், தாமஸ் லிப்டன் முதலிய கோடீஸ்வரர்கள் எல்லாம் குடிசையில் பிறந்து வளர்ந்தவர்கள். குடிசைக்கும் கோபுரத்திற்கும் இடையில் உள்ளது 'கூப்பிடு தூரம்'தான் என்பத அவர்கள் நிரூபித்தார்கள். புத்தருக்கு ஞானம் போதி மரத்தடியில். குரு நானக்கிற்கோ அது பலசரக்குக் கடையில்.

இதெல்லாம் சொல்வது என்ன? இந்த சாதனையாளர்களெல்லாம் வாழ்வைத் துவங்கியபோது வெற்றிக்காண சூழ்நிலைகள் எதுவுமே உருவாகவில்லை. அவர்கள்தான் உருவாக்கினார்கள். இதுதான் முதல் விதி. வெற்றிபெற விரும்புபவர்கள் அதற்கான சூழலை அவர்கள்தான் உருவாக்க வேண்டும். ''திறமையுள்ளவன் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்கிறான். ஆனால் ஒரு மேதையோ வாய்ப்புகளை உருவாக்குகிறான்'' என்பது முதுமொழி.

சிலர் நினைக்கிறார்கள் அதிபுத்திசாலித்தனமாக இருந்தால் வெற்றி அடைந்துவிடலாம் என்று. "அதிபுத்திசாலிகளோ அறிஞர்களோ வியாபாரத்திற்கு லாயக்கற்றவர்கள்" என்கிறார் ஹென்றி·போர்டு. ரொம்ப கெட்டிக்காரன் சந்தைக்குப் போனால் விற்கவும் மாட்டான் வாங்கவும் மாட்டான் என்று நம்ம ஊரில்கூட சொல்வார்கள்.

வெற்றி என்பது நம்முடைய அதிஜாக்கிரதையினால், அதிபுத்திசாலித்தனத்தினால் அடுத்தவரை ஏமாற்றி வருவதல்ல. அப்படி ஏமாற்றினால் ஒரு நாள் ஏமாற்றியவனும் ஏமாந்து போவான். இது வயிரெறிந்து விடுகின்ற சாபமல்ல. இது ஒரு பிரபஞ்ச விதி. எப்படி ஒரு பொருளை மேலே தூக்கிப் போட்டால் அது புவியீர்ப்பு விசையின் காரணமாக கீழே வந்துதான் ஆகுமோ - இந்த பூமியில்தான் - அதைப்போல, ஒருவரை நாம் ஏமாற்றினால் நாமும் ஏமாந்துதான் போவோம். அதுவும் வட்டியோடு.

ஒரு பிரபலமான நடிகை இருந்தாளாம். ஒவ்வொரு நாள் இரவும் அவள் தூங்கப் போகுமுன் தன் தங்க, வைர நகைகளையெல்லாம் கழற்றி மேஜைமேல் வைத்து ஒரு துண்டுக் காகிதத்தில் "இவைகள் போலி நகைகள். உண்மையான நகைகள் பேங்க் லாக்கரில் உள்ளன" என்று எழுதி வைத்துவிடுவாளாம். இதனால் நகைகள் திருட்டு போகாமல் ரொம்பநாள் அப்படியே இருந்ததாம். ஒரு நாள் காலையில் விழித்துப் பார்த்தபோது நகைகளைக் காணவில்லையாம். ஆனால் ஒரு துண்டுக் காகிதத்தில் இப்படி எழுதியிருந்ததாம் : "உங்கள் போலி நகைகளை நான் எடுத்துக் கொண்டேன். ஏனென்றால் நான் ஒரு போலி திருடன். உண்மையான திருடன் ஜெயிலில் இருக்கிறான்" ! அதிஜாக்கிரதை, அதிபுத்திசாலித்தனம் இவையெல்லாம் தோல்விக்காண காரணங்களில் ஒன்று என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள் !பேசாமல் நம்பிவிடுவோம், அதிபுத்திசாலித்தனமாக ஆராய்ச்சி செய்யாமல் !

வெற்றியைப் பற்றி இன்னும் ஒரு முக்கியமான விஷயம் உள்ளது. வெற்றி ஒரு தலைசிறந்த நடிகனாக அல்லது நடிகையாக உள்ளது. அது நம்மிடம் பல மாறுவேஷங்களில் வருகிறது. தோல்வி, அவமானம், ஏமாற்றம் என பல வேடங்கள் அதற்கு. அதையெல்லாம் கண்டு நீங்கள் துவண்டுவிடுகிறீர்களா அல்லது தொடர்கிறீர்களா என்று அது பார்க்கிறது. பனித்துளிக்கும் வைரக்கல்லுக்கும் உள்ள முக்கிய வித்தியாசமே வைரக்கல்லின் உறுதிதான்.

ஒரு காரியத்தில் வெற்றி பெறுவதற்கு முன்னர் சில தோல்விகளைச் சந்திக்க வேண்டிவரும். அதாவது தோல்வியைப்போலத் தோற்றம் கொண்ட வெற்றி. அவைகளை தற்காலிகத் தோல்விகள் என்று வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம். உண்மையில் இவைகள் வெற்றிக்கான விலைகள். 'ஹர்டில்ஸ்' ஓட்டப்பந்தயத்தில் வரும் தடைகளைப் போல. இந்தத் தடைகளை தாண்டும்போது ஏற்படும் சந்தோஷம் இருக்கிறதே, அதற்கு ஈடு இணையே கிடையாது. அந்த சந்தோஷங்களுக்காகவாவது அந்த தடைகள் வேண்டும். தடைகளை மீறி வரும்போதுதான் வெற்றியின் உண்மையான சுவை தெரியும். இதனால்தானோ என்னவோ, "உடல் உழைப்பு உடலை பலப்படுத்துவதுபோல, துன்பங்கள் நம் மனதைப் பலப்படுத்துகின்றன" என்று செனகா என்ற தத்துவவாதி சொன்னார்.

மேதை பெர்னார்ட்ஷா எழுத்தாளராக வேண்டுமென்று முடிவு செய்து சிறுகதைகள் எழுதி, அதை தபாலில் ஸ்டாம்ப் ஒட்டி அனுப்பக்கூட காசில்லாமல் அவர் அம்மாவிடம் வாங்கி அனுப்பினார். (அவர் அம்மா தமிழ்ப்பட அம்மாக்கள் மாதிரி இல்லாமல், தெண்டச்சோறு என்று அவரை திட்டாமல், பல வீடுகளில் வேலைபார்த்து அந்தக் காசை அவருக்குக் கொடுத்தார்.) எல்லாக் கதைகளும் திரும்பி வந்தன. எத்தனைமுறை தெரியுமா? ஒன்பது வருடங்கள் ! ஆமாம் ! ஒன்பது வருடங்களாக அவர் தொடர்ந்து அனுப்பிக்கொண்டே இருந்தார். ஆனால் அந்த ஒன்பது வருடங்களில் ஒன்றுகூட பிரசுரமாகவில்லை ! இதில் முக்கியமான விஷயம் ஒன்பது வருடங்களாக அவர் மனம் தளராமல் அனுப்பிக் கொண்டே இருந்தார் என்பதுதான்.

"வெற்றியாளர்கள் விட்டுவிடுவதில்லை ; விட்டுவிடுபவர்கள் வெற்றி பெறுவதில்லை" என்பது ஆங்கிலமுதுமொழி. விழுந்து விழுந்து எழுவதனால் குழந்தை நடக்க மட்டும் கற்றுக்கொள்ளவில்லை. அதனால் அதன் எலும்புகளும் தசை நார்களும் வலுவடைகின்றன. தற்காலிகத் தோல்விகளால் மனம் மட்டும் வலுவடையாமல் மனிதனின் அறிவும் கூர்மையடைகிறது என்பதுதான் உண்மை. அதனால்தானோ என்னவோ ஒன்பது வருடங்களாக சிறுகதைகளை அனுப்பிக்கொண்டிருந்த பெர்னார்ட்ஷா, முதல் முதலாக நாடகம் எழுதினார். முதல் நாடகமே அவரை அந்த நாடுபூராவும் பிரபலமாக்கிவிட்டது!

ராபர்ட் புரூஸ் என்ற வீரரைப் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம். அவர் ஆங்கிலேயர்களோடு கஜினி முகம்மது மாதிரி பதினேழு முறை போரிட்டார். ஆனால் அத்தனை முறையும் தோற்றார். மனமுடைந்து ஒரு மலைக்குகையில் ஒளிந்துகொண்டிருந்தபோது ஒரு சிலந்தி வலைபின்னுவதை கவனிக்க நேர்ந்தது. பின்னே பொழுது போகவேண்டுமல்லவா? ஆனால் அந்த பொழுதுபோக்கில் அவருக்கான செய்தி இருந்தது. அறுந்து அறுந்து போன தனது வலையை விடாப்பிடியாக அது பின்னிக்கொண்டே இருந்தது."ச்சே ஒரு சிலந்தியைவிட நாம் மட்டமாகவா போய்விட்டோம்" என்று புதிய உத்வேகம் பிறந்தவராக மறுபடி புறப்பட்டு போர்செய்து வெற்றி பெற்றது வரலாறு.

தாமஸ் கார்லைலின் "·பிரெஞ்சுப் புரட்சி" என்ற நூல் பிரசுரகர்த்தரின் தவறுதலால் நெருப்புக்கு இரையாகிவிட்டது. ஆனால் கார்லைல் கண்ணைக் கசக்கிக் கொண்டிருக்காமல் மறுபடி அந்த நூலை எழுதி முடித்தார்!

தாமஸ் ஆல்வா எடிசன் மின்சார பல்பை வெற்றிகரமாக எரிய விடுவதற்கு முன் பத்தாயிரம் தடவைகள் முயற்சி செய்தார் ! அதாவது பத்தாயிரம் தடவை தோற்றிருக்கிறார்! டங்க்ஸ்டன் இழைகளைப் பொருத்தி வெற்றியடைவதற்கு முன் கார்க், தார், மீன்பிடிக்கும் தூண்டில், கரியான அட்டை என எத்தனையோ அய்ட்டங்களை வைத்து முயன்றிருக்கிறார் ! பத்தாயிரம் முறை அவர் கைகளிலிருந்து நழுவிய வெற்றி பத்தாயிரத்து ஓராவது முறை மாட்டிக்கொண்டது.

இங்கேயும் முக்கியமான விஷயம் வெற்றி வரும்வரை விடமாட்டேன் என்ற அவருடைய பிடிவாதம்தான். இதைத் தீர்மானம், விடாமுயற்சி என்றும் சொல்லலாம். அவசரப்படுவதால் வெற்றி கிட்டவே கிட்டாது. அவசரம் வெற்றியின் எதிரி. கோழிக்குஞ்சு வேண்டுமென்றால் அதற்கு வழி முட்டையை உடைப்பதல்ல. பொறுமை என்பது வெற்றிக்கு மிகவும் அவசியமான குணம். ஆனால் பொறுமை என்பது செயலற்ற நிலை அல்ல. அது காத்திருப்பது. வரும்போது வரட்டும் என்று படுத்துத் தூங்குவது அல்ல.

காத்திருப்பது என்பது ரொம்ப தீவிரமாக கவனித்துக்கொண்டே இருப்பதாகும். காதலிக்காக காத்திருக்கும் காதலனைப் பாருங்கள். ஒவ்வொரு நிமிடமும் ஒரு யுகம் போல அவனுக்கு. ஆனால் ஒவ்வொரு வினாடியும் அவன் ரொம்ப விழிப்புணர்வுடன் இருப்பான். காற்றடித்தால்கூட திரும்பிப் பார்ப்பான். காதலி வந்துவிட்டாளோ என. உழுது விதைத்துவிட்டு காத்திருக்கும் விவசாயியின் விழிப்புணர்வைப் போன்றது வெற்றிக்கான வேலையைச் செய்துவிட்டு பொறுமையாகக் காத்திருப்பது என்பது. அதைத் தவறாகப் புரிந்துகொண்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் இவ்வளவும் சொன்னேன். ஆனால் நம்முடைய முயற்சிகள் எல்லாம் இத்தகைய பொறுமையும் தீவிரத்தன்மையும் கொண்டவையா என்று நம் மனசாட்சியைக் கேட்டுப் பார்த்தால் தெரியும்.

ஒருமுறை ஒரு மாத்திரை வாங்கி வரச்சொல்லி ஒருவனை அனுப்பினேன். அவன் அரைமணி நேரம் கழித்துத் திரும்பி வந்து அந்த மாத்திரை ஊரிலேயே இல்லை என்று சொன்னான். பிறகு நான் போய் அவன் விசாரித்த அதே ஊரில் இருந்த ஒரு கடையில் வாங்கிவந்தேன். அந்த ஊரில் எனக்குத் தெரிந்து 32 மெடிகல் ஷாப்புகள் இருந்தன. அவன் ஒரு நாலைந்தில் விசாரித்துவிட்டு ஊரிலேயே இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டான். என்ன காரணம்? சோம்பேறித்தனம்தான். நம்முடைய முயற்சிகள் இத்தகையதாக இருக்கும் பட்சம் வெற்றிக்கு நம்மைப்பிடிக்க பல யுகங்கள் ஆகலாம்.

ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் ஜனாதிபதி ஆவதற்கு முன் எத்தனை முறை பலவிதமான தோல்விகளைத் தழுவினார் தெரியுமா? பாருங்கள் :

1. 1831 - வியாபாரத்தில் தோல்வி
2. 1832 - சட்டசபைக்கான தேர்தலில் தோல்வி
3. 1833 - மறுபடியும் வியாபாரத்தில் தோல்வி
4. 1835 - காதலி மறைவு
5. 1836 - நரம்புத் தளர்ச்சி
6. 1838 - சபா நாயகர் தேர்வில் தோல்வி
7. 1840 - எலக்டர் தேர்வில் தோல்வி
8. 1843 - லாண்ட் ஆ·பீசர் தேர்வில் தோல்வி
9. 1843, 48 - காங்கிரஸில் தோல்வி
10. 1855 - செனட்டில் தோல்வி
11. 1858 - மறுபடியும் செனட்டில் தோல்வி
12. 1860 - அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்வு !

தோல்விகளைக் கண்டு கொஞ்சம்கூட துவளாத அவரல்லவா மனிதன்!

வெற்றியும் தோல்வியும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் மாதிரி. ஒரே விஷயத்தை நாம் புரிந்துகொள்ளும், எடுத்துக்கொள்ளும் முறையில் அது வெற்றியாகவோ தோல்வியாகவோ மாறுகிறது. எரியும் அடுப்புக்கு மேலே கொஞ்ச நேரம் ஒரு கையையும் அதே சமயம் ஐஸ்கட்டிகளின்மீது இன்னொரு கையையும் வைத்திருந்துவிட்டு பின்னர் இரண்டு கைகளையும் ஒரே நேரத்தில் ஒரு பானைத் தண்ணீருக்குள் விட்டால் தண்ணீர் சூடானதா குளிரானதா என்ற கேள்விக்கு ஒரு கை சூடு என்றும் இன்னொன்று இல்லை என்றும் சொல்லும். இரண்டில் எது உண்மை? இரண்டுமே உண்மை அல்லது இரண்டுமே பொய். கையைப் பொறுத்தது அது. அப்படித்தான் வெற்றியும் தோல்வியும்.

தோல்விகள் வருவதனால்தான் நாம் தோற்கிறோம் என்பது உண்மையல்ல. மாறாக, தோல்வி என்று கருதப்படுகின்ற ஒன்று நம்மை வந்து சேரும்போது அதை நாம் தோல்வியாக ஏற்றுக்கொண்டுவிடுவதால்தான் நாம் தோற்றுப்போகிறோம். அப்படியானால் தோல்வியையே வெற்றியாக எடுத்துக்கொள்வதா என்று கேட்கக்கூடாது. ஒரு தோல்வி வரும்போது அதை நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதைப் பொருத்துத்தான் வெற்றி அமைகிறது. அதாவது வெற்றிக்குமுன் வரும் தற்காலிகத் 'தோல்வி'களை நாம் வரவில் வைக்கவே கூடாது.

''ஐயா, சாப்ட்டு மூனு நாளாச்சுய்யா, எதுனாச்சும் போடுங்க தர்மராசா'' என்று பஸ்ஸ்டாப்பு போன்ற இடங்களில் நமக்கு ஒரு இன்ச் தள்ளி பிச்சைக்காரன் நின்று நமக்கு பட்டம் கொடுத்துக் கெஞ்சும்போதுகூட நமக்கு காது கேட்காமல் போகிறதல்லவா? ஏன்? அவன் கேட்பது காதில் விழத்தான் செய்கிறது. கெஞ்சுவது கண்ணில் படத்தான் செய்கிறது. ஆனால் பிச்சைபோட மனமில்லை. அல்லது பணமில்லை (சில்லறைதான்). அந்த மாதிரி தருணங்களில் தெரிந்தும் நாம் அவன் குரலை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் இருப்பதுபோல் தோல்வி வரும்போதும் இருக்க வேண்டும் என்று சொல்கிறேன். விருப்பமில்லாத பிச்சைக்காரனை "வேறுவீடு பார்" என்று விரட்டுவது போல, தற்காலிகத் தோல்விகளையும் ஏமாற்றங்களையும் உதாசீனப் படுத்த வேண்டும்.

ஏனெனில், அப்படி உதாசீனப் படுத்தியவர்கள்தான் வெற்றியடைந்திருக்கிறார்கள். இசைமேதை பீத்தோவன் தான் உருவாக்கிய அற்புதமான ஒன்பதாவது சிம்·பொனியை அவரால் கேட்க முடியவில்லை. காரணம் அவர் டமாரச் செவிடு ! எடிசனும் செவிடுதான். அவர் பெரிய விஞ்ஞானியாகப் பிரபலமான பிறகு அவரைக் கேட்டார்களாம். "என்றைக்காவது நீங்கள் உங்களுக்கு காது கேட்கவில்லையே என்று வருத்தப் பட்டிருக்கிறீர்களா?" என்று. ஆனால் அவர் சொன்னார் : "இல்லை. சந்தோஷப் பட்டிருக்கிறேன். ஒரு முக்கியமான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும்போது, அதற்கு சம்பந்தமில்லாத சப்தங்கள் காதில் விழுந்து என் கவனத்தைக் கலைக்காமல் என் செவிட்டுத்தன்மை என்னைத் தடுக்கிறது. அந்த அற்புதமான ஏற்பாட்டிற்காக இறைவனுக்கு நான் நன்றி செலுத்துகிறேன்" என்று !

ஆங்கிலத்தில் தலைசிறந்த கவிஞராக கருதப்படுகின்ற ஜான் மில்ட்டன் தனது "பாரடைஸ் லாஸ்ட்" என்ற காவியத்தை, அதன் 12 காண்டங்களையும் ஸ்பெல்லிங் உட்பட தனது வாயால் சொல்லச்சொல்ல அவருடைய இரண்டு மகள்களும் எழுதுவார்களாம். ஏனென்றால் அவரால் எழுதமுடியாது. காரணம் அவர் அப்போது குருடராக இருந்தார் !கண் தெரியாவிட்டால் மனிதர்கள் பொதுவாக பிச்சை எடுப்பதைத்தான் நாம் அறிவோம். ஆனால் மில்ட்டனோ காவியம் படைக்கிறார் !

இந்த உதாரணங்களில் சொல்லப்பட்ட தோல்விகளெல்லாம் தற்காலிகத் தோல்விகள் அல்ல. நிரந்தர ஊனங்கள்!ஆனால் அவர்கள் அதையும் மீறி சாதனை புரிந்துள்ளார்கள்! ஆனால் நமக்கு இவ்வளவு பெரிய சாதனைகள் இப்போதைக்கு வேண்டாமென்று வைத்துக்கொண்டாலும், தற்காலிகத் தோல்விகளையாவது நாம் உதாசீனப் படுத்தியே ஆகவேண்டும். ஆனால் நாம் எப்போதுமே ரோஜாவின் நறுமணத்தை நினைவில் வைத்துக்கொள்வதில்லை. முள் குத்தியதை மட்டும் மறக்காமல் எல்லோரிடமும் சொல்லி புலம்புகிறோம்! உண்மையில் தோல்வி என்பதே வெற்றியின் திசையைச் சுட்டுகின்ற ஒரு அம்புக்குறி மாதிரிதான். கடிகாரத்தின் பெண்டுலம் இடது வலதாகப் போய்க்கொண்டிருக்கும். ஆனால் அது இடது பக்கம் போகும்போது உண்மையில் வலது பக்கம் போவதற்கான சக்தியை சேர்க்கிறது என்பதுதான் உண்மை. தோல்வியும் இப்படித்தான்.

வெற்றி என்பது உங்களுக்கு வெளியே எங்கோ உள்ள ஒரு பொருளல்ல. அது உங்களுக்கு வெகு அருகாமையிலே உள்ளது. இன்னும் சொல்லப்போனால் அது உங்களுக்கு உள்ளேயே உள்ளது. அதனாலேயே அதனை நீங்கள் தெரிந்துகொள்ளாமல் போகலாம். ஏனெனில் ஒரு விஷயத்தைப் பார்ப்பதற்கு தூரம் என்பது கொஞ்சமாவது தேவைப்படுகிறது. கடலைத் தேடிய கடல்மீன்களைப் போல நாம் இருக்கிறோம்.

வெற்றி நமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது. எப்போது அதை நோக்கி நம் முகத்தை நாம் திருப்பப் போகிறோம் என்று எதிர்பார்த்துக்கொண்டு. நம்முடைய தவறுகள் வெற்றியைத் தாலாட்டித் தூங்க வைத்துவிட்டன. வெற்றியைத் தட்டி எழுப்புவது எப்படி? புத்தராவதுதான் வழி ! பயப்பட வேண்டாம். காட்டுக்கெல்லாம் போகவேண்டியதில்லை. வேறொன்றுமில்லை, புத்தர் என்றாலே "விழித்துக்கொண்டவர்" என்றுதான் பொருள். நாமும் விழித்துக்கொள்வதுதான் வழி.

இந்த விழித்துக்கொள்வது என்றவுடன் அதுபற்றி சில விஷயங்களையும் தெளிவு படுத்த வேண்டியுள்ளது. விழித்துக்கொள்வது என்றால் தூங்காமல் இருப்பது. இது தெரியாதா என்கிறீர்களா? ஆமாம் தெரியாதுதான். நாம் ஒரு நாளைக்கு எத்தனைமணி நேரம் தூங்குகிறோம் தெரியுமா? சராசரியாக எட்டு மணி நேரம் என்று சொல்வீர்கள். அந்த தூக்கத்தை நான் சொல்லவரவில்லை.

வாழ்க்கையில் மூன்று மாதிரி நேரங்கள் உள்ளன. வேலை பார்க்கும் நேரம், தூங்கும் நேரம், ஓய்வு நேரம். ஆனால் நாம் இந்த மூன்று நேரத்திலுமே தூங்கிக்கொண்டுதான் இருக்கிறோம். அலுவலகத்தில் தூங்குவதைச் சொல்லவில்லை. வாழ்க்கையில் பல விஷயங்களில் தூங்கிக்கொண்டே இருக்கிறோம். தெளிவாகச் சொல்லிவிடுகிறேன்.

வைத்த பொருளை எங்கே வைத்தோம் என்று தேடினால் வைக்கும்போது தூங்கிவிட்டோம் என்று பொருள். வீட்டைப் பூட்டிவிட்டு வெளியில் வந்தபிறகு சரியாகப் பூட்டினோமா என்று மறுபடியும் இழுத்துப் பார்ப்போமானால் பூட்டும்போது தூங்கிவிட்டோம் என்று பொருள். கடிதமோ எதுவோ எழுதும்போது தவறு ஏற்பட்டு அடித்தடித்து எழுதினோமென்றால் எழுதும்போது தூங்கிவிட்டோம் என்று பொருள். காலையில் சாப்பிட்டது என்னவென்று ஞாபகம் வரவில்லை என்றால் சாப்பிடும்போது தூங்கிவிட்டோம் என்று பொருள்.

ஒரு பழக்கத்தை ஏற்படுத்திவிட்டோமென்றால், பழகிய காரியத்தை செய்யும்போது, கவனம் தேவையில்லை. செய்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் செய்யலாம். அதாவது தூங்கிக்கொண்டே செய்யலாம். அதாவது மனதை முழுசாக வேறுஒரு காரியத்தில் வைத்துக்கொண்டே செய்யலாம். உதாரணமாக, பேசிக்கொண்டே ஹீரோஹோண்டா ஓட்டலாம், பழகிவிட்டால். எது க்ளச், எது கியர், எது ப்ரேக் என்ற கவனம் தேவைப்படாமல்.

இப்படியாக, நாம் தூங்கும்போதும் தூங்குகிறோம். விழித்துக்கொண்டி இருக்கும்போதும் தூங்குகிறோம். அதாவது வாழ்நாளில் பெரும்பகுதியை விழிப்புணர்வு இல்லாமலே கழிக்கிறோம். இது வெற்றிக்கு பெரும் எதிரி. ஒருவன் ஒரு குதிரை வாங்கினானாம். குதிரையை விற்றவன்.''ஐயா, இது ரொம்ப பக்தியான குதிரை, 'எல்லாப்புகழும் இறைவனுக்கே' என்று சொன்னால்தான் ஓடும். 'ஆமென்' என்று சொன்னால்தான் நிற்கும்'' என்றானாம்.

வாங்கியவனும் ''எல்லாப்புகழும் இறைவனுக்கே'' என்று சொன்னவுடன் அதுவரை கல்குதிரையாட்டம் நின்றுகொண்டிருந்தது பறக்க ஆரம்பித்ததாம். ஒரு மலையுச்சிக்குப் போய்விட்டது. இன்னும் கொஞ்சம் விட்டால் அங்கிருந்து பாய்ந்திருக்கும். நல்லவேளையாக 'ஆமென்' ஞாபகம் வர, அவன் 'ஆமென்' என்று சொன்னவுடன் குதிரை சரியாக மலையுச்சியில் போய் நின்றதாம். இன்னும் ஒரு பாய்ச்சல் பாய்ந்திருந்தால் உயிர் போயிருக்கும். மிகவும் பயந்துபோன அவன், உயிரைக்காப்பாற்றிய இறைவனுக்கு நன்றி செலுத்தும் விதமாக ''எல்லாப் புகழும் இறைவனுக்கே'' என்றானாம் தன்னை மறந்து!

வாய்தவறி அவன் மறுபடியும் குதிரையை 'பறக்க'விட்டதன் காரணம் பழக்கம்தான். அதாவது தூங்கிவிட்டதுதான். ஷிப்லி என்று ஒரு ஞானி இருந்தார். அவர் இறைவனுடைய பெயரை யார் சொன்னாலும் உடனே அவர்கள் வாயில் சர்க்கரையைப் போடுவாராம். கொஞ்சநாள் கழித்து இறைவன் பெயரைச் சொல்பவர்களுக்கு ஒரு தங்கக்காசு கொடுக்க ஆரம்பித்தாராம். இன்னும் கொஞ்சநாள் போனபிறகு இறைவன் பெயரை யார் சொன்னாலும் உடனே வாளை உருவி அவனை வெட்டப்போனாராம். ஏன் இந்த மாற்றம் என்று கேட்டபோது,''இறைவனுடைய பெயரை காதலின் காரணமாகத்தான் சொல்கிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் இப்போதுதான் தெரிகிறது மனிதர்கள் இறைவனின் பெயரை வெறும் பழக்கத்தின் காரணமாக, என்ன சொல்கிறோம் என்றே தெரியாமல் சொல்கிறார்கள் என்று. அதனால்தான் அப்படிப்பட்டவர்கள் உயிரோடு இருக்கக்கூடாது என்பதற்காக வெட்டப்போகிறேன்'' என்றாராம்! அதாவது விழிப்புணர்வு இல்லாதவர்கள் அனைவரும் அவருடைய கருத்துப்படி உயிர் வாழ்வதற்கே லாயக்கில்லதவர்கள்!

இப்படி நாம் தூங்குவதனால் நமக்கு வரவேண்டிய வெற்றியெல்லாம் யார்யாருக்கோ போய்க்கொண்டிருக்கிறது. அதற்காகத்தான் இவ்வளவும் சொன்னேன். இனி விழிப்புணர்வு, விழித்துக்கொண்டிருப்பது என்றால் கண்ணைச் சிமிட்டிக் கொண்டிருப்பது என்று சொல்லமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

கடைசியாக ஒரு வார்த்தை. வெற்றியை நாம் தேடுகிறோம் என்பது மட்டும் உண்மையல்ல. தகுதியை வளர்த்துக் கொண்டவர்களை, விலையைக் கொடுக்கத் தயாராகிவிட்டவர்களை, தயார் நிலையில் உள்ளவர்களை வெற்றியும் தேடிக்கொண்டிருக்கிறது ! ஆம்.

தாகித்தவர் இவ்வுலகில்
தண்ணீரைத் தேடுகின்றனர் !
தண்ணீரும் தேடிக்கொண்டிருக்கிறது
தாகம் கொண்டவர்களை !

என்கிறார் பாரசீக கவிஞானி ஜாலாலுத்தீன் ரூமி. இதையே நமது பாரதி

மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்

என்று கூறுகிறார். அதுமட்டுமல்ல, இப்படி இருப்பவர்கள் வெற்றி அடைவதில்லை. வெற்றி அவர்களை வந்து அடைகிறது! ஆம், இதைத்தான் பாரதி முத்தாய்ப்பாக,"நெருங்கின பொருள் கைப்படவேண்டும்"என்று சூசகமாகச் சொல்கிறார் ! ஆம் தாகம் கொண்டவர்களாகுங்கள். வெற்றி உங்களதே.|

This page is powered by Blogger. Isn't yours?

Weblog Commenting and Trackback by HaloScan.com