<$BlogRSDURL$>

All writings like poems, stories, articles in Tamil and English

Thursday, March 18, 2004

இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் இது எனது பதினோறாவது புத்தகம். இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும். மனிதர்களில் சிலருக்கும் சொல்ல வேண்டும். ஏன் என்ற விஷயத்துக்கு அப்புறம் வரலாம். முதலில் இந்த புத்தகம் பற்றி.

இஸ்லாத்தைப் பற்றி இந்த உலகம் பல கோணங்களிலும் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறது. புதியபுதிய தவறான பார்வைகளையும் உருவாக்கிக்கொண்டிருக்கிறது! இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் அந்த தவாறான பார்வைகளையும் புரிந்துகொள்ளல்களையும் மாற்றும் வகையில், உண்மையை கூடுதல் குறைவின்றி சொல்லுமாறு ஒரு புத்தகம் எழுதமுடியுமா என்று ராகவன் என்னைக் கேட்டார். முதலில் ரொம்ப தயக்கமாக இருந்தது. காரணம் நான் ஒரு சான்றிதழ் வழங்கப்பட்ட மார்க்க அறிஞனல்ல. எனினும் இஸ்லாத்தின் மீதுள்ள காதலின் காரணமாக நான் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக அவ்வப்போது படித்து என்னுள்ளே போட்டுவைத்திருந்த உண்மைகளை உண்மைப்பெட்டியிலிருந்து தமிழுலகுக்கு எடுத்துக்கொடுப்பதற்கு ஒரு வாய்ப்பு என்று கருதினேன். அடிப்படையான புரிந்துகொள்ளல்கூட இல்லாமல் பலர் இருப்பதையும் நான் அறிவேன். இது என்னைப் பொறுத்தவரை ஒரு மார்க்க சேவைதான். என்னாலும் இதைச்செய்ய முடியும் என்பது எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியான விஷயமாக இருந்தது. ஆனால் இந்த பொறுப்பை நான் நிறைவேற்றித்தருவதற்கு பல தடைகள் இருந்தன.

முதல் தடை நேரம். குறிப்பிட்ட தவணைக்குள் முடித்துத் தரவேண்டும் என்று ராகவன் சொல்லிவிட்டதால் கிட்டத்தட்ட ஒரு ஐந்து மாதங்கள் கடுமையாக உழைத்தேன் என்று சொல்லலாம். இரவு முழுவதும் கணிணியில் உட்கார்ந்துவிடுவேன். இரவு பத்துமணி வாக்கில் உட்கார்ந்தால் காலை ஆறு அல்லது ஏழுக்குத்தான் எழுவேன். தூக்கமெல்லாம் அதன் பிறகுதான். சரி இதுபோதும் என்று புத்தகத்தை முடித்து ராகவனுக்கு அனுப்பிவிட்டு கொஞ்ச நாள் கழித்து என்ன ஒரு இரு நூறு பக்கம் வருமா என்று கேட்டால் கிட்டத்தட்ட 600 பக்கங்கள் வருவதாகச் சொன்னபோது நம்பக்கூட முடியவில்லை.

இரண்டாவது தடை பயம். உண்மையைச் சொல்கிறேன் என்ற சாக்கில் யாருடைய மனதையும் புண்படுத்திவிடுகின்ற வாய்ப்பு உண்டு. என் எழுத்தில் பொதுவாக என்னையறியாமல் எழுத்து வேகத்தில் வந்து விழுகின்ற கிண்டல் சிலரை புண்படுத்திய அனுபவமும் எனக்குண்டு. அப்படிப்பட்ட தவறுகள் எதுவும் நிகழாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

மூன்றாவது பிரச்சனை சொல்லும் விஷயங்களுக்கான ஆதார நூல்களான திருக்குர் ஆனையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாய்மொழியான ஹதீதுகளையும் பிரதான ஆதாரங்களாக காட்டவேண்டும். ஏனெனில் இஸ்லாத்தில் சொல்லப்படும் விஷயங்களுக்கு இவை இரண்டிலிருந்தும் ஆதாரங்கள் காட்டமுடியாவிட்டால் அது இஸ்லாத்தில் இல்லை என்றுதான் அர்த்தம். இதில் என்ன பிரச்சனை என்கிறீர்களா? இதில்தான் அதிகம் பிரச்சனை உள்ளது. சிந்தனைப்பள்ளிகள்தான் -- schools of thought -- பிரச்சனை.

இன்று முஸ்லிம்களுக்கு மத்தியிலே ஒற்றுமை குலைந்து போவதற்குக் காரணமே காளான்களைப்போல முளைத்துள்ள சிந்தனைப்பள்ளிகள்தான். இதில் என் சிந்தனைக்கு உகந்தது எதுவோ அதிலிருந்துதான் நான் எடுக்க முடியும். இறைவனும் அவனுடைய தூதரும் சொன்னது ஒன்றுதான் என்றாலும் அதற்கான விளக்கங்களில்தான் பிரச்சனையே வருகிறது. எனினும் எல்லாப் பள்ளிகளும் ஒத்துக்கொள்ளும் விஷயங்களையே எனது புத்தகம் பேசுவதால் இதிலும் ஒன்றும் வித்தியாசமில்லாமல் பார்த்துக்கொள்ள முடிந்தது. உதாரணமாக ஒரு முஸ்லிம் ஐந்து வேளை தொழவேண்டும் என்பதை அனைத்துப்பள்ளிகளும் ஒத்துக்கொள்ளும். எப்படி, எவ்வளவு தொழவேண்டும் என்பதில் விவாதங்கள் எழலாம்.

எனினும் முடிந்தவரை விருப்பு வெறுப்பு இன்றி, நான் கொண்டுள்ள சிந்தனைக்கு எதிர் நிலையில் உள்ள பள்ளிகளின் புத்தகங்களையும் படித்துப்பார்த்தே நான் ஒரு முடிவுக்கு வரவேண்டியிருந்தது. ஒரு வெளிப்படையான உதாரணம் சொல்ல வேண்டுமெனில் பி.ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் இஸ்லாத்துக்கு தரும் விளக்கங்களில் பல என்னால் ஒத்துக்கொள்ள முடியாததாக உள்ளன. அவருடைய சிந்தனையில் அடிப்படையிலேயே கோளாறு உள்ளது, ஆழமாக எதையும் அவரால் பார்க்க முடியவில்லை என்று நான் நினைக்கிறேன். என்றாலும் எங்கேயெல்லாம் நான் அவரை ஏற்றுக்கொள்ள முடியுமோ அங்கேயெல்லாம் அவர் சொல்வதையும் பதிவு செய்திருக்கிறேன். அவருடைய நூல்கள் சிலவற்றிலிருந்து மேற்கோள்களும் கொடுத்துள்ளேன்.

என் மண்டைக்குள்ளிருக்கின்ற விஷயங்கள் போதாது. முக்கியமான தகவல்களுக்கான நூல்களும் வேண்டும். இந்த இடத்தில் ஓர் அனுபவத்தை சொல்லிவிட நினைக்கிறேன். பெண்களைப் பற்றிய ஒரு பகுதியில் ஷாபானு வழக்கைப் பற்றியும் அதில் சுப்ரீம்கோர்ட் செய்த தவறுகளைப் பற்றியும் விரிவாக எழுத நினைத்தேன். ஆனால் எனக்கு அதுவரை தெரிந்திருந்த தகவல்கள் போதுமானதாக இல்லை. இதற்காக நான் த.மு.மு.க. தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்வை சந்தித்தேன். எனக்குத் தெரிந்ததைவிட அவ்வளவு அதிகமாக அவருக்கும் தெரியவில்லை என்று அவரிடம் பேசியபோது தெரிந்துகொண்டேன். ஆனாலும் அவர் எனக்கு அருமையான நான்கு நூல்களைக் கொடுத்து உதவினார்.

என்ன செய்வது இறைவனே என்று யோசித்துகொண்டிருந்தபோது என்னோடு பணிபுரியும் சர்வதுல்லாஹ் என்ற நண்பன் ஒரு நாள் என்னிடம் வந்து, "இந்த நூல் உனக்குத் தேவைப்படுமா பார்" என்று சொல்லி ஒரு நூலைக்காட்டினான். அந்த நூலின் தலைப்பு "How Wrong the Supreme Court in Shaw Bano Case?"! இப்படி உதவி செய்த இறைவனுக்கு நான் எப்படி நன்றி செய்ய முடியும்? இந்த நூலை எழுத இறைவனே என்னைப் பணித்ததாகப் புரிந்துகொண்டேன். முழு வேகத்துடன் இயங்க ஆரம்பித்தேன்.

இந்த நூல் யாருக்கு? எல்லாருக்கும். முக்கியமாக முஸ்லிம் அல்லாதவர்களுக்கு. என்றாலும் முஸ்லிம்களிலேயே பலருக்கு இந்த தகவல்கள் போய்ச்சேராமல்தான் இருக்கின்றன. திருக்குர்ஆன் என்பது ஒரு மனிதன் எழுதிய புத்தகமல்ல, அது இறைவனுடய வேதம்தான் என்பதற்கு ஒரு இரண்டு ஆதாரம் காட்ட முடியுமா என்று ஒரு முஸ்லிமைக் கேட்டுப்பாருங்கள் தெரியும், எந்த அளவுக்கு அவர்களுக்கு மார்க்க அறிவு இருக்கிறது என்று. இந்த நூலில் ஒரு 100 பக்க அளவுக்கு இறைவனுடைய வேதம்தான் என்பதற்கான ஆதாரங்களை நான் எடுத்துக்காட்டியுள்ளேன்.

தீவிரவாதம் என்பது ஏதோ இஸ்லாத்தோடு சம்மந்தப்பட்டது என்று பலர் நினைத்துக்கொண்டுள்ளனர். பத்திரிக்கைகளும் ஊடகங்களும் அப்படித்தான் நினைக்கவைக்கின்றன. இஸ்லாத்துக்கு எதிரான தலைவர்களும் அப்படித்தான் பேசிவருகின்றனர். ஆனால் உண்மை என்ன? உண்மையில் ஜிஹாத் என்பது என்ன? என்று மிகத்தெளிவாக இந்த நூலில் நான் எடுத்துக்காட்டியுள்ளேன். வன்முறைக்கும் இஸ்லாத்தும் சம்மந்தமில்லை என்பதை நிரூபித்துள்ளேன்.

பெண்களுக்கு இஸ்லாத்தில் உரிமைகள் இல்லை அல்லது போதிய அளவு தரப்படவில்லை என்றும் ஒரு கருத்து உள்ளது. இது எந்த அளவு கற்பனையான குற்றச்சாட்டு என்பதையும் மற்ற சமுதாயங்களில் கற்பனை செய்துகூட பார்க்காத உரிமைகளையெல்லாம் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியிருப்பதையும் போலிப்பெண்ணியம் பேசிவிட்டு வாபஸ் வாங்கிக்கொள்ளும் கவிஞர்களும் வீண் விவாதம் செய்யும் 'அறிவுஜீவி'களும் உணர்ந்துகொள்ளுமாறு ஆதாரங்களோடு நிரூபித்துள்ளேன்.

இஸ்லாத்தைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் என்று நான் நினைப்பவர்களிடத்தில் நூலை முழுக்க படிக்கக் கொடுத்து அவர்கள் சொன்ன நியாயமான விமர்சனங்களின் தெளிவில் இந்த நூலை அமைத்துள்ளேன்.

இஸ்லாத்தைப் பற்றிய அற்புதமான பல நூல்கள் ஆங்கிலத்திலும் உர்துவிலும் தமிழிலும் இருக்கின்றன என்றாலும் அவற்றையெல்லாம் தேடித்தேடி படிக்க வேண்டியிராமல் வாழைப்பழத்தை எடுத்து, தோலையும் நானே உரித்து உங்களிடம் கொடுத்துள்ளேன். எளிய அறிமுகம் என்ற என் இந்த நூலைப் படித்துவிட்டால் அப்படிப்பட்ட ஆழமான, உண்மையான நூல்களில் ஒரு நூறு நூல்களை நீங்கள் படிக்க வேண்டியிருக்காது என்று நம்பிக்கையாகச் சொல்வேன். இது என்னைப் பிழிந்து எடுத்த புத்தகம். எளிய அறிமுகமே 600 பக்கமா என்று ஒரு நண்பர் கேட்டார். எளிமை பக்கங்களின் எண்ணிக்கைக்காக அல்ல. . தமிழ் தெரிந்திருந்தால் போதும். யாரும் புரிந்துகொள்ளலாம் என்று சொல்லும் விதத்தில் எழுத முயற்சி செய்திருக்கிறேன்.. இன்னும் இரண்டொரு மாதங்களில் இன்ஷா அல்லாஹ், வெளிவந்துவிடும்.
|

Wednesday, March 10, 2004

நீயும் நானும் 

நா செத்துப் போயிட்டதா
நெனச்சுக்குங்கன்னு
ரெண்டு வருஷம் கழிச்சு சொன்ன
உன் குரலைக் கேட்டுத்தான் எனக்கு
உயிரே வந்தது.

-- நாகூர் ரூமி
2:20 AM 04/03/04
|
|

This page is powered by Blogger. Isn't yours?

Weblog Commenting and Trackback by HaloScan.com