<$BlogRSDURL$>

All writings like poems, stories, articles in Tamil and English

Sunday, May 30, 2004

பாராவின் 'குதிரைகளின்கதை' - எனது பின்னுரை. 

இந்த குதிரைக்கதைகள் எட்டும் குதிரைகளைப் பற்றிய கதைகள் அல்ல. அரேபியக் குதிரைகளைப் போல
ஒரு காலத்தில் பாய்ந்து ஓடி, பின் படுக்கவைத்து காலம் லாடமடித்தபிறகு, சரியான உணவும் பராமரிப்பும்
கிடைக்காமல் மெரீனா கடற்கரையில் பிழைப்புக்காக ஓடும் பாவப்பட்ட குதிரைகளாகிவிட்ட மனங்களைப் ப
ற்றியது.

இந்த கதைகளில் வரும் மனிதர்களுக்கும் மகாத்மா காந்திக்கும் என்ன சம்மந்தம்? ஒன்னே ஒன்னுதான்.
அதுதான் காந்தி கையில் பிடித்திருக்கும் ஊன்றுகோல். இறைத்தூதர் மோஸஸ் எனப்படும் மூஸாவுக்கு இந
றவன் ஒரு ஊன்றுகோலைக் கொடுத்திருந்தான். அதற்கு பல அற்புத சக்திகள் உண்டு. அது தேவைப்படும்பே
஡து பாம்பாக மாறும். இரவில் ஒளிதரும் விளக்காக மாறும். அடிமைகள் விடுதலைபெற செங்கடலைப் பிளந்து
வழி ஏற்படுத்தும் கழியாகும். மகாத்மாவின் ஆன்மாவின் கை பிடித்திருந்ததும் அப்படிப்பட்ட ஒரு அற்புத ஊ
ன்றுகோல்தான்.

கோடிக்கணக்கான மக்கள் மனத்திலே விடுதலை உணர்வை பற்றவைத்த தீயாக இருந்தது அது. அதுகாறும்
இந்த உலகம் காணாத ஒரு புது ஒளியைப் பாய்ச்சியது அது. அடக்குமுறை என்ற இருளை கடைசியில்
அதன் ஒளியே பூரணமாக விலக்கியது. அதன் சொடுக்கில் சுதந்திரம் எனும் தென்றல் வீசியது நமது நாட்டி
ல். இவ்வளவையும் இன்னமும் செய்த அந்த ஊன்றுகோல், காந்தி சும்மா கையில் பிடித்திருந்த வாக்கிங்
ஸ்டிக் அல்ல.

அப்படிப்பட்ட ஒரு ஊன்றுகோல் ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வின் ஏதாவதொரு கட்டத்தில் தேவைப்படுகி
றது. அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அன்பாக, பாசமாக, காதலாக, பணமாக, புகழாக, அதாக
இதாக. ஆனால் ஒரு ஊன்றுகோல் தேவை.

மெரீனா கடற்கரையில் காந்தி சிலை அருகில் நிகழ்ச்சிகள் நடப்பது மட்டும் கதைகளுக்கும் காந்திக்கும்
உள்ள சம்மந்தம் அல்ல. இந்த ஊன்றுகோல் எனும் குறியீடுதான் ரொம்ப அழகாக இந்த எட்டு கதைகளிலும்
பயன்படுத்தப்பட்டுள்ளது. கதைகளுக்கும் காந்திக்கும் உள்ள நிஜமான சம்மந்தம் அதுதான்.

நல்ல கவிதை எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றிச் சொல்லும்போது டபிள்யூ.பி.யேட்ஸ் ஒரு கவிந
தயில் சொல்லுவான் :

If it does not seem a moment's thought
Our stitching and unstitching has been naught

என்று. ஒரு நல்ல, பொருத்தமான, அழகான உடை, தைக்கப்படுவதற்கு முன், எப்படி தையல்காரனிடம் வே
லை வாங்குகிறதோ அதைப்போல, ஒரு நல்ல கவிதை, தான் எழுதப்படுவதற்கு முன், கவிஞனிடமும் வேலை
வாங்கிவிடுகிறது. ஆனால் அப்படி கஷ்டப்பட்டு செய்யப்பட்ட ஒன்று என்ற எண்ணத்தை finished product தர
க்கூடாது என்று சொல்கிறான். வானத்திலிருந்து ஆடையாகவே வந்து குதித்தமாதிரி இருக்க வேண்டுமாம்.
ரொம்ப அழகாகவும் சூசகமாகவும் சொல்லிவிட்டான்.

ராகவனின் எழுத்தை வாசிக்கும்போது எனக்கு யேட்ஸ் ஞாபகம் வருகிறது. தவிர்க்க முடியாமல். காரணம்
அவரது எழுத்தின் பின்னால் உள்ள உழைப்பு என்னை பிரமிக்க வைக்கிறது. காந்தி பற்றி பேசுவதற்கு
முன்னால் அவர் எழுதிய 16000 பக்கங்களையும் ஒருமுறையாவது படித்துவிட வேண்டும் என்று அவர் சொல்
லும்போது அது காந்தி பற்றி மட்டுமல்லாது ராகவனைப் பற்றியும் சொல்லிவிடுகிறது.

தாகூரின் ஒரு கதையில், ஒரு ஆற்றில் ஒரு குழந்தை விழுந்து ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்டுவிடும்.
அதைத்தேடி ஒருவன் வருவான். வந்து ஆற்றைப் பார்ப்பான். "ஒன்றுமே தெரியாத மாதிரி ஓடிக்கொண்டிருந்
தது ஆறு" என்று கதை முடியும்! ராகவனின் கதைகளின் நீரோட்டமும் இப்படிப்பட்ட ஏமாற்றும் எளிமை கெ
஡ண்டதுதான்.

இந்த தொகுதியில் வரும் எட்டு கதைகளுமே மனித உறவுகளைப் பற்றியதுதான். மனைவியை இழந்த ஒரு
ஆசிரியர் அந்த மடியை ஒரு மாணவன் மூலமாகப் பெறலாம் என்ற குறிப்போடு முடிகிறது 'இருளின் நிறம்
வெண்மை' என்ற கதை.

அழுத்தமான ஒரு விஷயத்தை லேசாகச் சொல்லும்போது அதன் அழுத்தம் கூடிவிடுகிறது. 'பூக்களால் கொ
லை செய்கிறேன்' என்ற கதையில் நடப்பது அதுதான். காதலைக்கூட மதமாற்ற அரசியலுக்கு பயன்படுத்த
விழையும் ஒரு மனதைப் பற்றிய கதை அது. இந்த கதையின் அழுத்தம் அதன் தலைப்பில் இருக்கிறது.

மனித மனம் எடுக்கும் சில முடிவுகளுக்கு காரண காரியங்கள் கற்பிக்க முடியாது. துறவு நிலைக்குப் போகும்
கணமும் அப்படிப்பட்டதுதான். ஆனால் பரிபூரணத் துறவு சாத்தியமா என்ற கேள்வியை முன்வைத்து நகர்கிறது
அண்ணன் தம்பி உறவை மையமாக வைத்த, 'கூறாமல் சந்யாசம்' கதை.

ஒரு கோட்டை அழிக்காமல் சின்னதாக்க பக்கத்தில் ஒரு பெரிய கோடு போடலாம் என்பது நமக்குத் தெரி
யும். ஆனால் மனிதனுக்கு வரும் பிரச்சனைகளுக்கும் அந்த உத்தியைப் பயன்படுத்தலாம் அல்லவா? அதை
மையமாக வைத்து இயங்குகிறது போக்குவரத்துக் காவலரை நாயகனாகக் கொண்ட 'மூன்று காதல்கள்' கந
த.

பெற்றோரின் வசவு தாங்காமல் தற்கொலைக்கு முயலும் சின்னப்பயலின் கதை 'யுவர்ஸ் ஒபீடியண்ட்லி'. வயிறு
வலிக்க வலிக்க என்னைச் சிரிக்க வைத்த கதை இது. ராகவன் ப்ராண்ட் நகைச்சுவையை இதில் முழுமைய
஡க ரசித்து அனுபவிக்கலாம்.

நாட்டுப்பற்று கொண்ட ஒரு நீதிபதி சுதந்திர போரட்டத்தில் கலந்துகொள்ள முடியாமல், சுதந்திரதி
னமன்றுகூட இந்தியாவில் இல்லாமல் போனது பற்றிய வருத்தம் பற்றிய கதையாக பரிணமிக்கிறது 'வாசல்
வரை வந்த கனவு' கதை. ஒரு பதவி தரும் வாய்ப்புகளுக்கும் அதன் பின்னால் இருக்கும் நேர்மையின்மைக்
கும் இடையில் மனசாட்சியுடன் போராடும் ஒரு மனிதன்தான் இந்த கதையின் நாயகன். இவன் படிக்கும் பல
பேருடைய மனசாட்சியை நிச்சயம் உலுக்குவான்.

தன் வாழ்க்கையை ஓட்ட மெரீனா கடற்கரையில் குதிரை ஓட்டும் ஒருவன், காசுக்காக தன் தந்தைக்கே வா
ழ்க்கைப்பட்ட தான் காதலித்த பெண்ணொருத்தியை குழந்தையோடு சந்திக்கிறான். இன்னும் அவள் காசுக்
காக ஓடும் குதிரையாகவே இருப்பதை அறிந்து விலகுகிறான். இது 'குதிரைகளின் கதை'.

புகழுக்கும் பெண்ணுக்கும் ஆசைப்படும் தமிழாசிரியரின் கதைதான் 'புலவர் ஷேக்ஸ்பியர்'.

ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வில் ஏதாவதொரு பிடிப்பு தேவைப்படுகிறது. அந்த பிடிப்பு எத்தனை வடிவங்கள்
எடுக்கலாம் என்று இந்த கதைகளைப் படிக்கும்போது புரிந்துகொள்ள முடிகிறது. காந்தி தன் சுயசரிதையில்
I jealously guarded my character என்று கூறுவார். அதுதான் அவரது பிடிப்பு. அவரது ஊன்றுகோல் அதுதான்.
அப்படிப்பட்ட பிடிப்பு ஒவ்வொரு மனிதனுக்கும் தேவை என்பதை உணர்த்தும் வாழ்வின் மீதான தத்துவப்பார்
வை கொண்டதாக இக்கதைகள் விரிகின்றன.

கடைசியாக கொசுறாக ஒரு செய்தி.

ராகவனுக்கு கவிதைகள் என்றால் அலர்ஜி என்று அவரே பலமுறை சொல்லியிருக்கிறார். ஆனாலும் அவர்
மரபுப்படி விருத்தப் பாக்கள் எழுதுவார். ரம்பா பற்றியும் ரோஜா பற்றியும். போகட்டும். ஆனால் அவர் கவிதை
ஏன் எழுதவில்லை என்று என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. கீழே வரும் வரிகளைப் பாருங்கள் :

"மனத்தின் வெகு ஆழப்பள்ளங்களில் இன்னும் அவன் சலிக்காமல் படகு ஓட்டிக்கொண்டிருந்தான்...குணம் ம
஡றியிருக்காது நிச்சயம். அலுத்துப் போகிறதென்று பூக்கள் வாசனையை மாற்றிக்கொள்ளுமா என்ன?"

இப்படி எழுதுபவர் கவிதை என்று வேறு தனியாக எழுத வேண்டுமா என்ன?

|

Tuesday, May 25, 2004

அடுத்த வினாடி 

என்னுடைய அடுத்த விநாடி என்ற நூலில் இருந்து ஒரு அத்தியாயத்தை தருகிறேன். பிடித்திருந்தால் தொடர்ந்து தருவேன். ஏற்கனவே சபரி வெளியீடாக வந்த இந்த நூல், சீக்கிரமே கிழக்கு பதிப்பக வெளியீடாக வர இருக்கிறது.

அத்தியாயம் - 1
ஒரு ரகசியம்

எந்த ஒரு காரியமும் செய்வதற்கு முன் வேறு சில காரியங்களைச் செய்ய வேண்டிது அவசியமாகிறது. உதராணமாக சாப்பிட வேண்டுமானால் அதற்கு முன் கைகழுவிக்கொள்ள வேண்டும். அந்தப் பழக்கம் இல்லாதவர்கள் குறைந்த பட்சம் தட்டை அல்லது இலையையாவது எடுத்து வைத்துக்கொள்ள வேண்டுமல்லவா? அதைப்போல ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்வதற்குமுன் அதோடு சம்பந்தப்பட்ட வேறு சில விஷயங்களைப் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. ஆகவே மன்னிக்க வேண்டும், ரகசியத்தை இப்போதே சொல்லிவிட முடியாத சூழ்நிலை உள்ளது. காரணம், அதை உங்கள் காதுகளுக்கு மட்டும் சொல்லிவிடுவதற்கு முன் அந்த ரகசியம் சம்பந்தப்பட்ட வேறுசில ரகசியங்களைச் சொல்லவேண்டியுள்ளது! அப்பாடா, பீடிகை முடிந்து விட்டது. இனி உள்ளே போய்விட வேண்டியதுதான்.

சில வார்த்தைகள் உள்ளன. அவைகள் உண்மையில் வார்த்தைகளே அல்ல. ஒவ்வொன்றும் ஒரு காவியம். இதை வெறும் புகழ்ச்சிக்காகச் சொல்லவில்லை. அந்த வார்த்தைக்குள் அவ்வளவு விஷயங்கள் அடக்கிவைக்கப் பட்டுள்ளன என்று அர்த்தம். அவைகளை மொழிபெயர்க்கக்கூட முடியாது. Self-defeating behaviour என்பது அதில் ஒன்று. நம்மை நாமே தோற்கடித்துக் கொள்ளும்படியாக உள்ள நமது நடவடிக்கைகள் என்று இதைச்சொல்லலாம். அப்படிப்பட்ட நடவடிக்கைகள் என்னென்னெ என்று தெளிவாக விளக்க வேண்டுமென்றால் கம்பராமாயணத்தின் ஆறு காண்டங்களையும் விட அதிகமாக எழுதலாம். அவ்வளவு எண்ணற்ற, தவறான நடவடிக்கைகளை நாம் நம்முடைய 'கருவூல'த்தில் சேர்த்து வைத்திருக்கிறோம் ! அவற்றையெல்லாம் பட்டியலிட்டு சொன்ன பிறகும் கொஞ்சம்கூட அது என்ன என்ற தெளிவோ அறிவோ வராத சாதனையாளர்களை நாம் ஒன்றும் செய்ய முடியாது. இந்த சின்ன புத்தகம் அவர்களுக்காக அல்ல. புரிந்து விட்டது என்று மார்தட்டிக் கொள்வதற்காகவோ மாலைபோட்டுக் கொள்வதற்காகவோகூட அல்ல.

புரிந்து கொள்வது முதல் கட்டம். புரிந்ததைப் பின்பற்றுவது இரண்டாவது கட்டம். இந்த இரண்டையும் செய்பவர்களுக்காகத்தான் இந்த புத்தகம். அதாவது வாழவேண்டும், வாழ்ந்து காட்டவேண்டும் என்ற ஆசை, ம்ஹ¤ம், வெறி கொண்டவர்களுக்காக இந்த புத்தகம்.

இந்த புத்தகம் வெற்றியடைந்த மனிதர்களின் வாழ்க்கையிலிருந்து, அனுபவங்களிலிருந்து உருவானது. இந்த பட்டியலில் என்னையும் சேர்த்துக்கொள்ளலாம். இந்த புத்தகத்தைப் படித்து முடித்த பிறகு, மிகைப்படுத்தப்பட்டதைப் போலத் தோன்றுகின்ற இந்த கூற்று உண்மையானதே என்பதைப் புரிந்து கொள்ள முடியும் என்றே நம்புகிறேன். காரணம் சுயமுன்னேற்றம் சம்பந்தப்பட்ட மற்ற புத்தகங்களுக்கும் இதற்கும் ஒரு முக்கிய வேற்றுமை இருக்கிறது.

மற்ற புத்தகங்கள் உங்களை அன்றாடம் அரை மணி நேரம் தியானம் செய்யுங்கள் என்று சொன்னால், இந்த புத்தகம் தியானம் என்றால் என்ன, அதை எப்படிச்செய்வது, எந்த நேரத்தில் செய்வது, எவ்வளவு நேரம் செய்வது என்று செய்முறை விளக்கங்களையெல்லாம் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கும். மற்ற புத்தகங்கள் ஒரு கால்மணி நேரம் தினமும் மூச்சுப் பயிற்சியில் ஈடுபடுங்கள் என்று கூறினால், இந்த புத்தகம், எப்படி மூச்சு விட வேண்டும், இவ்வளவு காலமாக தப்புத் தப்பாக மூச்சு விட்டுக்கொண்டிருந்ததனால் எப்படி நமக்கு வரவேண்டிய வாய்ப்புகள் எல்லாம் வராமல் நழுவிப்போனது, எப்படியெல்லாம் நமது வாழ்க்கை திசைமாறிப்போனது, நாம் விடுகின்ற மூச்சுக்கும் நமது வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம் என்பதையெல்லாம் விளக்கிச் சொல்லும். ஒரு விஷயம் சம்பந்தப்பட்ட எல்லாக் கதவுகளையும் இது திறக்கும். உங்கள் மூச்சடைப்பை நீக்கும். உங்களை நிம்மதிப் பெருமூச்சு விடவைக்கும்.

நீச்சலடிப்பது எப்படி என்று விளக்குவதோடு மட்டும் நின்றுவிடாமல் தண்ணீருக்குள்ளும் உங்களைத் தள்ளிவிடும். மூழ்கி மூச்சுத்திணறி சாகடிப்பதற்கல்ல. நீச்சல் கற்றுக்கொடுக்கத்தான். அதுவும் நீங்கள் பார்க்காதபோது பின்பக்கமாக வந்து முதுகைப் பிடித்து தள்ளிவிடாது. நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே உங்கள் கையை மெல்லப் பிடித்து அழைத்துச் சென்று நீருக்குள் நம்பிக்கையுடன் இறக்கிவிடும்.

எனவே இந்த புத்தகம் உங்கள் வசதிக்காக இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப் பட்டுள்ளது. முதல் பகுதி நீங்கள் புரிந்து கொள்ளவேண்டிய, தெளிந்து கொள்ளவேண்டிய விஷயங்கள். இரண்டாம் பகுதி, நீங்கள் பின்பற்ற வேண்டிய செயல்முறைகள். வாழ்வில் வெற்றிபெறுவதற்காக அன்றாடம் செய்ய வேண்டிய சின்னச் சின்ன விஷயங்கள். உங்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தப்போகிற சின்னச் சின்ன விஷயங்கள். தனியாகச் செய்ய வேண்டியவை மற்றும் சமுதாய, குடும்ப வாழ்வின் ஓட்டத்திலேயே செய்ய வேண்டியவை என.

ரகசியத்தை சொல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது. உங்கள் அல்லது எல்லார் வாழ்க்கையின் வெற்றியின் ரகசியம் இதுதான் :

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தோல்வி அடைவதற்கு எவ்வளவு சக்தி தேவையோ அதில் பாதி இருந்தால் போதும் நீங்கள் வெற்றிஅடைந்துவிடலாம் !

இதுதான் ரகசியம். இந்த ரகசியத்தை நீங்கள் யாரிடம் வேண்டுமானாலும் சொல்லலாம். அப்போதும்கூட அது ரகசியமாகவே இருக்கும் ! ஆமாம். எப்போது நீங்கள் கொடுக்கப்பட்ட உண்மையை உங்கள் வாழ்க்கையில் பின்பற்றி அதாவது 'டெஸ்ட்' பண்ணிப் பார்க்கவில்லையோ அப்போது அது வெறும் ஏட்டுச் சுரைக்காய்தானே? சொல்லப்பட்டது உண்மையாக இருக்கும் பட்சம், அந்த உண்மை பின்பற்றப் படாத வரையில், அதாவது உங்கள் சொந்த அனுபவமாக அது மாறாத வரையில் அது ரகசியம்தானே?

ஆனால் புரிந்து கொள்வதற்கும் பின்பற்றுவதற்கும் இடையில் நிறைய இடைவெளி உள்ளது. முதலில் நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு உங்களைத் தயார் படுத்திக்கொள்ள வேண்டும். அதற்காகத்தான் முதல் பகுதி. பின்பற்றுதலுக்காக இரண்டாம் பகுதி.

இப்போது மறுபடி ரகசியத்திற்கு வருவோம். அதாவது நாம் வாழ்க்கையில் வெற்றி அடைவதற்கு எவ்வளவு சக்தி தேவையோ அதைவிட அதிகமான சக்தியைச் செலவு செய்கிறோம் என்பது மட்டுமல்லாமல் அதன் காரணமாகவே தோற்றும் போய்க்கொண்டிருக்கிறோம்! இது உண்மையா? வாழ்க்கையில் நாம் தோல்வியடைவதற்கான காரணங்கள் என்று நெப்போலியன் ஹில் 31 காரணங்களைச் சொல்கிறார். அவைகள் என்னென்ன என்பது இப்போது நமக்குத் தேவையில்லாதது.

ஆனால் அதே நெப்போலியன் ஹில் வாழ்வில் வெற்றி பெறுவதற்கான காரணங்களாக 13ஐத்தான் சொல்கிறார் ! அதாவது 31 விதங்களில் தோல்வியை நம்மை நோக்கி இழுக்கின்ற நாம் அதில் பாதியைவிடக் குறைவான காரணங்களைக் கொண்டு வெற்றியடைந்து விடுகிறோம் ! அதாவது தோல்வியடைவதற்காக செலவு செய்கின்ற சக்தியில் பாதியைவ்¢டக் குறைவாக செலவு செய்து வெற்றி அடைந்துவிட முடியும் ! உரைத்துப் பார்த்து இந்த உண்மை சுத்தமான தங்கம்தான் என்பது தெரிந்துவிட்ட அடுத்த வினாடியே...இருங்கள் அதற்கு முன் ஒரு விஷயம் சொல்ல வேண்டும்.

ராபியதுல் பஸரியா என்று ஈராக் நாட்டில் ஒரு பெண் ஞானி இருந்தார். அவர் ஒரு நாள் தெருவில் போய்க்கொண்டிருந்தார். அப்போது அவர்காலத்திலேயே வாழ்ந்த இன்னொரு ஞானி ஒருவர் தொழுதுவிட்டு கைகளை ஏந்தி இறைவனிடம் பிரார்த்தனை புரிந்து கொண்டிருந்தார் : "இறைவா ! எனக்கு வெற்றியின் கதவுகளைத் திறந்துவிடுவாயாக ! உன் கருணையின் கதவுகளைத் திறப்பாயாக ! " என்று. அதைக் கேட்ட ராவியதுல் பஸரியா பிரார்த்தித்துக் கொண்டிருந்த அந்த ஞானியின் தலையில் ஓங்கிக் குட்டினார். வலியோடும் கோபத்தோடும் யார் அப்படிச் செய்தது என்று பார்க்கத் திரும்பிய அந்த ஞானியைப் பார்த்து ராபியா சொன்னார் : "இன்னும் எவ்வளவு காலத்துக்கு இப்படி முட்டாள்தனமாகப் பிரார்த்தித்துக் கொண்டிருப்பாய்? வெற்றியின் கதவுகளும் கருணையின் கதவுகளும் என்றைக்கு மூடியிருந்தன? அவைகள் எப்போதுமே திறந்தேதான் உள்ளன."

ஆம். அவர் சொன்னது சரிதான். அவைகள் என்றைக்குமே மூடியிருந்ததில்லை. அவைகள் நம்மை வந்து சேர்ந்துவிடாமல் நாம்தான் நமது தவறுகளாலும் முட்டாள்தனங்களாலும் நம்முடைய கதவுகளை இழுத்து மூடிக்கொள்கிறோம். பானையை கவிழ்த்தி வைத்திருந்தாலோ ஓட்டைப் பானையை வைத்தாலோ எவ்வளவுதான் மழை பெய்தாலும் பானை நிறையுமா?

நம்முடைய எதிர்மறை எண்ணங்கள், எதிர்மறை உணர்வுகள், எதிர்மறை பழக்கங்கள் என்று நம்முடைய வெற்றிக்கும் சந்தோஷத்திற்கும் எதிர்மறையாக நிற்கும், பிடிவாதமாக இறுக்கமாக மூடிவைத்திருக்கும் எல்லா ஜன்னல்களையும் திறக்க வேண்டும். அல்லது தேவைப்பட்டால் உடைக்க வேண்டும். ஜன்னல்களாகவோ கதவுகளாகவோ அவை இருந்தால்கூடப் பரவாயில்லை. சமயங்களில் அவை சீனப்பெருஞ்சுவர்களாக அல்லவா உள்ளன?! தெளிவு என்னும் குண்டு வைத்துத்தான் அவைகளைத் தகர்க்க வேண்டும். திறந்த உடனேயே அல்லது தகர்த்த உடனேயே தெரிந்துவிடும் நமக்கான வெளிச்சம் இவ்வளவு காலமாக வெளியே நமக்காக காத்துக் கொண்டுதான் இருந்ததென்று !

நமது சக்திகளையெல்லாம் ஒன்று திரட்டி, நம் கதவுகளையும் ஜன்னல்களையும் நாம் சாத்திக்கொண்டிருக்கிறோம். சமயங்களில் திறப்பதாக நினைத்துகூட நாம் மூடிவிடுகிறோம்."ஜன்னலைத்திற, காற்று வரட்டும்" என்று பசுவய்யா ஒரு கவிதைகூட எழுதினார். வெற்றியின் காற்றும் வெளிச்சமும் படாமல் புழுங்கித் தவித்துக்கொண்டிருக்கிறோம். அவைகளைப் புரிந்துவிட்ட, திறந்து விட்ட அடுத்த வினாடி வெற்றி தவிர நமக்கு வேறெதுவும் இல்லை என்பது புரியும். அதைப் புரியவைக்கத்தான் இந்த புத்தகம்.

வெற்றியாகவும் சந்தோஷமாகவும் வாழத்தெரிந்தவர்களே அறிவுள்ளவர்கள். அவர்களை ஞானிகள் என்று கூடச்சொல்லலாம். இதைப்புரிந்து கொள்ளாதவர்கள் எவ்வளவு படித்தவர்களாக இருந்தாலும் பைசாவுக்குப் பிரயோஜனம் கிடையாது. இப்படிப்பட்டவர்கள் போதி மரத்தின் அடியில் புத்தரைப்போல அமர்ந்தாலும் ஞானம் வராது. சுகமான தூக்கம்தான் வரும். எனவே வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற துடிப்புள்ளவர்கள் மட்டுமே புரிந்துகொள்வார்கள். அவர்களுக்காகத்தான் இந்த புத்தகம்.

'துடிப்புள்ளவர்கள்' என்றவுடன் உடனே அப்படிப்பட்டவர்கள் இளைஞர்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. தினந்தந்தியில் "அழகி கொலை" என்று வருமே, அவர்களெல்லாம் உண்மையில் அழகிகளா என்ன? வார்த்தைகளைப் பிடித்துக்கொண்டு நாம் எப்போதுமே தொங்கிவிடவோ தங்கிவிடவோ கூடாது. வேறுமாதிரியாகச் சொல்வதானால், வாழவேண்டும், வெற்றி பெறவேண்டும் என்ற துடிப்புள்ள அனைவருமே இளைஞர்கள்தான். அவர்களுக்கு எவ்வளவு வயதாகியிருந்தாலும் சரி !

ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்களுண்டு என்பதுபோல 'சாதிப்பது' என்பதிலும் இரண்டு வகையுண்டு. ஒரு திருடனைப் பிடித்து வைத்துக்கொண்டு கேள்விகள் கேட்கும்போது, அவன் அந்த பொருளை எடுக்கவேயில்லை என்று சொல்வான். எங்கள் ஊரில், "எடுக்கவே இல்லைன்னு சாதிக்கிறான்" என்பார்கள் ! அந்த மாதிரி 'சாதனை' பற்றி நான் சொல்ல வரவில்லை. சாதனையின் முன்பக்கத்தைப்பற்றிப் பேசுகிறேன்.

பிறந்து, வளர்ந்து, எப்படியோ படித்து, அல்லது படிக்காமல், ஏதோ வேலைபார்த்து அல்லது பார்க்காமல், ஏதோ சம்பாதித்து அல்லது சம்பாதிக்காமல், திருமணம் செய்து அல்லது செய்யாமல், குழந்தைகளைப் பெற்று அல்லது பெறாமல், முதுமையடைந்து, நோயுற்று அல்லது நோயுறாமல், கடைசியில் செத்துப்போய் மறக்கப்படுபவர்களை வாழ்ந்தவர்கள் என்ற பட்டியலில் சேர்க்க முடியாது. இப்படிப்பட்டவர்களெல்லாம் சும்மா மூச்சுமட்டும் விட்டுக்கொண்டிருந்தவர்கள். 'கோமா'வில் இருப்பவர்கள். உயிரோடு இருப்பது வேறு வாழ்வது என்பது வேறு.

இந்த வாழ்க்கை ஓட்டத்திலேயே குறைந்த பட்சமாக தனக்கும் தன் குடும்பத்தாருக்கும், அதிகபட்சமாக தன் சமுதாயத்துக்கும் அல்லது இந்த அகில உலகத்துக்கும் ஒரு நிரந்தரமான நன்மையைச் செய்து போனவர்களை, லட்சியம் கொண்டு வாழ்ந்தவர்களைத்தான் சாதனையாளர்கள், வாழ்ந்தவர்கள் என்று சொல்லவேண்டும்.

மனிதனுக்கும் மனிதன் அல்லாதவற்றுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடே சிந்தனைதான். "சிந்திப்பவர்கள் சாவதில்லை. சிந்திக்காதவர்கள் ஏற்கனவே செத்துப்போனவர்கள்" என்று புத்தரின் தம்மபதம் கூறுகிறது. உண்மைதான். அரித்தால் சொரிகின்ற வேலையைக்கூட அடுத்தவனை செய்யச் சொல்லலாம். ஆனால் சிந்திக்கின்ற வேலையை மட்டும் நாம்தான் செய்ய வேண்டும். சிந்திக்கின்ற மனிதன்தான் லட்சியம் வைப்பான். லட்சியம் என்பது சும்மா தெருவில் போகும்போது பொழுதுபோக்காக நினைப்பதல்ல. ஒரு லாடம் கிடைத்தவுடன் குதிரை வாங்க நினைத்தோமெனில் அதற்குப் பெயர் லட்சியம் அல்ல. லட்சியம் என்பது நமது வெற்றிக்காகவும் சந்தோஷத்திற்காகவும் நாமே உருவாக்குவது. நமக்குள் வந்து புகுவதல்ல. இப்படிப்பட்ட லட்சியம் கொண்ட மனிதன்தான் வெற்றியை விரும்புபவனாகவும் தோல்வியை விரும்பாதவனாகவும் இருக்கிறான்.

சிந்திக்கின்ற மனிதன் ஆற்றைப் போன்றவன். சிந்திக்காத மனிதன் சாலையைப் போன்றவன். சாலை என்பது ஏற்கனவே போடப்பட்ட பாதை. அதில் மாற்றமோ வளர்ச்சியோ கிடையாது. ஆனால் ஆறு அப்படியல்ல. அது தனக்கான பாதையை தானே உருவாக்கிக் கொள்கிறது. அதைப்போல தனக்கான வெற்றிப்பாதையை தானே உருவாக்கிக்கொள்ள பாடுபடுகின்ற மனிதனே வெற்றியாளன். ஆனால் தனியாக ஒரு பாதையை உருவாக்குவது ஏற்கனவே போடப்பட்ட சாலையில் செல்வதைப்போல எளிமையான காரியமல்ல. பல கஷ்டங்களை அதில் அனுபவித்தே ஆகவேண்டும். அதையெல்லாம் மீறி வரும்போதுதான் வெற்றியின் உண்மையான சுவையை உணர முடியும்.

வாழ்க்கை ஒரு ரோஜாப்பூப் படுக்கையாக மட்டும் இருக்க வேண்டும் என்று நினைப்பது முட்டாள்தனமன்றி வேறெதுவுமில்லை. "எந்த உழைப்புமில்லாமல், எந்த வேலையும் செய்யாமல், எந்த சிந்தனையும் செய்யாமல் பணக்காரராக ஆகவேண்டுமா? உடனே இங்கே வாருங்கள்" என்று முல்லா சொன்னதைக்கேட்டு நிறையபேர் அவர் நின்றுகொண்டிருந்த மரத்தருகில் கூடினர். எல்லோரையும் பார்த்துவிட்டு முல்லா ஒன்றும் சொல்லாமல் கீழே இறங்கிப் போனார்.

"என்ன முல்லா, எதுவுமே செய்யாமல் செல்வந்தனாக ஆவது எப்படி என்று கேட்டுவிட்டு, ஒன்றும் சொல்லாமல் போகின்றீரே, என்ன விஷயம்?" என்று வந்தவர்கள் கேட்டதற்கு முல்லா," ஒன்றுமில்லை, இந்த ஊரில் எத்தனை முட்டாள்கள் இருக்கிறார்கள் தெரிந்துகொள்ள ஆசைப்பட்டேன். தெரிந்துவிட்டது. அதுதான் வேலைமுடிந்து போகிறேன்" என்றாராம்! வாழ்க்கை ரோஜாப்பூக்களால் ஆனதல்லதான். ஆனால் கல்லையும் முள்ளையும் காலுக்கு மெத்தையாக ஆக்குகின்ற வித்தை அய்யப்ப பக்தர்களுக்கு மட்டும் உரியதல்ல. வெற்றியின் உபாசகர்களுக்கும் உரியதே.

பிரச்சனையே இல்லாத ஒரு வாழ்க்கை என்றால் அது மரணம்தான். தடைகளை எதிர்கொண்டு அவைகளை அடக்கி, அவைகளின் மீதேறி சவாரி செய்வதுதான் மனிதனுக்குப் பெருமை. வாழ்க்கையில் பிரச்சனை என்று ஒன்றுமில்லை. அதெல்லாம் கற்பனை என்றெல்லாம் அழகான, கவர்ச்சியான எங்கும் எடுத்துச் செல்லத்தக்க பாலிதீன் பொய்களை அள்ளித்தருவது இந்த புத்தகத்தின் நோக்கமல்ல.

மாறாக, பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் மனிதன் தீர்க்கமுடியாத பிரச்சனை என்று ஒன்று இந்த உலகத்தில் இருந்ததாக வரலாறே கிடையாது. பிரச்சனையைத் தீர்க்க காலம் ஆகியிருக்கலாம். அது வேறு விஷயம். ஆனால் எப்படிப்பட்ட பிரச்சனையையும் தீர்த்து வெற்றி காணமுடியும். அப்படி வெற்றி கண்டவர்கள் நமக்கு வழிகாட்டிகளாக இருக்கிறார்கள். அவர்கள் தெரிந்தோ தெரியாமலோ பின்பற்றிய விதிகளை நாமும் பின்பற்றினால் - தெரிந்தேதான் - வெற்றி நிச்சயம்.

சரி, மனிதனுக்கு எத்தனையோவிதமான பிரச்சனைகள் வருகின்றன.ஆனால் பொதுவாக எல்லாப் பிரச்சனைகளுக்கும் பொருந்துமாறு பிரச்சனை என்றால் என்ன என்று ஒரு வரையறையை வகுத்துக்கொள்ள முடியுமா? முடியும். பிரச்சனை என்பது பதில் இல்லாத ஒரு கேள்வி. அதாவது தற்போதைக்கு. தற்காலிகமாக. இப்போது அதற்கு பதில் இல்லை. பதில் தெரிந்துவிட்டாலோ, தெரிந்துவிடும் என்ற நம்பிக்கை வந்துவிட்டாலோ, அல்லது தெரியாவிட்டாலும் பரவாயில்லை என்று ஆகிவிட்டாலோ அது பிரச்சனையில்லை. இவ்வளவு சுலபமா என்றால் ஆமாம். பிரச்சனையின் தீவிரம் பிரச்சனையில் இல்லை. அதை நாம் பிரச்சனையாக எடுத்துக்கொள்வதில்தான் உள்ளது.

கணக்கு வாத்தியார் தனக்கு கஷ்டமாக உள்ள 'பிரச்சனை'களை, அதாவது கணக்குகளை, ராமானுஜத்தைக் கூப்பிட்டு, பந்தாவாக, ''ராமானுஜம், இதை நீ வந்து போடு'' என்று உத்தரவு கொடுத்துவிட்டு தப்பித்துக்கொள்வாராம். அவருக்குத் தெரியும். எப்படியும் ராமானுஜம் போட்டுவிடுவார் என. அவரைப் பொறுத்த அளவில் பிரச்சனை ராமானுஜத்தைக் கூப்பிடுவதோடு முடிந்துவிட்டது. கணிதமேதை ராமானுஜம் வாத்தியார் கூப்பிட்டதும் பவ்யமாக வந்து சாக்பீசை எடுத்து கரும்பலகையில் எழுதி இருந்ததையெல்லாம் அழித்துவிட்டு(சாக்பீஸால் அல்ல), முற்றிலும் புதிய பாணியில், ஆசிரியருக்கே விளங்காத புதிய முறையில், ரொம்பவும் சுருக்கமாக, அதே கணக்கை போட்டு முடிப்பாராம்.

இங்கே நாம் கவனிக்க வேண்டியது ராமானுஜத்தின் மூளையை மட்டுமல்ல. ஒரே பிரச்சனையை இருவர் எடுத்துக்கொள்கிறார்கள். ஒருவர் கைவிட்டு விடுகிறார் தீர்க்கமுடியவில்லை என்று. இன்னொருவரோ மிகச்சுலபமாகத் தீர்த்துவிடுகிறார். அப்போ பிரச்சனை உண்மையில் சுலபமானதா கஷ்டமானதா? சின்னதா பெரியதா? இரண்டுமேதான். ஆமாம். பிரச்சனையைத் தீர்க்க நினைக்கின்ற மனதைப் பொருத்து பிரச்சனையும் சின்னதாகவோ பெரியதாகவோ ஆகிவிடுகிறது என்பதுதான் உண்மை.

பிரச்சனையின் முன்னே கூனிக்குறுகி சிறுத்துப் போவதற்காக மனிதன் பிறப்பெடுக்கவில்லை. ஒவ்வொரு பெண்ணும் ஆணும் கூடும்போது ஒரு கோடி உயிரணுக்கள் விந்திலிருந்து பாய்ந்து பெண்ணின் கருமுட்டைக்குள் புக முயற்சிக்கின்றன. ஆனால் அந்த ஒரு கோடியில் 'ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு'தான் ஜெயிக்கிறது. மற்ற அனைத்தும் கோட்டைக்குள் நுழைய முடியாமல் தோற்று உயிரை விட்டுவிடுகின்றன. இதை நான் சொல்லவில்லை. விஞ்ஞானம் சொல்லுகிறது. மனிதனுடைய பிறப்பே கடுமையான போட்டியில்தான் துவங்குகிறது. ஆக, மனிதப் பிறப்பே ஒரு மாபெரும் வெற்றியின் அடையாளமாக, விளைவாக உள்ளது. அப்படி கோடியில் ஒருவனாக - ஆயிரத்தில் ஒருவனாக அல்ல - உருவாகும் நீங்கள் எப்படி வாழவேண்டும்?

" ஒவ்வொருவர் உள்ளத்திலும் இறைவன் உறைகிறான் " என்று பகவத் கீதை (18 : 61) கூறுகிறது. மனிதன் தனது நேரடி பிரதி நிதி என்று இறைவன் சொல்வதாக புனித குர்ஆன் (சூரா பகரா) கூறுகிறது. அப்படியெனில், இறைவனுடைய கம்பெனிக்கு எம்.டி.யாக இருக்கின்ற மனிதன் எப்படி வாழ்வது? வறுமை, நோய் போன்ற துன்பங்களில் உழன்றுகொண்டா? இல்லவே இல்லை. வெற்றிமேல் வெற்றி பெற்று வெற்றியைத் தவிர வேறு எதுவும் அறியாதவர்களாக வாழவேண்டும். மற்றவர்களையும் வாழ வைக்க வேண்டும்.

அப்படியானால் நம்முடைய வெற்றிக்கு தடையாக இருக்கின்ற கற்கள், பாறைகள், சுவர்கள், கோட்டைகள் அனைத்தையும் அவை என்னென்ன, எங்குள்ளன, எப்படிப்பட்டவை என்று தெளிவாகத் தெரிந்துகொண்டு ஒவ்வொன்றாகத் தகர்க்க வேண்டும்.

வெற்றி என்பது நாம் தனியாக உருவாக்க வேண்டிய ஒன்றல்ல. சிற்பி ஒருவன் ஒரு பாறையைச் செதுக்கி சிற்பமொன்றை உருவாக்குவது போன்றதுதான் வெற்றியும். உண்மையில் அவன் சிற்பத்தை உருவாக்கவில்லை. அந்த பாறைக்குள்ளேதான் அது ஒளிந்துகொண்டுள்ளது. அதற்குத் தேவையில்லாத பகுதிகளை மட்டும் அவன் உளிகொண்டு கழித்துவிடுகிறான். அவன் செய்வதெல்லாம் அவ்வளவுதான். அதன்பின் உள்ளே உள்ள சிற்பம் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது.

அதேபோல, ஒரு விஷயத்தில் வெற்றி பெற வேண்டுமென்றால் நாம் வெற்றியைப் பற்றியே சிந்திக்க வேண்டியதில்லை. வெற்றி பெறமுடியாமல் நம்மைத் தடுப்பது எது என்று யோசித்தால் போதும். வெற்றியை மூடிமறைக்கிற குறைகளை, அழுக்குகளை நீக்கிவிட்டால் போதும். இதைப் புரிந்துகொள்ளாத வரையில் வெற்றி ஒளிந்துகொண்டுதான் இருக்கும். புரிந்துகொள்வதற்காகத்தான் இந்த புத்தகம்.

சுயமுன்னேற்றம் பற்றி ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இன்று வெளிவந்து கொண்டிருக்கின்றன. சாயங்கால வேளைகளின் சூடான வடை பஜ்ஜியைப் போல அவை விற்றும் போகின்றன. இதெல்லாம் எதைக்காட்டுகிறது? சிந்திக்கின்ற ஒவ்வொரு மனிதனும் யாராவது சரியான பாதையைக் காட்டமாட்டார்களா என்று ஏங்கித் தவிப்பதையே இது காட்டுகிறது. "முப்பது நாளில் உர்து பாஷை" என்பதுபோல "முப்பது நாளில் வெற்றி" என்று தலைப்பிடப்பட்ட புத்தகம்கூட முப்பத்து ஓராவது நாள் விற்றுத்தீர்ந்து விடுகிறது. வெற்றி, புத்தகம் எழுதியவனுக்கா வாசித்தவனுக்கா என்பது அனைவரும் அறிந்த ஒரு 'திறந்த' ரகசியமாக உள்ளது !

இப்படியெல்லாம் நாட்கணக்கில் கூறுபோட்டு யாரும் உங்களுக்கு வெற்றியைத் தரமுடியாது. உங்களுடைய வெற்றி உங்களிடம்தான் உள்ளது. அதன்மீது நீங்கள் ஏகப்பட்ட குப்பைகூளங்களைப் போட்டு மூடி வைத்திருக்கிறீர்கள். அந்த குப்பைகளை எப்படி அகற்றுவது என்று வழிகளைச் சொல்வதுதான் நமது நோக்கம். எனவே இந்த புத்தகம் தருகின்ற உத்தரவாதம்கூட உங்களிடம்தான் உள்ளது. இந்த இடத்தில் ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்ல வேண்டியுள்ளது.

சென்ற 21-01-2003 அன்று Axn டிவியில் Xploring the Unknown என்ற தலைப்பில் ஒரு ப்ரோக்ராம் காட்டினார்கள். அப்போது மாலை ஏழரை மணி இருக்கும். அந்த ப்ரொக்ராமில் பல பேர்களிடம் - பெண்கள், குழந்தைகள் என - ஸ்பூன் ·போர்க் போன்றவற்றைக் கொடுக்க அவற்றை அவர்கள் கேட்டுக்கொண்டபடி கையில் பிடித்து முகத்துக்கு எதிரே வைத்துக்கொண்டார்கள். பின் அந்த ஸ்பூன்களையும் ·போர்க்குகளையும் வளைக்கச் சொன்னார்கள். இன்னொரு கையால் அல்ல. மனசால், ஒருமித்த சிந்தனையால், எண்ணத்தால் !

ஆம். கையில் ஸ்பூன்களையும் ·போர்க்குகளையும் பிடித்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஒரே ஆச்சரியமும் சிரிப்புமாய் இருந்தது. என்றாலும் ப்ரொக்ராம் நடத்தியவர்கள் முயன்று பார்க்கச் சொன்னார்கள். அந்த பெண்களும் குழந்தைகளும் முயன்றார்கள். ஒரு நீக்ரோ சிறுவனும் ஒரு இளம் பெண்ணும் அதில் வெற்றி பெற்றார்கள் ! சிறுவன் கையில் பிடித்திருந்த ·போர்க்கில் ஒரு நாக்கு வளைந்து வெளியே வந்தது ! அந்தப் பெண் கையில் பிடித்திருந்ததோ இரண்டாக மடிந்தேவிட்டது, கூன் விழுந்த மாதிரி !

இதை அவர்கள் psychokinesis என்று சொன்னார்கள்.அவர்கள் என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளட்டும். மனசின் சக்தியால் ஜடப்பொருள்களின்மீது தாக்கம் ஏற்படுத்துவது சாத்தியம் என்பது நிரூபணமாகிவிட்டது. இதுதான் முக்கியம். இந்த விஷயம் யூரிகெல்லர் போன்றவர்களினால் ஏற்கனவே நிரூபணமானதுதான். இது மிகச்சமீபத்திய நிரூபணம். இந்த நிகழ்ச்சியை ஒரு அற்புதம் என்று வைத்துக்கொண்டால், அற்புதம் நிகழ்த்தக்கூடிய சக்தி நமக்குள்ளேதான் இருக்கிறது என்று அர்த்தம். நம்முடைய நினைப்பு எவ்வளவு சக்தி மிகுந்தது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.

கார்ல் கஸ்டவ் யுங் அல்லது யங் என்று ஒரு உளவியலாளர் இருந்தார். அவர் காட்டுவாசிகளிடையே சில ஆண்டுகள் வாழ்ந்து அவர்களுடைய வாழ்க்கை முறையை ஆராய்ந்தார். அவர் கண்ட முடிவுகளை புத்தகங்களாக வெளியிட்டார். அதில் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியை அவர் குறிப்பிடுகிறார். அந்த மலைவாழ் மக்கள் மழை வேண்டும் என்று விரும்பும்போதெல்லாம் ஒரு குறிப்பிட்ட முறைப்படி ஒரு சடங்கைச் செய்தனர்.

ஒரு கும்பலாக வட்டமாக நின்றுகொண்டு, நடனம்போல ஆடிக்கொண்டே ஏதோ சொல்லிக்கொண்டே வந்தனர். அவர்கள் ஆடிவரும் வட்டத்திற்குள் ஈட்டிகளால் ஒரு நீள் வட்டம் வரைந்து கொண்டனர். அதற்குள் சில தாவரங்களைப் போட்டனர். அதை ஈட்டியால் குத்திய வண்ணம் சுற்றிச்சுற்றி வந்தனர்.

அந்த நீள்வட்டமும் அந்த தாவரங்களும் யோனியையும் அதைச் சுற்றி இருக்கும் முடியையும் குறிக்கிறது என்று யங் விளக்குகிறார். இது முக்கியமான விஷயமல்ல. ஆனால் யங் இதையெல்லாம் பார்த்து மனதுக்குள் ரொம்ப சிரித்தார். இந்த சடங்கினால் எப்படி மழை வரும் என்று தன்னைத் தானே கேட்டுக்கொண்டார். ஆனால் ஒரு முறையல்ல. எண்ணற்ற முறைகள் இந்த குறிப்பிட்ட சடங்கை அவர் பார்த்திருக்கிறார். ஒவ்வொரு முறையும் சடங்கு முடியும்போது மழை கொட்டோ கொட்டென்று கொட்டியது !

இதிலிருந்து அவர் ஒரு முடிவுக்கு வருகிறார். அதுதான் நமக்கு இங்கே தேவைப்படுவது. அந்த மக்கள் கும்பலாக நின்றதோ, யோனியை வரைந்ததோ, அதை ஈட்டியால் குத்தியதோ அப்போது ஏதோ சொல்லிக்கொண்டதோ முக்கியமல்ல. அவர்கள் இதையெல்லாம் செய்தபோது அவர்கள் அத்தனை பேருடைய மனங்களும் ஒரு குறிப்பிட்ட நிலையிலேயே இருந்தன. அந்த மன நிலையை நாமும் கொண்டுவந்து விட்டால் அந்த சடங்குகள் இல்லாமலே மழையை வரவழைக்கலாம். அந்த மனநிலைதான் மழைக்குக் காரணம் என்றார்.

இப்போதும்கூட தென்னிந்தியாவின் கடலோரப் பகுதிகளில் வாழ்கின்ற தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட இஸ்லாமியர்களிடையே மழையை வரவழைக்க ''மழை பைத்'' எனப்படுகின்ற ஒரு பிரார்த்தனை முறை உண்டு. அவர்கள் அதை ஓத, மழை வருவதை நான் என் சிறுவயது முதலே அனுபவித்திருக்கிறேன் (நனைந்து)!

அதாவது ஒரு குறிப்பிட்ட மனோநிலை மழையைக் கொண்டுவருகிறது. இன்னொரு குறிப்பிட்ட மனோநிலை இரும்பை வளைக்கிறது. இரும்பை வளைக்கின்ற மனசால், மழையக் கொண்டுவர முடிகிற மனசால், வாய்ப்புகளை வசதிகளை நம்மை நோக்கி வளைக்க முடியாதா? அப்படியானால் நமக்கு வெற்றி வராமல் இவ்வளவு நாள் இருந்ததற்கு யார் அல்லது எது காரணம் ? வெற்றியைத் தடுத்துக் கொண்டிருந்தது எது ? இந்த புரிதல் நிகழும் வினாடியே அதிசயம் நிகழ்கிறது என்பதுதான் உண்மை.

ஒரு நீதிபதி ஒரு வழக்கைக்கேட்டுக்கொண்டிருந்தாராம். வாதியின் வாதங்களைக்கேட்ட பின்பு உடனே தீர்ப்பை எழுத ஆரம்பித்தாராம். என்ன நீதிபதி அவர்களே, நீங்கள் இன்னும் பிரதிவாதி சொல்வதைக் கேட்கவே இல்லையே என்றதற்கு அவர் சொன்னாராம்,''இப்போது நான் ரொம்பத் தெளிவாக இருக்கிறேன். இப்போது பிரதிவாதி சொல்வதையும் கேட்டால் குழப்பம் வந்துவிடும். குழப்பத்தில் சொல்லும் தீர்ப்பு சரியாக அமையாதல்லவா?'' என்றாராம்! நான் சொல்லவரும் புரிந்துகொள்ளல், தெளிவு இப்படிப்பட்டதல்ல.

தண்ணீர் கொதிப்பதற்குத்தான் நேரம் தேவைப்படுகிறது. ஆவியாவதற்கல்ல. புரிதலும் தயாராவதும் அப்படித்தான். கொதிநிலை வந்தவுடனேயே ஆவியாதல் நிகழ்ந்துவிடுகிறது. எனவே அடுத்த வினாடி என்பதுகூட எப்படியாவது சொல்லவேண்டுமே என்பதற்காகத்தான். நமக்கான அதிசயங்களை நாம்தான் நிகழ்த்த வேண்டும். அது அடுத்த வினாடி என்ன, புரிந்துகொண்டுவிட்ட இந்த வினாடியாகக்கூட இருக்கலாம்.


|

Saturday, May 08, 2004

புதிர் அவிழ்க்கும் விரல் 

புதிர் அவிழ்க்கும் விரல்

பாக். ஒரு புதிரின் சரிதம். பா.ராகவன். கிழக்கு பதிப்பகம், சென்னை. முதல் பதிப்பு, ஏப்ரல் 2004. விலை ரூ. 75/-

தீர்க்க முடியாத பிரச்சனை என்று சொல்வதற்கு ஆங்கிலத்தில் It is a Kashmir problem என்று சொல்வார்களாம். நம்முடைய எல்லைப் பிரச்சனையைக்கூட தன்னுடைய மொழிவளர்ச்சியின் எல்லைகளை விரிவுபடுத்தப் பயன்படுத்திக் கொள்கின்ற வெள்ளைக்காரத்தனத்தைப் பாராட்டுவதற்காக இதைச் சொல்லவரவில்லை. அவிழ்க்க முடியாத ஒரு புதிராகத்தான் ரொம்ப காலமாக காஷ்மீர் விஷயம் இருந்து வருகிறது. ஏன் என்று எனக்கு எந்த வரலாற்று ஆசிரியரும் சொல்லவில்லை. (அவருக்குத் தெரிந்தால்தானே சொல்வார்?) ஆனால் இந்த நூல் அந்த புதிரை ரொம்ப எளிதாக அவிழ்த்துவிடுகிறது.

காஷ்மீரில் தொடர்ந்து ஏன்தான் அடித்துக்கொள்கிறார்கள்? குண்டு வைத்துக்கொண்டே இருக்கிறார்களே ஏன்? தமிழ்நாட்டிலிருந்து காஷ்மீர் சென்றவர்கள் தங்களை 'மதராஸி' என்று அறிமுகப்படுத்திக் கொண்டால் பதிலுக்கு காஷ்மீரிகள், "ஓ ஹிந்தி?!" (ஓ, இந்தியனா?!) என்று ஏன் கேட்கிறார்கள்? அப்போ காஷ்மீர் மக்களின் மனதில் இந்தியம் இல்லாததற்கு என்ன காரணம்? பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கு இருக்கின்ற ஜென்மப்பகைக்கு காஷ்மீர்தான் காரணமா? அப்போ காஷ்மீர் பிரச்சனைக்கு என்ன காரணம்? ஏன் காஷ்மீருக்கு அனுப்பப்படும் அமைதிப்புறாக்களெல்லாம் குண்டடிபட்டு சாகின்றன? இதற்கெல்லாம் ரிஷிமூலம், நதிமூலம் என்ன? இப்படி நிறைய கேள்விகள் ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் இருக்கத்தான் செய்கிறது. அதற்கெல்லாம் ஒரு ஆதாரப்பூர்வமான 184பக்க பதில்தான் இந்த நூல்.

ஒரு நாட்டின் அரசியல் வரலாற்றை இப்படிக்கூட சொல்லமுடியுமா? வியப்பாக இருக்கிறது. நான் சரித்திர பாடத்தையே பள்ளிக்கூட நாட்களில் வெறுத்தவன். சரித்திரம் என்பது ஒரு 'போர்' என்ற எண்ணத்தை வளர்த்துக்கொண்டவன். ஆனால் மகத்தான, அதிர்ச்சியூட்டும் உண்மைகள் நிறைந்த ஒரு அற்புதமான பாடத்தை நான் விரும்பாததற்குக் காரணம் என்ன என்று இந்த புத்தகத்தைப் படித்தபோதுதான் புரிந்தது.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முந்தைய காலகட்டத்திலிருந்து தொடங்குகிறது நூல். அதன் தொடர்ச்சியாக காஷ்மீரின் கதை சொல்லப்படுகிறது. பிறகு இந்தியப் பிரிவினை, ஜின்னா, அயூப்கான், பாகிஸ்தானின் தொடர்ச்சியான ஜன நாயகப்படுகொலை, பங்களாதேஷ் பிரிந்தது, அதற்கு இந்தியாவின் உதவி, அதற்கான காரணங்கள், இந்தியா பாகிஸ்தான் யுத்தம், அதற்கான காரணங்கள், இந்தியாவில் அடைக்கலம் புகுந்த 50 லட்சம் பாக்.அகதிகள் என்பது போன்ற புள்ளிவிபரங்கள் என்று இன்றைய முஷர்ர·ப் வரை உள்ள அரசியல் வரலாறு சொல்லப்படுகிறது. நூலின் இறுதியில் தீவிரவாத அமைப்புகள் பற்றிய ஒரு பிற்சேர்க்கையும் உள்ளது.

பிரச்சனைகளுக்கு மத்தியிலும் இந்தியாவின் வளர்ச்சிக்கு அஸ்திவாரமாக இருப்பது ஜனநாயகம். பாகிஸ்தானின் தேக்கத்திற்கும் காரணமாக இருப்பது அந்த உணர்வு இல்லாததுதான் என்பதை ஆழமாக எடுத்துரைக்கிறது.

இப்படிப்பட்ட அரசியல் வரலாற்று நூல்கள் பொதுவாக, ஒரு நல்ல நாவல் மாதிரி, படித்து முடித்துவிடவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதில்லை. காரணம் சொல்லவரும் விஷயம்தான். சுவையோடு சொல்வதற்கான வாய்ப்புகளை மறுக்கும் ஒரு கரு. ஆனால் இந்த நூலை நான் சென்னையிலிருந்து ஒரு மூன்றுமணி நேர ரயில் பயணத்தில் படித்து முடித்துவிட்டேன். ஒரே மூச்சில் என்றுதான் சொல்லவேண்டும்.

காரணம் அந்த எழுத்து. அதில் இழையோடும் நகைச்சுவை. அந்த நகைச்சுவையில் இருந்த உண்மை. அந்த உண்மையில் கலந்திருந்த விமர்சனம். அந்த விமர்சனத்தில் தொனித்த அக்கறை, மனிதாபிமானம். இத்தனையும் நீரோட்டம் போன்ற ஒரு நடையில். ஒரு நாவலைவிட சுறுசுறுப்பாக இருந்தது என்று சொல்வது மிகை என்று தோன்றினால் நீங்கள் படித்துப்பார்த்துவிட்டு என்னோடு கைகுலுக்க வரலாம்.

சில உதாரணங்கள் :

'வெள்ளைக்கார'னிடம் அடிமையாக நாம் இருந்தபோது நம் நாட்டை 'ஆண்ட' ராஜாக்களுக்கு இருந்த அதிகாரம் எவ்வளவு தெரியுமா? "ராஜாக்கள் என்று பெயர்தானே தவிர, அவர்களுக்கு ஒரு மாவட்ட கலெக்டருக்கான அதிகாரங்கள்தான் இருந்தன. பிரிட்டிஷ் அரசின் உத்தரவில்லாமல் ஒரு கொசுவர்த்திச் சுருள் கொளுத்தி வைக்கக்கூட அவர்களால் முடியாது"(பக்கம் 13).

ஆப்கனை ஆண்டுகொண்டிருந்த சுல்தான், "தம் நாட்டின் எல்லையை, சிந்துநதி வரைக்கும் விஸ்தரித்துவிட வேண்டும் என்று நேரம் கிடைக்கும்போதெல்லாம் கனவு கண்டு வந்தார்"(பக்கம் 18). "நேரம் கிடைக்கும்போதெல்லாம்" என்ற வார்த்தைகளில்தான் இந்த வாக்கியத்தின் உயிர் உள்ளது!

காஷ்மீருக்கு பாக். படைகளால் ஆபத்து என்றதும் நேரு பதறிவிட்டார். ஏன்? "காரணம், அவர் கமலாவை மணப்பதற்கு முன்பிருந்தே காஷ்மீரைக் காதலித்தவர்" (பக்கம் 25).

பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து பிரிந்து சென்றபோது எப்படி இருந்தது? "எந்தவித முன்னேற்பாடுகளும் இல்லாமல் திடீரென்று ஒருவர் தனிக்குடித்தனத்துக்குக் கிளம்பினால் உண்டாகும் பிரச்சனைகளும் குழப்பங்களுக்கும் சமமான நிலைமைதான் பாகிஸ்தானுடையது" (பக்கம் 37). எவ்வளவு பொருத்தமான ஒப்பீடு!

பேனஸீர் பூட்டோ பாக். பிரதமரானபோது அவரது ஆட்சிக்கு அவரது நெருங்கிய உறவினர்களே உலைவைத்தனர். அவரது அன்னையே "தன் ஒன்றுவிட்ட, ஒன்பதுவிட்ட உறவுகளையெல்லாம் போய்ப்போய் அழைத்துவந்து கட்சிப் பதவிகளில் உட்காரவைத்தது" ஒரு காரணம் (பக்கம் 137).

இந்த நூற்றாண்டில் எழுத்தில் நிகழ்த்தப்பட்ட ஒரு சாதனை என்றே இதைச் சொல்லவேண்டும். இதுவரை ராகவன் இரண்டு விருதுகளைப் பெற்றிருக்கிறார். இந்த நூலுக்காக மூன்றாவது விருதைப் பெருவது பொருத்தமாக இருக்கும். ஒரு சரித்திரப் புதிரை அவிழ்க்கும் விரலாக அவரது பேனா உள்ளது.

11:45 PM 01-05-2004

|

Monday, May 03, 2004

அம்மா 


குழந்தை பிறக்கும் கணத்திலே
பிறக்கிறாள்
அம்மா
|

This page is powered by Blogger. Isn't yours?

Weblog Commenting and Trackback by HaloScan.com