<$BlogRSDURL$>

All writings like poems, stories, articles in Tamil and English

Thursday, April 29, 2004

விட்டில் என்றொரு பொய் 

எங்கிருந்தோ வேகமாய்
வந்து விழுந்தது விட்டிலொன்று
எரியும் திரியின் அடியில்.

கீழ் நோக்கி உருகிக்கொண்டிருந்த
மெழுகுவர்த்தியைவிட்டு
மேல் நோக்கிச் செல்ல
முயன்றுகொண்டிருந்தது
ஜ்வாலை.

விட்டிலைக் கொல்லும் நோக்கம்
வர்த்திக்கு ஏதுமில்லை
எனினும்
கொஞ்ச நேரத்திற்கெல்லாம்
பொய்யாகிப் போனது விட்டில்

ஜ்வாலையோடு ஜ்வாலையாய்
ஒளிர்ந்துகொண்டு.

-- கணையாழி, பிப்ரவரி, 2001


|

Wednesday, April 28, 2004

தூரம் 

மூன்றாவது நாளாக சிவநேசன் வீட்டுக்கு தூரமாகிப் போயிருந்தான்.

முதல் நாள் நடந்தது இன்னும் பிசுபிசுவென மனம் பூரா ஒட்டிக்கொண்டிருந்தது. ஆபீஸ¤க்குக் கிளம்புவதற்காக தயாராகிக் கொண்டிருந்தான். கொடியில் வெறுப்போடு அதற்கு முதல் நாள் கழட்டி எறியப்பட்ட குழாயை எடுத்து, லுங்கியைத் தூக்கி தன் வலது காலை அதன் வலது காலுக்குள் செலுத்த முயன்று கொண்டிருந்த போதுதான் அது நடந்தது.

அடிவயிற்றில் திடீரென்று ஒரு இடி.

ஒன்றும் புரியவில்லை. அது அடிவயிறென்றே முதலில் அவன் நினைக்கவில்லை. வலது பக்க இடுப்புப் பகுதியில் வலிப்பதாகத்தான் நினைத்தான்.

"அம்மா" என்று அவனையறியாமல் கீழே உட்கார்ந்துவிட்டான். அப்பென் டிசைடிஸாக இருக்குமோ? உள்ளேயே வெடித்துவிட்டதோ? ஒன்றும் புரியவில்லை. ஆனால் ஏதோ வெடித்துச் சிதறிய உணர்வுதான் இருந்தது. இதுவரை அப்படிப்பட்ட ஒரு வலி அவனுக்கு வந்ததேயில்லை. வேற்று கிரகத்து வேதனயாகத் தெரிந்தது அது.

அப்படியே வயிற்றைப் பிடித்துக்கொண்டு குழாயை பாதி மாட்டிய காலுடன் தரையில் உட்கார்ந்து விட்டான்.

அவன் போட்ட 'அம்மா' ரொம்ப புதுசாகவும் சற்று ராட்சசத்தனமாகவும் இருந்ததை உள்ளுணர்வால் உணர்ந்து கொண்ட பார்வதி சமையல் கட்டிலிருந்து ஓடோடி வந்தாள்.

"என்னங்க? என்னாச்சு?" பதறினாள். எப்போதும் போல. அப்படி தரையில் வயிற்றைப் பிடித்துக் கொண்டு அவன் உட்கார்ந்து அவளும் பார்த்ததில்லை. கொஞ்சம் அதிர்ந்துதான் போனாள்.

"சனியனே என்னன்னு தெரியலடி. நீ வேறெ உயிரெ வாங்காதெ" அவன் வழக்கம்போல பதில் சொன்னான். வயிற்றுப் பகுதியைப் பிடித்துக்கொண்டே. அப்போதுதான் அவள் கவனித்தாள்.

அடிவயிற்றுப் பகுதியில் 'அந்த' இடத்தில் லுங்கி பூராவும் ரத்தக்கறையாக இருந்தது.

எய்ட்ஸ் வந்த புள்ளிராஜாவாக தன் கணவன் மாறிவிட்டானா என்ற சந்தேகத்துடன், "என்னங்க, இது என்னங்க?" என்று அவன் கவனத்தை அந்தப்பகுதிக்குத் திருப்பினாள்.

"எங்கெயாவது அடி பட்டுச்சா?"

அப்போதுதான் அவனும் பார்த்தான். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

"சனியனெ, தெரியலெ. நீ வேறெ. அடிபட்டுச்சா கிடிபட்டுச்சான்னு. அதெல்லாம் ஒன்னுமில்ல. இது என்னன்னு பாரு"

அவள் அவனை பாத்ரூமுக்கு அழைத்துச் சென்று பார்த்தாள்.

அதுதான்.

வெள்ளை வெள்ளையாக, திப்பி திப்பியாக, ரத்தக் கட்டிகளுடன் இருந்தது. உறுதியாகிவிட்டது. இருவருக்குமே ஒன்றும் புரியவில்லை. வியப்பும் மௌனமும் இருவர் கண்களிலும் முகத்திலும் வந்து குடியேறிக்கொண்டன. சிவநேசனுக்கு வியர்த்துக் கொட்டியது. ஆள்மாறாட்டம் மாதிரி பால் மாறாட்டமா? பம்பாய்க்குப் போகாமல், ஊசி ஏதும் போடாமல், அறுவை ஏதும் செய்யாமல் என்ன இது? இது உண்மைதானா என்று சந்தேகமாக இருந்தது. இது சாத்தியமா?! பரமஹம்சரைத்தான் கேட்க வேண்டும். அவரும் இப்போது இல்லை. ஒரே குருதியாகவும் குழப்பமாகவும் குத்தலாகவும் இருந்தது.

பார்வதி அறையைச் சாத்தி வைத்தாள். பிள்ளைகள் பார்க்காதவாறு செய்தாள். என்றுமில்லாமல் திடீரென்று அப்பா ஆபீஸ¤க்குப் போகாமல் 'உட்கார்ந்து'விட்டதன் ரகசியம் புரியாமல் வளர்ந்த பிள்ளைகள் குழம்பினர்.

"மெடிகல் லீவு சொல்லிடவாங்க?" மெதுவாகக் கேட்டாள்.

"என்ன எழவு லீவாவது சந்தானத்துக்கு ·போன் பண்ணி சொல்லிடு"

தற்காலிகமாக ஒரு துணியைக் கொடுத்து வைக்கச் சொல்லியிருந்தாள். பாட்டி வைத்தியம். அவனும் வேறுவழியின்றி அவள் தொலைபேசச் சென்ற இடைவெளியில் அதை வைத்துக்கொண்டான். அவனுக்கே வெட்கமாக இருந்தது. சனியன், இதை வைத்துக்கொண்டு எப்படி வேலை செய்ய முடியும்? ஒன்றும் புரியவில்லை அவனுக்கு. பார்வதி வந்து பார்த்துவிட்டு ஒழுங்காக வைத்துவிட்டாள்.

ரொம்ப களைப்பாக வந்தது. கால்களெல்லாம் வலியெடுத்தன. யாரோ அடித்துப் போட்டமாதிரி இருந்தது. அனிச்சையாக தன் கால்களைத் தானே பிடித்து விட்டுக்கொண்டான். மஸாஜ் செய்வது மாதிரி. அப்போது அவனுக்கு பார்வதியின் நினைவு வந்தது. அவளும் இப்படித்தான் அந்த ஏழு நாட்களும் செய்து கொண்டிருப்பாள்.

"சனியனே எப்பப்பாரு ஒரே மஸாஜ்தானா? ஊர் ஒலஹத்துல யாருக்கும் வர்றதில்லையா? போய் காப்பியெப் போடு"

பார்வதி ஒன்றும் சொல்வதில்லை.

திடீரென்று மறுபடியும் இடி இடித்தது.

"அம்மா" என்று மறுபடியும் வயிற்றைப் பிடித்துக்கொண்டான். படுக்கையில் புரண்டான். முடியவில்லை. வலி உயிர் போய்விடும் போலிருந்தது. பார்வதி மறுபடி வந்தபோதும் அவன் புரண்டு கொண்டிருந்தான். ஆனால் அவள் முன்னெச்சரிக்கையாக மாத்திரைகள் கொண்டுவந்திருந்தாள்.

"அம்மா வலிக்கிதே" மறுபடி கத்தினான். விட்டு விட்டு வலித்தது.

"இதெப் போட்டுக்குங்க. கொஞ்ச நேரத்துல வலி கொறையும்" என்று சொல்லி ஒரு அனுபவமிக்க கைனகாலஜிஸ்ட்டின் தோரணையில் ஒரு காப்ஸ¥லையும் தண்ணீர் டம்ளரையும் கொடுத்தாள்.

ஒன்றும் சொல்லாமல் வாங்கிக் கொண்டான். அந்த நாட்களில் பார்வதியின் வேதனையைக் குறைப்பதற்காக டாக்டர் வசந்தா 'ப்ரிஸ்க்ரைப்' பண்ணிய ஸ்பாஸ்மோ ப்ராக்ஸிவான் காப்ஸ்யூல்தான். சிவப்பு காப்ஸ்யூல். அதுவும் சிவப்பாகத்தானா இருக்க வேண்டும்? ஒன்றும் சொல்லாமல் போட்டுக் கொண்டான். எத்தனையோ முறை அவள் சொல்லிவிட்டும் அவன் வாங்க மறந்துபோகும் காப்ஸ்யூல்.

மறுநாளும் ஆபீஸ¤க்குப் போகமுடியவில்லை. வேதனை அதிகரித்திருந்தது. ரத்தப் போக்கும் அதிகமாக இருந்தது. அதோடு சில நிமிஷங்கள் இருந்தது வலி இப்போது சில மணி நேரங்கள் என மாறிவிட்டிருந்தது. இன்னும் ஒரு வாரத்தில் தான் பார்வதியாகவும் பார்வதி மீசையுடன் கூடிய தானாகவும் மாறப்போகிறோம் என்பது அவனுக்கு உறுதியாகத் தெரிந்துவிட்டது. ஒருவகையான ஆச்சரியமும் எதிர்பார்ப்பும்கூட அவனிடம் வளர ஆரம்பித்தது.

மூன்றாவது நாள் அவனுக்கு ஓரளவு பழகிப் போயிருந்தது. அந்த மாத்திரை வேலை செய்யத்தான் செய்தது. வலி குறைந்த மாதிரி இருந்தது. ஐந்தாம் நாள்தான் ரத்தப்போக்கு குறைந்தது இடியுடன் கூடிய மழை விட்டு தூரல் ஆரம்பித்திருந்தது.

அடிக்கடி யாருமில்லாதபோது லுங்கியை உயர்த்திப் பார்த்துக்கொண்டான். எல்லாம் எப்போதும்போல சரியாகத்தான் இருந்தது. மழையையும் அடிவயிற்று இடியையும் தவிர. அது ஒன்றுதான் புதுசு. அவனுக்கு ஆச்சரியம் கூடியது. சரி என்னதான் ஆகிறது பார்ப்போமே என்று ஆறாம் நாள் குளிர் விட்டுப் போனது.

இதில் கணவன் மனைவி இரண்டு பேருக்கும் ஒரே ஒரு கேள்விதான் இருந்தது. இது தொடருமா? அப்படித் தொடர்ந்தால் அதன் விளைவுகளைப் பற்றிக் கற்பனைகூட செய்ய முடியவில்லை. எப்படி இதைத்தீர்ப்பது? டாக்டரிடம் காண்பிப்பதா? அதன் பிறகு தொலைக்காட்சிகள், தினசரிகள், வாராந்தரிகளில் ·போட்டோவுடன் கட்டுரை வரும். இந்தியாடுடே தமிழின் அட்டைப்படத்தை அலங்கரிக்க வேண்டிவரும். "ஒன்பதாகிப்போன உலகின் எட்டாவது அதிசயம்" என்று தலைப்பு போடுவார்கள். அதன் பிறகு நிலைமை என்னவாகும்? எப்படி ஆபீஸ் போவது? ஆபீஸை விடு. எப்படி வெளியில் போவது? எப்படி குழந்தைகளை சந்திப்பது தினமும்? சொந்தக்காரர்களை? நண்பர்களை?

எல்லாக் கேள்விகளுக்கும் பதில் ஒன்றாகத்தான் இருந்தது. இந்த நிலையில் தொடர்ந்து வாழ்க்கையைத் தொடர முடியாது என்பது புரிந்தது. ஒரு வாரம் கழித்தும் மழை தொடர்ந்தால் அல்லது அடுத்த மாதமும் இதே நிலை ஏற்பட்டால் என்ன செய்வது என்று யோசித்து யோசித்துப் பார்த்தான். தற்கொலை செய்துகொள்வதுதான் வழி என்பதாகத் தோன்றியது.

"என்ன சனியன் இது?" என்று தன்மீதே ஒரு வெறுப்பு தோன்றியது சிவநேசனுக்கு. அந்த 'சனியன்' அவனோடு கூடப்பிறந்த செல்லச் சனியன். அவனை எப்போதுமே அது விட்டுப்பிரிவதில்லை.

எல்லாக் கேள்விகளையும் அழிப்பதாக எட்டாவது நாள் இருந்தது. மழை சுத்தமாக நின்று நிலம் குளிர்ந்து போனது.

குளித்துவிட்டு அங்கிருந்த கண்ணாடி முன் நின்று தன்னையே பரிசோதித்துப் பார்த்துக் கொண்டான். மறுபடியும் சுத்தமான ஆண்பிள்ளையாகிவிட்டதாகத்தான் தோன்றியது. 'அந்த ஏழு நாட்க'ளுக்கான எந்த அடையாளமும் இல்லை. சந்தோஷமாக இருந்தது. பயமாகவும் இருந்தது. வழக்கம் போல ஆபீஸ¤க்குக் கிளம்பினான். வருவது வரட்டும். ஆனால் தொடர்ந்து வந்த நாட்கள் அவன் பயம் தேவையற்றது என்பதை அவனுக்குப் புரியவைத்தது.

பார்வதி அவனுக்குக் காபி கொடுக்கும்போதுதான் கவனித்தான்.

"ஒடம்பு சரியில்லாயா பாரா?"

பார்வதியின் புருவங்கள் அகன்று மேல் நோக்கி வளைந்தன. அவன் 'பாரா'ன்னு அவளை அழைத்து எத்தனை வருஷங்களாகிவிட்டது! கல்யாணமான புதிதில் அழைத்தது! மறுபடியும் அதே கரிசனம், அதே தொனியுடன் பாரா!

"என்ன பாரா, பதிலையே காணோம்?"

"ஆமாங்க. இன்னிக்கிதான்..." சந்தோஷத்தால் அவளால் தொடர்ந்து சொல்லி முடிக்கக்கூட முடியவில்லை.

"ரெஸ்ட் எடுத்துக்க. ஒன்னும் சமைக்க வேணாம். நா வரும்போது ஒனக்கு ஸ்பாஸ்மோ வாங்கி வந்துர்றேன்"

அவள் கன்னத்தை தடவிவிட்டு கெஞ்சுவது போலச் சொல்லிவிட்டுப் போனான்.


-- பதிவுகள்
|

Tuesday, April 20, 2004

காலமும் நேரமும் 
நேற்றுவரை அடிக்கடி
மணி கேட்டுக்கொண்டிருந்தவர்
இன்று காலமானார்
நின்றுபோன வாட்சைப் போல
|

நூறாவது டிகிரி 

உலகச் சிந்தனை வரலாற்றில், குறிப்பாக மதங்கள் என்ற அர்த்தத்தில் அல்லது தளத்தில், பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஞானிகள் பலர் இந்தியத் துணைக்கண்டத்தில் அவதரித்தவர்கள். புத்தர், மஹாவீரர் என்ற பெயர்கள் நமக்கு உடனே நினைவுக்கு வருவது இயற்கையானதே. இப்படி எத்தனை பேர் இருந்தார்கள் என்று சொல்ல முடியாது. பல மஹா ஆளுமைகள் இந்தியாவுக்குச் சொந்தமானவை என்ற பெருமை நமக்கு உண்டு என்பது மட்டும் நிச்சயம்.

இப்படிப்பட்ட ஆளுமைகளிலேயே படு கவர்ச்சியான ஒரு ஞானி உண்டென்றால் அது ஓஷோதான். ஆனால் அவரது தாக்கம் மதம் சம்மந்தப்பட்டதல்ல. இன்னும் சொல்லப்போனால் மதங்களைத் தூக்கி எறிய வேண்டும் என்று சொன்ன ஆளுமை அவரது. "நீங்கள் ஏதாவது ஒரு மதத்தில் நம்பிக்கை வைத்திருந்தால் உங்களால் தியானத்தில் ஆழ்ந்து செல்ல முடியாது" என்றும் "பொதுவாக தியானத்துக்கு முதல் தடங்கலே மதம்தான்" என்றும் அவர் சொல்லியுள்ளார். அந்த விஷயத்துக்கு பிறகு வரலாம்.

படு கவர்ச்சி என்று நான் சொன்னதற்கு பல காரணங்கள் உண்டு. ஓஷோவின் முகத்தை, அடர்ந்த தாடியுடன் கூடிய அந்த அழகை, தீட்சண்யம் மிக்க அந்த ஊடுறுவும் கண்களை, ராஜாக்களுக்கு உரிய அந்த கம்பீரத்தை, அவர் தேர்வு செய்து உடுத்தும் ஆடைகளை, அவர் நாற்காலியில் அமர்ந்திருக்கும் விதத்தை, கேட்பவரை 'ஹிப்னடைஸ்' பண்ணுவது மாதிரி ஒவ்வொரு சொல்லாக அழுத்தம் திருத்தமாக -- 'ப்ரஜன்ட்' என்பது போன்ற மத்தியப் பிரதேச ஆங்கில உச்சரிப்பில்தான் -- உச்சரிக்கும் அறிவார்ந்த செயலை -- இதையெல்லாம் மட்டும் வைத்து நான் இப்படிக் கூறவில்லை. அவருடைய கவர்ச்சிக்கு இத்தனையும் காரணங்களாக இருந்திருக்கலாம்.

ஆனால் செக்ஸ் சாமியார் என்று அவர் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது மட்டும் காரணமல்ல என்று உறுதியாகச் சொல்வேன். எப்படி மதத்தைக் கடந்து போனால்தான் உண்மையை அடையமுடியும் என்று அவர் சொன்னாரோ, அதைப்போலவே செக்ஸ் என்ற அற்புதமான விஷயத்தையும் எப்படி, எந்த அளவு பயன்படுத்த வேண்டும் என்றும் எப்படி அதிலிருந்து விடுபடவேண்டும் என்றும் அவர் பலமுறை விளக்கியுள்ளார். செக்ஸைப் பற்றி அவர் சுதந்திரமாகவும் வெளிப்படையாகவும் சிலபல அதிர்ச்சியூட்டும் உண்மைகளைச் சொன்னது அப்படி ஒரு தவறான அபிப்ராயத்தை அவர்மீது ஏற்படுத்தியிருக்கலாம். அமெரிக்காவில் இல்லாத செக்ஸா?! அப்படியானால் அமெரிக்காவில் அவர் அமைத்த ரஜ்னீஷ்புரத்தை நாடி பல வெளி நாட்டவரை செல்லவைத்தது எது என்று சிந்திப்பது நல்லது.

அவருடைய கவர்ச்சிக்கு உண்மையான காரணம் அவருடயை துணிச்சல், நேர்மை, அவருடைய முரண்பாடுகள் எல்லாவற்றிலும் இருந்த உண்மை என்று நான் நினைக்கிறேன். அப்படியானால் புத்தரிடமும் மஹாவீரரிடமும் உண்மையில்லையா என்று கேள்வி வரலாம். நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. ஓஷோவிடம் இருந்த இந்த எல்லாம் சேர்ந்த கலவை வேறு எந்த இந்திய ஞானியிடமும் இல்லாதது.

ஓஷோவின் துணிச்சலுக்கு ஒரு சில உதாரணங்கள். தன் வீட்டுக்கு வந்த ஒரு நிர்வாண ஜைனத் துறவியிடம் அவர், "நீங்கள் ஒருபோதும் இந்த உலகத்தில் மீண்டும் பிறக்க விரும்ப வில்லையா?" என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்த துறவி, "ஒருபோதும் இல்லை" என்று பதில் சொன்னதும், "அப்படியானால் நீங்கள் ஏன் இப்பொழுதே தற்கொலைசெய்து கொள்ளக்கூடாது? நான் அதற்கு வழி சொல்லிக்கொடுக்கிறேன். பக்கத்தில் உள்ள மலையில் ஏறி சுலபமாக விழலாம். அல்லது பக்கத்தில் ஓடும் ஆற்றில் மூழ்கி இறக்கலாம். நல்ல மழைக்காலத்தில் நிறைய தண்ணீர் ஆற்றில் போகும். அப்பொழுது உங்களோடு நானும் குதிக்கிறேன். சிறிது நீந்திவிட்டு நான் கரை சேர்கிறேன். நீங்கள் அப்படியே ஆற்றில் மூழ்கிவிடலாம். என்ன சொல்கிறீர்கள்?" என்று கேட்டிருக்கிறார்! இந்த நிகழ்ச்சி நடந்தபோது ஓஷோவுக்கு 12 அல்லது 13 வயது!

தனக்குக் கிடைத்த தங்க மெடலை ஆற்றில் எறிந்திருக்கிறார்! பள்ளி கல்லூரிகளில் படித்த பட்டப்படிப்புக்கான சான்றிதழ்களையும் கொளுத்திவிட்டிருக்கிறார்!

நாம் மதிக்கின்ற பல மகாமனிதர்களை அவர் தூக்கி எறிந்து பேசியிருக்கிறார். மகாத்மாவிலிருந்து மொரார்ஜி தேசாய்வரை அவருடைய கிண்டலுக்கும் கேலிக்கும் இலக்காகாதவர்களே இல்லை என்று சொல்லலாம். அவர் மனதார, வாயாரப் புகழ்ந்து சொல்லியவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். மகாத்மாவின் அஹிம்சைதான் உண்மையில் ஹிம்சை என்று வாதிடுவார். மனுதர்மம் கொடுத்த மனுவை சந்திக்க நேர்ந்தால் கொலைசெய்வேன் என்பார். நீட்சேதான் மனுவை ஹிட்லருக்கு அறிமுகப்படுத்தியது என்பார். ஜெ.கிருஷ்ணமூர்த்தியைப் படிப்பவர்களுக்கு தலைவலி வராமல் இருக்காது என்பார். அரவிந்தர் ஞானம் அடைவதைப் பற்றி எல்லாம் அறிந்தவர், ஆனால் அவர் ஞானம் அடையவில்லை என்பார். இந்தியாவுக்கு சுதந்திரம் அதிருஷ்டவசத்தால்தான் கிடைத்தது என்பார். இதையெல்லாம் நாம் ஒத்துக்கொள்கிறோமோ இல்லையோ அது வேறு விஷயம். ஆனால் இப்படியெல்லாம் பேசுகின்ற துணிச்சல் அவருக்கு இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.

அதேசமயம், முற்பிறவியில் தான் 14ஆம் நூற்றாண்டில் சீனாவுக்கு புத்தமதத்தைப் பரப்பச் சென்ற போதி தர்மரோடு இருந்ததாகவும், தனது முற்பிறவியின் இறப்பும் பிறப்பும் திபெத்தில் நடந்துள்ளது என்றும், இயேசு, மோஸஸ் போன்றவர்கள் இமயமலைச் சாரலில்தான் அடக்கமாகியுள்ளனர் என்றெல்லாம் பல இடங்களில் அவர் கூறுவது புன்னகைக்க வைக்கும்.

ஆனாலும் ஓஷோவை ஒரு அற்புதம் என்றுதான் சொல்லவேண்டும். எனக்கு என்னவோ அப்படித்தான் தோன்றுகிறது. நாலு செய்தித்தாள்களை ஒரே நிமிடத்தில் படித்து முடித்துவிடுவாராம். ஒரு நாளைக்கு அவர் 2000 பக்கங்கள் படிப்பாராம். இது சாத்தியமா என்று தெரியவில்லை. ஒரு நாளைக்கு என்னால் ஆழமாக 300 பக்கங்கள் படிக்க முடியும். அவ்வளவுதான். ஆனால் ஓஷோ 2000 பக்கங்கள் படித்திருப்பார் என்றுதான் தோன்றுகிறது. காரணம், இன்று அவர் பெயரில் வெளிவந்து கொண்டிருக்கும் புத்தகங்கள் யாவும் ஓஷோ எழுதியதல்ல. எல்லாமே மடைதிறந்த வெள்ளம் போல, முன்கூட்டிய தயாரிப்புகள் எதுவுமின்றி அவர் நிகழ்த்திய உரைகள். யோகாவா பிடி பத்து வால்யூம்கள். ஜென்னா, இந்தா பத்து வால்யூம்கள். சூ·பியிஸமா இதோ பத்து வால்யூம்கள் என்று வால்யூம் வால்யூமாக அவரால் எப்படிப் பேச முடிந்தது?!

அதுமட்டுமல்ல. எவ்வளவு ஆழமான விஷயமானாலும் நகைச்சுவையோடு ரொம்ப எளிதாக அவரால் சொல்ல முடிந்தது. அவரால்தான் அப்படிச் சொல்ல முடியும். ஜெ.கிருஷ்ணமூர்த்தியையும் ஓஷோவையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இது ரொம்ப தெளிவாகப் புரியும். ஓஷோவின் கருத்துப்படி ஜெ.கே. தலைவலி கொடுப்பார் என்றால் ஓஷோ வயிற்றுவலி கொடுப்பார். நம்மை வயிறுவலிக்க, விலா வலிக்க சிரிக்கச் செய்வதன் மூலம்தான். ஆங்கிலத்தில் நான் ஒரு 50 புத்தகங்களுக்கு மேல் ஓஷோ படித்திருக்கிறேன். ஒலி நாடாக்கள் ஒரு சில கேட்டிருக்கிறேன். தமிழில் இப்போதுதான் வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். காரணம், ஆரம்பகால தமிழாக்கங்கள் அவ்வளவு திருப்திகரமாக இல்லை. தமிழைவிட ஆங்கிலமே எளிதாக இருந்தது. ஆங்கிலம் தனது அன்னியத் தன்மையை இழக்கும் பேச்சு ஓஷோவுடையது. சின்னக் குழந்தைகூட புரிந்து கொண்டுவிடும் என்று தோன்றும் அளவுக்கு எளிமையான ஆங்கிலம். (ஹிந்தியிலும் உண்டு. ஆனால் எனக்கு ஹிந்தி தெரியாது).

இந்த எளிமை, அசாத்திய துணிச்சல், நேர்மை, உலகம் பூராவும் அவருக்கு இருந்த செல்வாக்கு, அமெரிக்காவைவே ஒரு கலக்குக் கலக்கியது, சாயங்கால வேளைகளில் சுடச்சுட போடப்படும் மெதுவடைகளைவிட அதிகமாக அவருடைய புத்தகப் பேச்சுகள் விற்றுத் தீர்ந்துவிடுவது -- எல்லாவற்றையும் பார்க்கும்போது ஓஷோ என்ற அந்த அற்புதம் நிச்சயம் ஒரு ஞானியாகத்தான் இருக்க வேண்டும், அந்த ஞானம்தான் இவ்வளவு எளிமைக்கும் கவர்ச்சிக்கும் காரணம் என்று என் உள்மனதில் இருக்கும் ஞானப்பட்சி சத்தியம் செய்து சொல்கிறது.

இருந்தாலும் எனக்குள் ஒரு ஆதங்கம். அல்லது பொறாமை என்றுகூடச் சொல்லலாம். இந்த ஞானமடைவது என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டும் என்று. "21 வயதில் ஓஷோ ஞானமடைந்தபோது" என்பதையொத்த வாக்கியங்களை ஓஷோ சம்மந்தப்பட்ட புத்தகங்களில் பார்க்கும்போதெல்லாம் இந்த ஆசை எனக்குள் எழும். அதோடு அவர் ஞானமடைந்த தேதி மார்ச் மாதம் 23 என்றுவேறு அவரே சொல்கிறார். இன்னொரு இடத்தில் 21ம் தேதி என்றும் சொல்கிறார். என்றாலும் அது மார்ச் மாதம் என்பதில் குழப்பம் ஏதும் இல்லை.

சரியான தேதி மார்ச் 23ஆகத்தான் இருக்கும் என்று எனக்குப் படுகிறது. ஏனென்றால் க்ரிகோரியன் காலண்டர்படி நான் பிறந்த தேதியும் மார்ச் 23தான்! என் வருங்கால சிஷ்யர்கள் இந்த தகவலைக் குறித்து வைத்துக்கொள்வது நல்லது! இதுவரை நான் வாசித்த புத்தகங்களில் ஓஷோ ஞானமடைந்தார் என்ற தகவல் மட்டும்தான் இருந்ததே தவிர, எது அவரை அந்த நிலைக்கு கொண்டு சென்றது, எப்படி ஞானமடைந்தார் என்ற கேள்விகளுக்கும் ஆர்வங்களுக்கும் பதில் இல்லை.

புத்தரும் மஹாவீரரும் ஞானமடைவதற்காக கையாண்ட வழிமுறைகள் எனக்கு ஒவ்வாதவை. புத்தர் அரண்மனை, மனைவி, குழந்தையை விட்டுவிட்டு காடுகளில் சுற்றித் திரிந்து கடைசியில் போதி மரத்தடியில் அமர்ந்தபோது ஞானமடைந்தார் என்று சொல்கிறார்கள். எனக்கு இதெல்லாம் சரிப்படாது. (சமையல் செய்வதில் என் மனைவிக்கு இருக்கும் ஞானத்தை நான் உதாசீனப்படுத்த முடியுமா? எனது நாக்கும் ஞானசூன்யமில்லை)! புத்தி இல்லாத மனிதனை மரமண்டை என்று சொல்வோம். ஆனால் இங்கே ஒரு மரம் மனிதனுக்கு ஞானம் வழங்கியிருக்கிறது என்று வரலாறு சொல்கிறது. ம்ஹ¤ம். விஷயம் எங்கோ உதைக்கிறது.

என்னுடைய சிற்றறிவுக்கு எட்டியவரையில், ஞானம் வரும் நிலைக்கு புத்தர் சென்றுவிட்டார். அந்த நேரத்தில் அந்த மரத்தடியில் அமர்ந்திருக்கிறார். அல்லது அமர நேர்ந்திருக்கிறது. அந்த நேரத்தில் அவர் அரண்மனையில், ஏன், கழிவறையில் இருந்திருந்தாலும் ஞானமடைந்திருப்பார். இதுவே என்னைப்போன்ற ஞானிகளின் ஒருமித்த கருத்து!

மஹாவீரரைப் பொறுத்தவரை நிர்வாணமாக அலைந்துகொண்டிருந்தாராம். எனக்கோ சட்டைக்குள் கைவச்ச வைகிங் பனியன் இல்லாவிட்டாலே நிர்வாணமாக இருப்பதுபோல்தான் இருக்கும். (கஜூரஹோ கோவிலில் உடலுறவு நிலைகளை விளக்கும் சிற்பங்களைப் பற்றி ஓஷோ பேசும்போது நிர்வாணம் என்பதற்கும் அம்மணம் என்பதற்கும் உள்ள நுட்பமான வித்தியாசத்தை எடுத்துச்சொல்வார். அது இப்போது தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வருகிறது). மஹாவீரர் அளவுக்கு என்னால் 'துறவு' நிலையை ஏற்றுக்கொள்ளவோ அல்லது கழட்டிக்கொள்ளவோ முடியாது. ஆக புத்தரைப் போலவோ, மஹாவீரரைப் போலவோ ஞானமடையும் கதவுகள் என்னைப் பொறுத்தவரை மூடப்பட்டவை. இந்த விஷயத்தில் ஓஷோ மட்டும்தான் நம்பிக்கையூட்டுபவராக, ரொம்ப நடைமுறை ஞானியாக இருக்கிறார்.

ஒருவிஷயம் எனக்கு மிகவும் தெளிவாகிவிட்டது. ஞானமடைவதைவிட முக்கியம் அதை அடைவதற்காக நாம் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் வழிகள்தான். அதோடு அதற்காக நாம் நம்மை தயாராக்கிக் கொள்ள வேண்டும். ஒருபொருள் இன்னொரு பொருளாக பரிபூரணமாக மாறவேண்டுமானால் அதற்கான சூழ்நிலைகள் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்க வேண்டும். இதை ஆங்கிலத்தில் அழகாக transformation என்று சொல்கிறார்கள்.

சித்தார்த்தர் புத்தரானதும், இயேசு கிறிஸ்துவானதும், முஹம்மதிப்னு அப்துல்லாஹ் முஹம்மது நபி (ஸல்) ஆனதும் வெறும் பெயர் மாற்றங்களல்ல. வேரோடு பிடுங்கி வேறு இடத்தில் நட்டு வளர்ந்த நிலை அது. பட்டுப்புழு தனக்குள்ளிருந்த வண்ணத்துப்பூச்சியை வெளிக்கொண்டு வந்த நிலை. பரிபூரணமாக வேறு ஒன்றான நிலை. அல்லது தனக்குள்ளே இருந்த உயர்வான இன்னொன்றைக் கண்டு கொண்ட நிலை. அதுவாகவே மாறிவிட்ட நிலை. ஆனால் இந்த நிலைக்கான தியாகங்களை செய்துதான் இதை அடைய அல்லது உணர முடியும்.

தண்ணீர் ஆவியாக வேண்டுமெனில் அதை நூறுடிகிரிவரை கொதிக்க வைத்துக்கொண்டே இருக்க வேண்டும். 99 டிகிரிவரை தீயின் அல்லது உஷ்ணத்தின் தூண்டுதல் அதற்குத் தேவைப்படுகிறது. பின்னர் நூறாவது டிகிரியில் அந்த அற்புதம் நிகழ்ந்துவிடுகிறது. அதுவும் தானாகவே. இதைத்தான் ஷேக்ஸ்பியர் readiness is all என்று சொன்னாரோ என்னவோ. ஒரு விஷயத்துக்கு நீங்கள் முற்றிலும் தயாராக இருக்கும்போது அந்த விஷயம் நடந்துவிடுகிறது. நூறுடிகிரிவரை உங்களை எதாவது கொண்டு செல்ல வேண்டும். அல்லது உங்களை நீங்களே கொண்டு செல்ல வேண்டும். இதுதான் நான் புரிந்துகொண்டது. ஓஷோவும் இதை உறுதிப்படுத்துகிறார். அவர் சொல்கிறார் :

"இந்த ஞானமடைதல் என்பது படிப்படியாக நிகழ்வது அல்ல. அது திடீரென்று நிகழ்வது. நீங்கள் அது அப்படி நிகழ்வதற்கு வேண்டுமானால் உங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக தயார் படுத்திக்கொள்ளலாம்."

ஓஷோவைப் பொறுத்தவரை அவரை எது அல்லது எவர் அல்லது எவரெவர் அவரைக் கொஞ்சம் கொஞ்சமாக தயார் படுத்தினார்கள் என்று தெரிந்து கொள்ள நான் மிகவும் ஆசைப்பட்டேன். இதுவரை நான் படித்த அவரின் எந்த நூலிலிருந்தும் அதை நான் தெரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் கடைசியாக "என் இளமைக்கால நினைவுகள்" என்று ஒரு நூல். அதைப்படித்தபோது தெரிந்துவிட்டது. நூறுடிகிரிவரை அவர் எப்படிச் செல்ல முடிந்தது என்பதை தெளிவாகப் புரிந்துகொள்ள முடிந்தது. அதைப்பற்றிச் சொல்லத்தான் இவ்வளவு பீடிகையும்.

இந்தப் புத்தகம் ஓஷோ ஒரு நாலு நாளாக உடல் நலக்குறைவாக இருந்தபோது, சீடர்களை அழைத்து, தன் குடும்பத்தைப் பற்றியும் தன்னை பாதித்த மனிதர்களைப் பற்றியும் அவரே சொல்லச் சொல்ல எழுதப்பட்டது. ஒரு முழுமையான தொடர்ச்சியான வாழ்க்கை வரலாறு அல்ல. ஆனால் ஓஷோவைப்பற்றி இதுவரை வந்த நூல்களில் இது மிகவும் முக்கியமான நூல். இப்படிச் சொல்வதற்கு முதல் காரணம், மேலே சொன்னதுதான். நூறுடிகிரிவரை அவரை கொண்டு சென்றது எது என்று இந்த நூலிலிருந்து தெரிந்து கொள்ளலாம். இரண்டாவது காரணம், ஓஷோ சம்மந்தபட்ட சின்ன வயது நிழல்படங்கள். ஓஷோ பதினாலு வயதில், 21 வயதில், ஓஷோவின் நானி, சம்பு பாபு, மக்கா பாபா போன்ற ஓஷோ வாழ்வின் மிக முக்கியமானவர்களின் நிழல்படங்கள் இருப்பது. மூன்றாவது காரணம், அருமையான தமிழாக்கம். யாரோ ஒரு சுவாமி ஆனந்த பரமேஷ் என்பவர் செய்திருக்கிறார்.

முதல் காரணம்தான் இந்த கட்டுரையை நான் எழுதுவதற்கு ஒரே காரணம் என்று கூடச் சொல்லலாம். ஓஷோவை பாதித்த, உருவாக்கிய மனிதர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி ஓஷோவே எப்போதும் போல ஒளிவு மறைவின்றிப் பேசுகிறார். அதில் முதலில் மனதில் நிற்பது ஓஷோவின் நானி (பாட்டி)தான். இவரின் நிழல்படமும் உள்ளது.

அந்த நானியைப் பற்றிப் படிக்கப்படிக்க இப்படி ஒரு பெண் அந்தக்காலத்திலேயே இருந்திருக்க முடியுமா என்று வியப்பு மேலிடுகிறது. அப்படி ஒரு பாட்டி நமக்கு இல்லையே என்ற ஏக்கம்கூட ஏற்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு நானி வாய்க்கும் அனைவருமே நிச்சயமாக ஞானமடைந்துவிடுவர் என்று கூறமுடியும். அப்படிப்பட்ட ஒரு அற்புதமான பாத்திரம்! அவருடைய 'காரக்ட'ரை வைத்து ஒரு நல்ல நாவல் எழுதலாம். ஒரு நல்ல திரைப்படமெடுக்கலாம்.

அழகான அந்த நானி பிறந்த ஊர் கஜூரஹோ! அந்த கோவிலின் சிற்பங்களை அவசியம் ஓஷோ பார்க்க வேண்டும் என்று நானி வற்புறுத்தியிருக்கிறார்! ஆனால் அவர் எந்த கோயிலுக்கும் சாமி கும்பிடச் சென்றதில்லையாம்! ஓஷோ பிராந்தி சாப்பிட விரும்பினால் நானி அதற்கு ஏற்பாடு செய்வாராம்! அதற்கு அவர் சொன்ன காரணம், "ஒன்றை நீ முழுமையாகத் தெரிந்து கொள்ளாவிட்டால், அதிலிருந்து உன்னால் விடுபடமுடியாது"!

இன்னொரு முறை தீபாவளியின்போது எல்லாரையும்போல சூதாட பணம் கேட்டபோது, "இந்தா நூறுரூபாய், போய் விளையாடு. ஒருவன் அனுபவத்தின் மூலமாகத்தான் பாடம் கற்க வேண்டும்" என்று சொல்லியிருக்கிறார்! இதேபோல ஓஷோ சிகரெட் பிடிப்பதற்கும், விபச்சாரியிடம் செல்வதற்கும்கூட அனுமதித்திருக்கிறார். அப்போது ஓஷோவின் வயது 15! (ஆனால் ஓஷோ விபச்சாரியிடம் போகவில்லை என்பது வேறுவிஷயம்).

தன் கணவர் இறந்தபோது நானி சொட்டுக்கூட கண்ணீர் சிந்தவில்லையாம். இவ்வளவுக்கும் அந்தக் காலத்திலேயே காதலித்து திருமணம் செய்துகொண்டவராம். ஓஷோ -- அப்போது சின்னப்பையன் -- மடியில்தான் நானாவின் -- நானியின் கணவர், ஓஷோவின் பாட்டனார் -- தலை இருந்ததாம். நானி அழாததைப் பார்த்து ஓஷோவுக்கு ரொம்ப ஆச்சரியம்.

"நானா இறந்துவிட்டார். நீ எவ்வளவு தூரம் அவரை நேசித்தாய் என்பது எனக்குத் தெரியும். ஏன் உன்னிடமிருந்து ஒரு சிறு செருமல்கூட வரவில்லை"

என்று ஓஷோ கேட்டதற்கு நானி,

"உன்னால்தான் அழவில்லை. ஒரு குழந்தையின் முன்பு நான் அழவிரும்பவில்லை. நான் அழ ஆரம்பித்தால் நீயும் அழுவாய். அப்போது நான் உனக்கு ஆறுதல் சொல்ல வேண்டியிருக்கும். யார் யாருக்கு ஆறுதல் சொல்வது?"

என்று பதில் சொன்னாராம்! பாட்டி இரும்பால் செய்த பெண்மணியோ, புரியவே இல்லை என்று ஓஷோவே வியக்கிறார்!

அந்த இறுக்கமான சூழ்நிலையைத் தன்னால் தாங்கமுடியவில்லை, ஏதாவது பேசுங்கள் என்று நானியிடம் ஓஷோ சொன்னபோது நானி ஒரு காதல் பாட்டைப் பாடினாராம்! நானா உயிருடன் ஆரோக்கியமாக இருந்தபோது அவருக்காக நானி பாடிய முதல் காதல் பாடலாம் அது! "இறப்பை எப்படிக் கொண்டாடுவது என்பதை அப்பொழுது நான் கற்றுக்கொண்டேன்" என்று ஓஷோ கூறுகிறார்!

நானி இறந்தபோது அவருக்கு அவரின் ஆசைப்படி தீவைத்தவர் ஓஷோதான். "என் வாழ்க்கையில் நான் மிகுந்த சிரமத்தில், துக்கத்தில் செய்த காரியம் அவரது உடலுக்குத் தீவைத்ததுதான். அது எப்படி இருந்தது என்றால், லியனார்டோ மற்றும் வின்சென்ட் வான்ஹோ தீட்டிய ஒரு அழகிய ஓவியத்திற்கு நெருப்பு வைத்தால் என் உள்ளத்தில் எப்படி வலி ஏற்படுமோ, அந்த வலியை உணர்ந்தேன்...இந்த உலகத்தில் பார்க்கும் அழகு நிறைந்த பொருள்களில் எல்லாம் அவரைக் காண்கிறேன். அவர் மட்டும் என் வாழ்க்கையில் கலக்காமல் இருந்திருந்தால், நான் ஒரு வியாபாரியாகவோ, டாக்டராகவோ, இஞ்சினியராகவோ ஆகியிருப்பேன்" என்று சொல்கிறார். உள்ளத்தின் ஆழத்திலிருந்து கிளம்பும் உணர்ச்சிகள்தான் எவ்வளவு அழகானவை, உண்மையானவை!

ஒஷோவின் நானாவும் ரொம்ப வித்தியாசமான மனிதராகத்தான் இருந்துள்ளார். ஒருமுறை ஜனத்தொகை கணக்கெடுப்பின்போது நானாவிடம் உங்கள் மதம் என்ன என்று கேட்டதற்கு, "ஜைன மதம்" என்று சொன்னவர், உங்கள் மனைவியும் அதே மதத்தைச் சேர்ந்தவரா என்று கேட்டபோது, "அவளையே கேட்டுக்கொள்ளுங்கள். மதம் என்பது ஒருவரது தனிப்பட்ட விஷயம்" என்று பதில் சொன்னாராம்! ஆனால் எதைக்கண்டாலும் அவர் பயப்படுவாராம். "அவர் ஒரு அழகான, அருமையான, அன்பு நிறைந்த எலி" என்கிறார் ஓஷோ!

நானா நானியைத் தவிர, சம்பு பாபு, மக்கா பாபா, பாகல் பாபா, மஸ்தா பாபா என்ற நான்குபேர் ஓஷோவை உருவாக்குவதில் பெரும் பங்காற்றியிருக்கின்றனர். சம்பு பாபு ஓஷோ படித்த பள்ளிக்கூடத்தின் இணை தாளாளராக இருந்தவர். தனது 50ஆவது வயதில் அவர் ஒன்பது வயது சிறுவன் ரஜனீஷோடு (ஓஷோ) மிகுந்த அன்புடனும் நட்புடனும் இருந்திருக்கிறார். அவர் மறுபிறப்பெடுத்து தனது ஆசிரமத்துக்கு வருவார் எனவும், அவர் ஞானமடையாததற்குக் காரணம் அவரது அறிவுக்கூர்மைதான்(!) எனவும் ஓஷோ கூறுகிறார்!

மற்ற மூன்று பாபாக்களும் சூ·பிகள். சூ·பிகளோடு நெருங்கிய தொடர்பு ஓஷோவுக்கு இருந்திருக்கிறது. தனது 27 வது வயதில் ஒரு சூ·பி அமைப்பில் சேர்ந்துவிடவும் முயன்று பின்பு ஒத்துக்கொள்ளாமல் வெளியே வந்திருக்கிறார். எந்த அமைப்போடும் ஓஷோ என்று தனிப்பட்ட ஆளுமையால் ஒன்ற முடியவில்லை. ஆனால் மூன்று பாபாக்களும் தனிமனிதர்கள். எந்த அமைப்போடும் சம்மந்தப்படாதவர்கள். பைத்தியக்காரர்கள் என்று ஊர் மக்களால் நினைக்கப்பட்டு ஒதுக்கப்பட்டும் அதேசமயம் மரியாதை செய்யப்பட்டும் வந்தவர்கள்.

"அவர் என்ன ஆன்மீகமாக மேம்படுத்தினார். அவர் அருகில் இருக்கும்பொழுது என் உள்ளத்தில் பல மாறுதல்கள் ஏற்பட்டன. அவைகளை இதுவரை நான் அறிந்ததில்லை" என்று மக்கா பாபா பற்றி ஓஷோ கூறுகிறார். அதோடு 21ஆவது வயதில் ஞானமடைந்த பிறகு ஓடிச்சென்று மக்கா பாபாவின் கால்களில் விழுந்து ஆசி பெற்றிருக்கிறார் ஓஷோ. பதிலுக்கு 90 வயது மக்கா பாபாவும் ஓஷோவின் கால்களில் விழுந்தது சூ·பிகளுக்கே உரிய வேறு விஷயம்!

"நான் எதற்காக மக்கா பாபாவிடம் சென்றேன் என்றால், நான் ஞானம் அடைந்ததை இன்னொரு உண்மையான ஞானி அங்கீகரிக்க வேண்டும் என்பதற்காகத்தான்" என்று ஓஷோ கூறுகிறார். இந்த மக்கா பாபா ஓஷோவைத்தவிர வேறு யாரோடும் பேசியதே இல்லையாம்!

நெருங்கிய சொந்தக்காரர்கள் மட்டுமல்ல. வீட்டுவேலை செய்தவர்கள்கூட கற்பனை செய்யமுடியாத அளவுக்கு வித்தியாசமான மனிதர்களாக, ஒரு ரஜனீஷ் ஓஷோவாக முழுமாற்றம் அடைய உதவக்கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள். போரா என்று ஓஷோவின் நானாவிடம் ஒரு பணியாள் இருந்தார். நானா இறந்தபோது அவர்தான் மாட்டுவண்டியை ஓட்டிக்கொண்டு போனவர். மேலே சொன்ன நானி அழாத நிகழ்ச்சி அப்போதுதான் நடந்தது.

நானாமீது மிகவும் பிரியம் வைத்த போராவாவது திரும்பிப் பார்க்கக் கூடாதா என்று ஓஷோ பிற்பாடு கேட்டதற்கு, "இறப்பு என்பது ஒரு தனிப்பட்டவரது சமாச்சாரம். நான் எதற்கு அதைப்பார்க்க வேண்டும்? நீங்களும் நானியும் பேசிக்கொண்டிருந்ததை நான் கேட்டவாறுதான் இருந்தேன். அப்போது கதறி அழ நினைத்தேன். அந்த துக்கத்தை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த அளவுக்கு அவரை மிகவும் நேசித்தேன். ஒரு அனாதை ஆகிவிட்டதுபோல் உணர்ந்தேன். ஆனால் திரும்பிப் பார்க்க விரும்பவில்லை. அப்படிச் செய்திருந்தால் அவர் என்னை ஒருக்காலும் மன்னிக்க மாட்டார்" என்று பதில் சொல்லியிருக்கிறார்! என்ன வினோதம்! இந்த போரா, நானாவின் இறப்பைத் தாங்கமுடியாதவராக அவர் இறந்த கொஞ்ச நாட்களிலேயே தானும் இறந்து போயிருக்கிறார்!

இப்படி ஓஷோவின் வாழ்வில் அவரைச் சுற்றி இருந்த மனிதர்கள் ஒன்று ஞானிகளாக இருந்திருக்கிறார்கள். அல்லது ஞானத்தின் விளிம்பில் நின்றுகொண்டிருந்தவர்களாக இருந்துள்ளார்கள். விஞ்ஞானம், தொழில் நுட்பம், அரசியல் போன்ற விஷயங்களால் மாசு படுத்தப்படாமல் அந்தக்காலத்தில் மனிதர்கள் கசடு, கவடு அற்றவர்களாக வெள்ளையாக கள்ளங்கபடமில்லாமல் இருந்ததுதான் இதற்கெல்லாம் காரணமோ என்று தோன்றுகிறது.

நம்முடைய சொந்த பந்தங்கள் மற்றும் நட்பின் நிலை சொல்லவேண்டியதில்லை. நாமாகவே கொதிநிலையை நோக்கி ஒரு அடி எடுத்துவைத்தாலும் பத்தடி உறைநிலைக்கு நம்மை இழுப்பதாகவல்லவா உள்ளது! ச்சீ ச்சீ இந்த ஞானப்பழம் புளிக்கும் என்று கைவிட்டுவிட்டு ஓட வேண்டியதாகிவிடுகிறது. 99 டிகிரிகளையும் நாமே நமக்கு உருவாக்கிக் கொண்டுதான் நூறாவது டிகிரிக்காக தயாராக காத்திருக்க வேண்டியுள்ளது. நமக்காக எந்த பாபாவும் வருவதில்லை. இமயமலையில் ஒளிந்து கொள்வதற்கும் சூப்பர்ஸ்டார்களுக்கு உதவிசெய்வதற்குமே நமதுகால பாபாக்களுக்கு நேரம் சரியாக உள்ளது. ஓஷோ கொடுத்துவைத்தவர்தான், சந்தேகமில்லை.

(இந்த கட்டுரையில் வரும் மேற்கோள்கள் அனைத்தும் கவிதா வெளியீடான "என் இளமைக்கால நினைவுகள்" என்ற நூலிலிருந்தே தரப்பட்டுள்ளன).

-- திசைகள், பிப்ரவரி, 2004.


|

Monday, April 19, 2004

என்னுடைய 11 படைப்புகள்  

இதுவரை என்னுடைய 11 படைப்புகள் புத்தக வடிவம் பெற்றிருக்கின்றன. அவைகளின் அட்டைப்படங்களைக் கீழே தருகிறேன் :

1. ஹிதாயதுல் அனாம் இலா ஜியாரதில் அவ்லியாயில் கிராம். இது ஒரு தமிழ் நூல்தான். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன்பு நாகூர் பாகர் ஆலிம் அவர்களால் எழுதப்பட்டது. ஆனால் தலைப்பு அரபியில் இருக்கிறது. இறைநேசர்களைப் பற்றிய நூல் இது. நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தேன். முதலில் வெளிவந்த 'என்னுடைய' நூல் இதுதான்.2, நதியின் கால்கள். என்னுடைய முதல் கவிதைத் தொகுப்பு. சென்னை ஸ்நேகா வெளியீடு3. குட்டியாப்பா. சிறுகதை நூல். எனக்கு பெயரும் புகழும் வாங்கித் தந்த நூல். சென்னை ஸ்நேகா வெளியீடு
4. கனவுகளின் விளக்கம். சிக்மண்ட் ·ப்ராய்டின் Interpretation of Dreams என்ற நூலின் சுருக்கமான தமிழாக்கம்.சென்னை ஸ்நேகா வெளியீடு5. பாரசீக கவிஞானி ஜலாலுத்தீன் ரூமியின் கதைகள் கவிதைகள். சந்தியா பதிப்பக வெளியீடு. தமிழாக்கம்.6. உமர்கய்யாமின் ருபாயியாத். ஆரூத் புக்ஸ் வெளியீடு. தமிழாக்கம்.7. கப்பலுக்குப் போன மச்சான். குறுநாவல். குமுதம்.காமில் தொடர்கதையாக வந்தது. சந்தியா பதிப்பக வெளியீடு.
8. திரௌபதியும் சாரங்கப் பறவையும். சிறுகதைத் தொகுப்பு. சந்தியா பதிப்பக வெளியீடு.9. ஏழாவது சுவை. எனது இரண்டாவது கவிதைத் தொகுப்பு.சந்தியா பதிப்பக வெளியீடு.10. அடுத்த விநாடி.சுயமுன்னேற்ற நூல். சபரி வெளியீடு. இந்த நூலும் படித்தவர்களையெல்லாம் எனக்கு நெருங்கியவர்களாக்கிய நூல். எனது அனுபவத்திலிருந்து எழுதப்பட்ட இந்த நூல் மிகவும் விரும்பி அதிக அளவில் வாசிக்கப்படுகின்ற நூல்களில் ஒன்றாகும்.11. இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம். கிழக்கு பதிப்பகம். எனது 20 ஆண்டுகால மன சேமிப்பிலிருந்து உருவான நூல். விபரம் கீழே உள்ளது.
|

Sunday, April 18, 2004

சொல்லால் செத்த புறாக்கள் 

சொல்லால் வந்ததுதான்
எல்லாம்
சிறகுகள் பிடுங்கப்பட்டதும்
சிறகுகள் காயம்பட்டதும்
பறக்க முடியாமல் போனதும்
மறக்க முடியாமல் போனதும்
எல்லாம்...

த்ரோணாச்சாரி என்ற துரோகாச்சாரிக்கு
தட்சிணையாய் கொடுத்த
கட்டைவிரலால் கட்டப்பட்டது
ஒரு சொல்

குரங்கொன்றைக் கொல்ல
மறைந்து நின்று மாமனித
அவதாரம் விட்ட அம்பிலிருந்து
அவதரித்ததொரு சொல்

பெண்ணைச் சோறாக்கி
பகிர்ந்துண்ணுங்கள் ஐவரும் என
பகர்ந்ததொரு பெண்ணிடமிருந்து
பிறந்ததொரு சொல்

மிராசு நிலத்தில் மாடு மேய
மாடுவைத்துப் பிழைத்தவனை
மனித மலம் தின்ன வைத்து
மயங்கி அவன் விழுந்தபோது
மயக்கம் தெளிந்து எழுந்தது
ஒரு சொல்

செத்துப்போகாமல் இருப்பதற்காக
செத்துப்போன மாட்டின் தோலை
உரிக்கப்போன உரிமையாளர்களை
விரட்டிச்சென்று காவல் நிலையத்தில்
அடித்தடித்துக் கொன்றபோது
அலறிச்செத்த வேதனையிலிருந்து
அரும்பி நின்றதொரு சொல்

கதறக்கதற ஏழைக்
கன்னிப்பெண்களை கத்தி முனையில்
கற்பழித்துவிட்டு கெரசின் ஊற்றிக்
கொளுத்திவிட்ட குறிகளிலிருந்து
வடிந்து வந்தது
ஒரு சொல்

கர்ப்பிணிப் பெண்ணின் நிறைவயிறை
கத்தியால் பிளந்து உயிர் மொட்டை
கொடுந்தீயில்வீசி கருகவிட்டதை
மறைந்திருந்து பார்த்த பயவிழிகளில்
நிறைந்திருந்தது ஒரு சொல்

சொல்லை மென்று
சொல்லைத் தின்று
செரிக்க முடியாமல்
செத்துப்போயின நம்
செல்லப் புறாக்கள்

எனினும் இன்றும்
ஞாயிற்றுக் கிழமைகளில்
அலைமோதுகிறது கூட்டம்
அமைதிப் புறாக்களின் சமாதிகளில்
அஞ்சலி செலுத்த.

1:43 PM 27-03-2004

|

முத்தங்கள் முடிவதில்லை 

முத்தம் மாதிரியே இல்லை
நாம் பரிமாறிக்கொண்ட
முதல் முத்தம்

கடைசியில் கற்பழிக்க வேண்டியதாயிற்று
உன் இதழ்களை
அந்த முதல் கணம் இன்னும்
பதிவாகவே இல்லை
எனினும்
உன் முத்தக்கடலில் மூச்சுத் திணறியபோது
உணர்ந்து கொண்டேன்
முத்தங்களுக்கு எதிரானதல்ல உன் இதழ்கள் என

இதழ் உண்டியல்
எவ்வளவுதான் சிறியதாயினும்
விழுந்துகொண்டேதான் இருக்கின்றன
முத்தக்காசுகள்
வற்றுவதே இல்லை
முத்த பக்தி.

என் இதழ்கள் எப்போதும்
பேராசை பிடித்தவை
உன் இதழ்களைப் போலவே
ஆனாலும் ஒரு வித்தியாசம்
எனது பேராசைகள்
வாசல் வழியாக நுழைகின்றன
உனது பேராசைகள்
கொல்லைப்புரத்தில் காத்திருக்கின்றன

முத்தம் கொடுத்தால்
குழந்தை உண்டாயிடுமா?
நீ கேட்டபோதுதான் காரணம் புரிந்தது
உன் கோபத்துக்கும் மௌனத்துக்கும்
முத்தங்கள் யாவும்
காதலின் குழந்தைகள்தானே கண்ணே!

முத்தம்
கோபம்
மௌனம்
மறுபடி முத்தம்

இந்த வரிசைக்கிரமம்தான் உனது எனில்
எனக்கு ஆட்சேபனை இல்லை!
உனது வரிசைதான் எனது வரிசை!

முத்தம் ஒரு மாயம் கண்ணே!
அதைத் தருபவன் தரும்போதே பெறுகிறான்!
பெறுபவள் பெறும்போதே தருகிறாள்!

முத்தம் கொடுத்தால் ஆயுள் குறையுமாம்!
அறிந்தவர் சொல்கிறார்!
அவர் அறியாத ஒன்றைச் சொல்கிறேன் நான் :
முத்தமில்லாத ஆயுள்தான் எதற்கு?

இந்த வாழ்வே எனக்கு
இறைவன் கொடுத்த முத்தம்!
இறப்பின் இதழ்களில் நன்றிக்கடனாக
நான் தருவேன்
பதில் முத்தம்!

முத்தம் ஒரு கேள்வி அல்ல
முத்தம் ஒரு வேள்வி
அது சப்தமல்ல
சந்தம்
இதழ்கள் இணைந்து பிரிவது
இணைபிரியா உறவுக்கு!

உதிர்ந்து விழும் பூக்களும் இலைகளும்
பூமிக்கான முத்தங்கள்
மொட்டுக்கள் மலரும்போது அது
பருவம் தரும் முத்தம்
நறுமணம் கமழும்போது அது
காற்று தரும் முத்தம்

நீ பேசும்போது கிடைக்கும் கரவொலிகள்
கைகள் தரும் முத்தம்
நீ எழுதும்போது வரும் பாராட்டெல்லாம்
வார்த்தை தரும் முத்தம்
நீ இசைக்கும்போது பொங்கும் மகிழ்ச்சியெல்லாம்
இதயம் தரும் முத்தம்

வண்டுகளின் முத்தங்களைப் போன்றதல்ல
குண்டுகளின் முத்தம்
அசோகரும் அலெக்சாண்டரும் கொடுத்ததெல்லாம்
வாட்களின் முத்தம்
அமெரிக்காவின் ஆண்குறியில் பட்ட காயம்
பிறன்மனைவிழைதலுக்கு எதிரான முத்தம்

அரிஸ்டாட்டில் அளித்தது
தத்துவ முத்தம்
இயேசு கொடுத்ததோ
அன்பின் முத்தம்
கிருஷ்ணன் கொடுத்ததோ
காக்கும் முத்தம்
முஹம்மது முகிழ்த்ததோ
முழு உண்மையின் முத்தம்

முத்தங்கள் மறையலாம்
அதன் சப்தங்கள் மாறலாம்
எனினும் முடிவதேயில்லை
இந்த முத்தங்கள் மட்டும்..

(09-10-2003)
|

This page is powered by Blogger. Isn't yours?

Weblog Commenting and Trackback by HaloScan.com